அல்குர்ஆன் கூறும் விசித்திர சம்பவங்கள்
நபிமார்கள் சரித்திரங்களைப் படிப்பதனால் மனசாந்தி பெறுவதாக திருக்குர்ஆன் கட்டியம் கூறுகின்றது. நபிமார்களைப் பற்றிக் கூறுவது வணக்கம் என்றும், ஸாலிஹீன்களின் சரித்திரங்களைக் கூறுவது குற்றப் பரிகாரம் என்றும் ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள் கூறியுள்ளார்கள்.
இந்த வகையில் திருக்குர்ஆனில் கடந்தகால நபிமார்களின் வரலாற்றையும், அவர்களின் அற்புதங்களையும், நபிமார்களுக்கெதிராக கிளர்ச்சி செய்தவர்களின் வரலாறுகளையும், அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா வழங்கிய தண்டனைகளையும், படிப்பினையூட்டும் சிறுகதைகளையும் திருக்குர்ஆன் விரிவாகவும், சுருக்கமாகவும் கூறுகின்றது. இவ்வாறு திருக்குர்ஆனில் வரும் கதைகளின் ஒரு தொகுப்பு தமிழில் இதுவரை எழுதப்படவில்லை. இக்குறையை நீக்கும் பொருட்டு புஷ்றாவில் “திருக்குர்ஆன் கூறும் அற்புதக் கதைகள்“ எனும் தலைப்பில் ஒரு தொடராக வெளிவந்ததை இங்கு உங்களுக்காக தருகின்றோம்.
01. அற்புதக் கோல்
ஆதிபிதா நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் சொர்க்கத்தில் படைக்கப்பட்டு அங்கேயே வாழ்ந்து வந்தார்கள்,தடை செய்யப்பட்ட கனியை உண்ட காரணத்தால் சொர்க்கத்திலிருந்து பூமிக்கு இறக்கப்பட்டார்கள். சொர்க்கத்திலிருந்து பூமிக்கு வரும்போது 01. அகில் கட்டை 02. இஞ்சி இலை 03. ஹஜறுல் அஸ்வத் கல் 04.மூஸா அலைஹிஸ்ஸலாமிடமிருந்த அஸாக் கோல் 05. சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அணிந்திருந்த மோதிரம் ஆகிய ஐந்து கொருட்களையும் உடன் கொண்டு வந்தார்கள்.
ஆதாரம் : தப்ஸீர் ஸாவி, பாகம் - 01, பக்கம் - 36
ஹளரத் ஆதம் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கொண்டுவந்த அஸாக் கோல் நபிமார்களின் மூலமாக நபி சுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களை வந்து சேர்ந்தது பிர்அவ்னோடு ஏற்பட்ட தகறாறினால் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் எகிப்தைத் துறந்து மத்யனுக்கு ஹிஜ்ரத் சென்றார்கள்.
மத்யன் சென்ற நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அங்கு வாழ்ந்துகொண்டிருந்த சுஐப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் திருநிறைச் செல்வியான “ஸப்றா“ நாயகியை மணம் முடித்தார்கள்.
பத்து ஆண்டுகள் மத்யனில் தங்கியிருந்த நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் இக்காலப்பகுதியில் சுஐப் அலைஹிஸ்ஸலாம் மூலம் மூஸா அலைஹிஸ்ஸலாம், அவர்களின் ஆட்டை மேய்த்துக் கொண்டிருந்தார்கள். இக்காலப்பகுதியில்தான் இந்த அற்புதக்கோல் நபி சுஐப் அலைஹிஸ்ஸலாம் மூலம் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்டது. (பத்து முளம் நீளம் கொண்ட இக்கோலின் தலைப்பகுதியில் இரு கிளைகள் இருந்தன. இதி்ல் பல்வேறு அற்புதங்கள் வெளியாயின.)
பத்து ஆண்டுகள் மத்யனில் தங்கியிருந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு தாயைப் பார்க்க வேண்டும் என்ற ஆசை ஏற்பட்டது. அதனால், தனது அருமை மனைவியை அழைத்துக்கொண்டு எகிப்தை நோக்கி வந்தார்கள். வரும் வழியில் “துஆ“ என்ற இடத்தில் வைத்து மூஸா அலைஹிஸ்ஸலாத்துடன் அல்லாஹுத்தஆலா உரையாடினான். இவ்வுரையாடலை திருக்குர்ஆனில் அல்லாஹுத்தஆலா இப்படிக் கூறுகின்றான்.
“மூஸாவே! உமது வலக்கரத்தில் இருப்பது என்ன? (என்று இறைவன் கேட்டான்) அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள். இது, எனது கோல், இதனால் ஊன்றிக் கொள்வேன். இதன் மூலம் ஆடுகளுக்கு தளைபறிப்பேன். இன்னும் இதில் எனக்கு பல்வேறு பயன்கள் உண்டு“ என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் - 20 : 17,18)
பல்வேறு பயன்கள் உண்டு என்று மூஸா அலைஹிஸ்ஸலாம் குறிப்பிட்டவற்றில் சில பயன்பாடுகளை முபஸ்ஸிரின்கள் கூறியுள்ளார்கள். அவற்றில் சில வருமாறு.
01. பாலைவனத்தில் தோழன்போன்று துணையாக இருத்தல்.
02. கோலுடன் உரையாடுவதன் மூலம் மன அமைதி பெறல்.
03. பகலில் மரமாகி நிழல் கொடுத்தல்.
04. கோலின் தலைப்பகுதியிலிருந்து இரவில் வெளிச்சம் பெறல்.
05. எதிரிகள், விஷ ஜந்துக்களை தாக்குதல்.
06. கிணற்றில் நீர் அள்ளும்போது, கோல் கயிறாகவும் அதன் தலைப்பகுதி வாளியாகவும் மாறல்.
07. அவசியம் ஏற்படும்போது கோல் மரமாகி விரும்பிய கனியை வழங்குதல்.
08. நிலத்தில் தட்டுவதன் மூலம் நீர் ஊற்றுக்களை வெளிப்படுத்தி நீர் பெறல்.
ஆதாரம் : தப்ஸீர் மதாரிக், பாகம் - 03, பக்கம் - 50
எகிப்து மீண்ட மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் கட்டளைப்படி கொடுங்கோலன் பிர்அவ்னுக்கு இஸ்லாத்தின்பால் அழைப்பு விடுத்தார்கள். பிர்அவ்ன் கர்வம் கொண்டான். தன் அரண்மனையில் உள்ள சூனியக் காரர்களை அழைத்து மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சவால் விடுத்தான். இச்சவாலை ஏற்று மூஸா அலைஹிஸ்ஸலாம் களம் இறங்கினார்கள்.
களமிறங்கிய மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு கண்ணியமும் பலமும் சேர்க்கும் வண்ணம் அல்லாஹுத்தஆலா அன்னாரின் கோலின் மூலம் மூன்று அதி அற்புதங்களை வெளிப்படுத்தினான். இதனை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் பிரஸ்தாபிக்கின்றது.
போட்டியைப் பார்வையிடுவதற்காக இலட்சக்கணக்கான மக்கள் மைதானத்தை நிறைத்து நின்றனர். களத்தின் நடுவில் ஒரு பக்கம் ஏராளமான சூனியக்காறர்கள். மறுபக்கம் தனிமனிதனாக மூஸா அலைஹிஸ்ஸலாம் போட்டியை ஆரம்பிக்கமுன் சம்பிரதாய பூர்வமாக போட்டியை முதலில் நீங்கள் ஆரம்பிக்கின்றீர்களா? அல்லது நாங்கள் ஆரம்பிக்கட்டுமா? என்று பிர்அவ்னின் சூனியக்காரர்கள் கேட்டார்கள். நீங்களே ஆரம்பியுங்கள் என்று மூஸா அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்.
சூனியக்காறர்கள் தங்கள் கையிலிருந்த கயிற்றை பிர்அவ்னின் மகத்துவம் கூறி களத்தில் எறிந்தனர். அவை ஒவ்வொன்றும் பாம்பாக மாறி களத்தை சுற்றி வலம்வரத் தொடங்கியது. சீறிப்பாயும் சர்ப்பத்தைக் கண்ட பார்வையாளர்கள் அச்சத்தால் பதறிப் போயிருந்தனர். அங்குமிங்கும் ஓடி ஒழியத் தொடங்கினர். மைதானம் எங்கும் பீதியும், பரபரப்பும் காணப்பட்டது. தனது சூனியக்காரர்களின் வித்தையில் பெருமிதம் கொண்டு பிர்அவ்ன் ஆனந்தக்களிப்பின் உச்சிக்கே சென்றான்.
அமைதியாக அனைத்தையும் அவதானித்துக்கொண்டிருந்த மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வின் ஆணைப்படி கையிலிருந்த அஸாக்கோலை களத்தில் வீசினார்கள். கோல் பிரமாண்டமான பாம்பாக மாறி களத்திலிருந்த பாம்புகள் அனைத்தையும் விழுங்கி விட்டது.
இந்த அற்புதத்தின் நிஜத்தன்மையை விளங்கிக் கொண்ட சூனியக்காறர்கள் போட்டியை மேலும் தொடராமல் தங்களது தோல்வியை ஏற்றுக்கொண்டு அவர்கள் யாவரும் ஸஜதாவில் விழுந்து உரத்த தொனியால் “ஹாறூன், மூஸா ஆகிய இருவரின் நாயனை ஈமான் கொண்டோம்“ என்று முழக்க மிட்டனர். இதனை திருக்குர்ஆன் இவ்வாறு இயம்புகின்றது.
“மூஸாவே! நீர் (கயிற்றை) எறிகின்றீரா? (அல்லது கயிற்றை) எறிகின்றவர்களில் முதலாவதாக நாங்கள் இருக்கட்டுமா? என்று (சூனியக் காறர்கள்) கேட்டனர்“ அதற்கவர் அவ்வாறன்று! நீங்களே (முதலில்) எறியுங்கள் என்று (மூஸா) கூறினார். (அவர்கள் கயிற்றை எறியவே) அவர்களுடைய கயிறுகளும்,அவர்கள் தடிகளும் அவர்கள் சூனியத்தால் (பாம்புகளாகி) நிச்சயமாக நெளிந்தோடுவது போன்று அவருக்குத் தோன்றியது. அப்போது மூஸா தம் மனதில் அச்சம் கொண்டார். (மூஸாவே) நீர் பயப்படவேண்டாம். நிச்சயமாக நீர் தாம் மேலோங்கி நிற்கின்றீர் என்று நாம் சொன்னோம்.
இன்னும் உமது வலது கையில் இருப்பதை நீர் கீழே எறியும், அவர்கள் செய்த(சூனியங்கள்யா)வற்றையும் அது விழுங்கி விடும். அவர்கள் செய்தது சூனியக் காறர்களின் சூழ்ச்சியேயாகும். ஆகவே சூனியக்காறர்கள் எங்கு சென்றாலும் வெற்றி பெற மாட்டார்கள். (என்று கூறினோம்.)
மூஸா அலைஹிஸ்ஸலாம் வெற்றி பெற்றதும், சூனியக்காறர்கள் ஸூஜுது செய்தவர்களாக வீழ்ந்து ஹாறூனுடைய, மூஸாவுடைய இறைவன் மீது நாங்கள் ஈமான் கொண்டோம் என்று கூறினார்கள்.
(அல்குர்ஆன் - 65 : 70)
02. கோலால் தட்டி நீரை வெளிப்படுத்தல்
இஸ்ரவேலர்களின் பூர்வீகம் “ ஸாம்“ பிரதேசமாகும். நபி யூஸுப் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆட்சிக் காலத்தில் தான் இவர்கள் எகிப்தில் குடியேறினார்கள். “ஸாம்“ பிரதேசம் “அமாலிக்கா“ சமுகத்தினரின் ஆட்சிக்குட்பட்டியிருந்தது. இவர்கள் அரக்கத்தனமான முரட்டு சுபாவம் கொண்ட காபிர்களாக இருந்தனர்.
பிர்அவ்ன் செங்கடலில் மூழ்கி இறந்த பின் எதிரியின் தொல்லையிலிருந்து நீங்கியிருக்கும்போது வன்காபிர்களான அமாலிக்கா சமுகத்தினரை வென்று “ஸாம்“ பிரதேசத்தை விடுவிக்குமாறு மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு அல்லாஹுத்தஆலா கட்டளைபிறப்பித்தான். அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று ஆறு இலட்சம் இஸ்ரவேலர்களுடன் “ஸாம்“ நோக்கி மூஸா அலைஹிஸ்ஸலாம் பயணமானார்கள்.
ஸாம் பிரதேசத்தின் எல்லையில் அமாலிக்கப்படையினரை எதிர்பாராத விதத்தில் சந்திக்க நேரிட்டது. அமாலிக்க படையினர் மூர்க்கத்தனமாக இவர்களைத் தாக்கினர். சற்றும் எதிர்பாராத இத்தாக்குதலால் நிலை குலைந்த இஸ்ரவேலர்கள் பின் வாங்க தொடங்கினர்.
அல்லாஹ்வின் கட்டளைக்கு எதிராக இவர்கள் செயல்பட்டதனால் அல்லாஹுத்தஆலா இவர்களைத் தண்டித்தான் “தீஹ்“ என்ற இடத்தை சுற்றி நற்பது ஆண்டுகளாகச் சுற்றிக் கொண்டிருப்பதுதான் அல்லாஹ் இவர்களுக்கு வழங்கிய தண்டனையாகும். நீண்டகாலம் “தீஹ்“ என்ற மைதானத்தில் இருந்த இவர்கள் உணவும், நீரும் இன்றி கஷ்டப்பட்டனர்.
பசி எல்லை கடந்ததும் வானத்திலிருந்து உணவுத் தட்டை இறக்கியருளுமாறு மூஸா அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்வைப் பிரார்த்தித்தார்கள். அவர்களின் வேண்டுதலை அங்கீகரித்து, மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு, வானத்திலிருந்து தினமும் “மன்னு ஸவ்வா“ என்ற உணவை இறக்கி வைத்தான். உணவு கிடைத்து பசியை போக்கியவர்களுக்கு குடிக்க நீர் கிடைக்கவில்லை. தாகம் தீர நீரும் வேண்டும் என்று இஸ்ரவேலர்கள் மூஸா அலைஹிஸ்ஸலாமிடம் கேட்க,
தங்களது கரத்திலிருந்த அற்புதப் போலால் பாறையில் அடித்தார்கள். பாறையிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் ஒலித்தோடின. இஸ்ரவேலர்கள் மத்தியில் அப்போது 12 கோத்திரத்தினர் காணப்பட்டனர். இவர்கள் ஒவ்வொருவரும் ஒவ்வொரு ஊற்றை உரிமையாக்கிக் கொண்டனர். இதே ஒழுங்கில் நாற்பது ஆண்டுகள் காலத்தைக் கடத்தினர். இதனை அல்குர்ஆன் இப்படி விபரிக்கின்றது.
“மூஸா தம் சமூகத்தினருக்காகத் தண்ணீர் வேண்டி பிரார்த்தித்தபோது உமது கைத்தடியால் அப்பாறையில் அடிப்பீராக! என நாம் கூறினோம். அதிலிருந்து பன்னிரண்டு நீர் ஊற்றுக்கள் பொங்கி யெழுந்தன. ஒவ்வொரு மனிதரும் அவரவர் நிலையை நன்கு அறிந்து கொண்டனர்“.
(அல்குர்ஆன் - 02 : 60)
03. கடல் பிளத்தல்
மூஸா அலைஹிஸ்ஸலாம் குறிப்பிட்ட காலம்வரை பிர்அவ்னை இஸ்லாத்தின் பக்கம் வரவேண்டும் என்று அழைப்புக் கொடுத்துக் கொண்டே இருந்தார்கள். அவன் மனம் மாறி நல்வழிக்குத் திரும்ப வேண்டும் என்பதற்காக பல்வேறு அற்புதங்களையும் நிகழ்த்திக் காட்டினார்கள். அவன் திருந்துவதற்கு பதிலாக அக்கிரமம் புரியத் தொடங்கினான்.
பிர்அவ்ன், தான் கடவுள் என்றும், என்னையே யாவரும் விசுவாசம் கொள்ள வேண்டும் என்றும் பிரச்சாரம் செய்து கொண்டிருந்தான். இவனின் இந்த வாதத்தை இஸ்ரவேலர்கள் ஏற்கவில்லை. அதனால் இவர்களை பிர்அவ்ன் கொடுமைப்படுத்தினான். கொடுமைகள் எல்லை கடந்து சென்று கொண்டிருந்தன. இச்சந்தர்ப்பத்தில் இவர்கள் அனைவரையும் அழைத்துக் கொண்டு எகிப்து செல்லுமாறு அல்லாஹ்வின் கட்டளை வந்தது. அதன் படி எகிப்து நோக்கிப் பயணமானார்கள்.
இச்செய்தி பிர்அவ்னுக்கு எட்டியது. தனது படைகளுடன் இவர்களை நோக்கி விரைந்தான். அரக்கத்தனம் கொண்ட கொலை வெறி பிடித்த பிர்அவ்னின் படை தங்களை நெருங்கிக் கொண்டிருப்பதை அவதானித்தனர். பின்னால் பிர்அவ்னின் படை, முன்னால் கடல், எங்கும் செல்ல முடியாது பொறியில் மாட்டிக்கொண்டோம் என்று எல்லோரும் திகிலடைந்து பதறிப் போயிருந்தனர். ஆனால் மூஸா அலைஹிஸ்ஸலாம் மட்டும் பதட்டமோ அச்சமோ இன்றி நிம்மதியாக நின்று கொண்டிருந்தார்கள். தங்களது சமுகத்தை ஆசுவாசப்படுத்திக் கொண்டே பயணத்தை தொடர்ந்தார்கள்.
செங்கடலை நெருங்கியதும் அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் தங்களது அற்புதக் கோலால் செங்கடலில் அடித்தார்கள். செங்கடல் பிளந்தது. அவ்வழியால் மூஸா அலைஹிஸ்ஸலாமும்,இஸ்ரவேலர்களும் அச்சமின்றி சென்று மறுகரையை சென்றடைந்தார்கள். செங்கடலை அண்மித்த பிர்அவ்ன், கடலில் பல வழிகள் இருப்பதைக் கண்டான். பிர்அவ்னும், அவன் படையும் அவ்வழியால் சென்றனர். கடலின் மத்தியை அடைந்ததும் கடல் ஒன்று சேர்ந்தது. கடலில் பிர்அவ்னும், அவன் படைகளும் செத்து மாண்டனர். இதனை அல்குர்ஆன் இப்படிக் கூறுகின்றது.
“இவ்விரு கூட்டத்தினரும் ஒருவரையொருவர் கண்டதும், நிச்சயமாக நாம் பிடிபட்டோம்“ என்று மூஸாவின் தோழர்கள் கூறினர். அதற்கு மூஸா அலைஹிஸ்ஸலாம் “ஒருக்காலும் இல்லை. நிச்சயமாக என் இறைவன் என்னுடன் இருக்கின்றான். எனக்கு சீக்கிரமே அவன் வழி காட்டுவான்“ என்று கூறினார்.
“உமது கைத்தடியால் இச்சமுத்திரத்தில் அடியும் என்று மூஸாவுக்கு அநிவித்தோம். (அவ்வாறு அடித்ததும் சமுத்திரம்) பிளந்தது. (பிளவுண்ட) ஒவ்வொரு பகுதியும் வெரும் மலை போன்று ஆகிவிட்டது. மேலும் நாம் மூஸாவையும், அவருடன் இருந்த அனைவரையும் காப்பாற்றினோம். பிறகு மற்றவர்களை (பிர்அவ்னின் கூட்டத்தாரை) நாம் முழ்கடித்தோம். நிச்சயமாக இதில் அத்தாட்சி இருக்கின்றது. எனினும் பெரும் பாலோர் நம்பிக்கை கொள்பவர்களாக இல்லை. நபியே! நிச்சயமாக உம்முடைய இறைவன் (யாவற்றையும்) மிகைத்தோனாகவும், கிருபையுடையவனாகவும் இருக்கின்றான்“.
(அல்குர்ஆன் - 26 : 61,68)
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் அற்புதக் கோலால் வெளிவந்த முக்கிய அற்புதங்களாக இவை கணிக்கப்படுகின்றன. இந்த அற்புதங்களை திருக்குர்ஆன் பல்வேறு இடங்களில் விபரித்துக் கூறுகின்றது. அல்லாஹ்வை நம்பியவர்கள் பாதுகாக்கப்பட்ட விதம் சிந்திப்போருக்கு படிப்பினை தரும் நல்ல பாடமாகும்.
கலீமுல்லாஹ் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடத்தில் சதுரஅடி விட்டமுள்ள ஒரு கருங்கல் இருந்தது. இக்கல்லின் மூலம் நபியவர்களுக்கு இரு அற்புதங்கள் வெளிப்போந்தன. இது பற்றிய விளக்கம் திருக்குர்ஆனில் இடம்பெற்றுள்ளது.
அற்புதம் 01
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் காலத்தில் நிர்வாணமாகக் குளிக்கும் வழக்கமிருந்தது. மக்கள் கூடும் இடங்களில் நிர்வாண கோலத்தில் குளிப்பதை நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் விரும்பவில்லை. இதனால், மக்கள் வழக்கமாகக் கூடும் இடத்தில் குளிப்பதைத் தவிர்த்தார்கள். தனியாக வேறு ஓரிடத்தில் ஒதுங்கி நின்று மானத்தை மறைத்துக் கொண்டு குளித்து வந்தார்கள்.
நபியவர்களின் இச்செயலை இஸ்ரவேலர்கள் விரும்பவில்லை. நபியவர்களின் உடலின் அந்தரங்கப் பகுதியில் ஏதும் வெண்குஷ்டம் போன்ற குறை இருக்கக்கூடும். இதனை மறைப்பதற்காகவேதான் ஒதுங்கி நின்று மானத்தை மறைத்துக் கொண்டு நீராடுகின்றார் என்று சிலர் கதை கட்டினர். காற்று வாக்கில் இப்பழிச்சொல் ஊரெங்கும் பரவியது. எல்லோர் வாயிலும் இதுவே அசைபோடப்பட்டது.
மக்களின் இப்பழிச்சொல் நபியவர்களுக்கு மிக்க வேதனையைக் கொடுத்தது. இப்பழிச்சொல்லிலிருந்து நபியவர்களைப் பரிசுத்தப் படுத்துவதற்கு அல்லாஹுத்தஆலா விரும்பினான். அதற்காக இக்கல்லிலிருந்து இரு அற்புதங்களை வெளிப்படுத்தினான். அதனால் அப்பழிச் சொல் பகலவனைக் கண்ட பனிபோலாய் விட்டது.
ஒரு நாள் வழக்கமாக நீராடும் ஓடைக்கரையில் தனது ஆடையை இக்கல் மீது வைத்துவிட்டு பிறந்த மேனியுடன் குளித்தார்கள். குளித்து முடிந்தபின் கல்லிலிருந்த ஆடையை எடுக்க கல்லிடம் வந்தார்கள். கல் குதித்து ஓடத் தொடங்கியது. கல்லைப் பின் தொடர்ந்து நபியவர்களும் ஓடினார்கள். கல் மக்கள் நடமாட்டமுள்ள எல்லா இடங்களுக்கும் சென்றது. கல்லே! எனது ஆடை! என்று கூறிக்கொண்டு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களும் கல்லைப் பின் தொடர்ந்து ஓடினார்கள்.
தெருவோரமாக நின்று கொண்டிருந்த மக்கள் யாவரும் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் உடல் முழுவதையும் கச்சிதமாகக் கண்டனர். மாசுமறுவற்ற அவர்களின் உடல் அழகைக் கண்டு மக்கள் வியந்தனர். நபியவர்களின் திருமேனியில் குறையேதும் கிஞ்சித்தும் கிடையாதே! என்று எல்லோரும் வாய்விட்டுவிண்டனர். நபியவர்கள் மீது சுமத்தப்பட்ட இப்பழிச்சொல் மொத்தமாக நீங்கிய பின்பே கல் தனது ஓட்டத்திற்கு விடை கொடுத்தது. பின் கல்லிலிருந்து ஆடையை எடுத்து உடுத்துக் கொண்டார்கள். மானம் மறைந்தது பழி நீங்கியது கல்லை தனது சட்டைப் பைக்குள் வைத்துக் கொண்டார்கள்.
ஆதாரம் : புகாரி ஷரீப், பாகம் - 01, பக்கம் - 483 (இந்தியப் பதிப்பு)
தப்ஸீர் றூஹுல் பயான், பாகம் - 01, பக்கம் - 146
இந் நிகழ்ச்சியை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது,
“விசுவாசங் கொண்டோரே! நபி மூஸாவை வேதனை செய்தோர் போன்று நீங்களும் ஆக வேண்டாம். பின்னர் அவர்கள் கூறியதிலிருந்து அல்லாஹ் அவரை நீக்கி வைத்து விட்டான். மேலும் அவர் அல்லாஹ்விடத்தில் பெரும் தகுதியுடையவராக இருந்தார்“
(அல்குர்ஆன் - 33 :69)
02. வது அற்புதம்
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தினரான இஸ்ரவேலர்கள் அல்லாஹ்வின் கட்டளைக்கு வழிப்பட மறுத்ததனால் தீஹ் என்ற இடத்தை நாற்பது ஆண்டுகள் சுற்றவைத்து அவர்களைத் தண்டித்தான்.
இத்தண்டனைக் காலத்தில் நீர்த் தட்டுப்பாடு அவர்களுக்கு ஏற்பட்டது. நபியவர்களிடம் சென்று முறையிட்டனர். தங்களிடமுள்ள கல்லில் தங்களது தடியால் தட்டினார்கள். அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் ஒலித்தோடின. அப்போது இஸ்ரவேலர்கள் மத்தியில் பன்னிரண்டு கோத்திரத்தினர் காணப்பட்டனர். ஒவ்வொருவரும் ஓர் நீர் நிலையை தனதாக்கிக் கொண்டனர். இந் நிகழ்வை திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“மூஸா தம் கூட்டத்தவருக்கு நீர் புகட்டத் தேடிய போது நாம் (அவரிடம்) நீர் உம்முடைய (கைத்) தடியால் இக்கல்லில் அடிப்பீராக!“ எனக் கூறினோம். (அவரடித்தார்) உடனே அதிலிருந்து 12 ஊற்றுக்கள் ஒலித்தோடின. ஒவ்வொரு கூட்டத்தினரும் தாங்கள்,
அருந்தும் (நீர்த்) துறையை அறிந்து கொண்டனர். (அப்பொழுது) அல்லாஹ்வின் உணவிலிருந்து உண்ணுங்கள். இன்னும் பருகுங்கள். மேலும் பூமியில் குழப்பம் செய்கின்றவர்களாக வரம்பு மீறி அலையாதீர்கள் (என்று நாம் கூறியதை நினைவு கூர்வீராக)
(அல்குர்ஆன் - 02 :603)
கருங்கல்லில் பல்வேறு அற்புதங்களை அல்லாஹ் வைத்துள்ளான். சில கற்கள் வெப்பத்தை ஏற்கின்றன. சில மறுக்கின்றன. சில கற்கள் தீயைக் கக்குகின்றன. வேறு சில கற்கள் விஷத்தை உறுஞ்சுகின்றன. விஷஜந்துக்கள் நெருங்க விடாமல் தடுக்கும் கற்களும் உள்ளன. சில கற்கள் இரும்பை ஈர்க்கும் காந்த சக்தி உடையது. இன்னும் சில கற்கள் மன அமைதியைத் தூண்டுகின்றன. இத்தனைக்கும் மேலாக ஹஜறுல் அஸ்வத் கல் பாவக்கறைகளை அழிக்கும் ஆற்றல் பெற்றிருக்கின்றது. நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடமிருந்த அற்புதக் கல் நிலத்தினடியிலிருக்கும் நீரை உறுஞ்சி எடுத்து பல வழிகளில் வெளிப்படுத்தும் ஆற்றல் பெற்றிருப்பதைக் காண முடிகிறது.
மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கும், இஸ்ரவேலர்களுக்கும் பரம விரோதியாக விளங்கிய பிர்அவ்னும் அவன் படையும் செங்கடலில் அழிக்கப்பட்டது பெருத்த ஆறுதலைக் கொடுத்தது. இவர்கள் தொலைந்த மகிழ்ச்சியிலிருக்கும் போது நபிக்கு பின்வருமாறு வஹி வந்தது.
புனித மஸ்ஜிதுல் அக்ஸா பள்ளிவாசல் கொடுங்கோலர்களான “அமாலிக்கா“ சமுகத்தினரின் பிடியில் சிக்கியுள்ளது. அதனை அவர்களிடமிருந்து விடுவிக்க வேண்டும். அதற்காக இஸ்ரவேலர்களை அழைத்துக் கொண்டு உடன் செல்க! இதுவேளை ஆறு இலட்சம் இஸ்ரவேலர்கள் இஸ்லாத்தை ஏற்றிருந்தனர். இவர்கள் அனைவரையும் உடன் அழைத்துக் கொண்டு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் ஜெரூஸலம் நோக்கிப் பயணமானார்கள்.
ஜெரூஸலம் என்ற புனித நகரை நெருங்கியதும் இஸ்ரவேலர்களின் மனம் தளரத்தொடங்கியது. அமாலிக்கர்கள் அசூர பலம் பொருந்திய பராக்கிரமர்கள். இவர்களுடன் மோதுவது இலகுவான விடயமன்று. அதனால், அவர்களுடன் எங்களால் போராட முடியாது. நாங்கள் இங்கேயே தங்கி விடுகின்றோம். நீங்களும் உங்களுக்கு ஆணையிட்ட உங்கள் இறைவனும் சேர்ந்து போராடுங்கள்! என்று நயவஞ்சகத் தனமாக கூறினார்கள்.
கூடவே வந்து கால்வாரி நிற்கும் நயவஞ்சகத் தனமான இஸ்ரவேலர்கள் இழி செயல் கண்டு நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு உச்ச மன வேதனையைக் கொடுத்தது. இதனை அல்குர்ஆன் இப்படி விபரிக்கின்றது.
“அவர் (நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் ) என் சமூகத்தாரே! அல்லாஹ் உங்களுக்கென விதித்த பரிசுத்தமான பூமியில் (இருக்கும் உங்கள் எதிரியுடன் யுத்தம் புரிந்து அதில்) நுழையுங்கள், (அவர்களுக்கு) நீங்கள் புறங்காட்டித் திரும்பாதீர்கள். (புறங்காட்டினால்) நீங்கள் நஷ்டமடைந்தவர்களாகவே திரும்புவீர்கள் என்று கூறினார்கள்“
(அதற்கு) அவர்கள் (மூஸாவை நோக்கி) “மூஸாவே! நிச்சயமாக அதில் பராக்கிரம சாலிகளான ஜனங்கள் இருக்கின்றனர். அவர்கள் அதை விட்டு வெளிப்படும் வரை நாங்கள் அதனுள் நுழையவேமாட்டோம். அவர்கள் அதைவிட்டு வெளிப்பட்டு விட்டால், நாங்கள் தவறாமல் நுழைந்து விடுவோம்“ என்றனர்.
(அவ்வாறு) பயந்தவர்களில் (ஜோஷுவ, காலெப் என்ற) இருவர் மீது அல்லாஹ் அருள் புரிந்தான். அவர்கள் (மற்றவர்களை நோக்கி) நீங்கள் (அவர்கள் பலத்தைப்) பற்றி பயப்படவேண்டாம். அவர்களை எதிர்த்து (அந்நகரத்தின்) வாயில் வரையில் சென்று விடுங்கள். அதில் நீங்கள் நுழைந்த மாத்திரத்தில் நிச்சயமாக நீங்கள் வென்று விடுவீர்கள். நீங்கள் (உண்மை) விசுவாசிகளாக இருந்தால் அல்லாஹ்வை நம்புங்கள் என்று கூறினார்கள்.
(இதன் பிறகும் அவர்கள் மூஸாவை நோக்கி) மூஸாவே! அவர்கள் அதில் இருக்கும் வரையில் ஒருக்காலும் நாங்கள் அதில் வெல்லவே மாட்டோம், நீரும் உம்முடைய இறைவனும் (அங்கு) சென்று (அவர்களுடன்) யுத்தம் புரியுங்கள்! நிச்சயமாக நாங்கள் இங்கேயே உட்கார்ந்து (கவனித்துக்) கொண்டிருப்போம் என்று கூறினார்கள்.
(அதற்கு மூஸா) “என் இறைவனே! நிச்சயமாக என் மீதும் என் சகோதரர் மீதும் தவிர (மற்றெவர்மீதும்) அதிகாரமில்லை, ஆகவே பாவிகளாகிய இந்த மக்களிலிருந்து நீ எங்களைப் பிரித்து விடுவாயாக! என்று கூறினார்கள். அவ்வாறாயின் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட பலஸ்தீன் என்ற அந்த இடம் நாற்பது ஆண்டுகள் வரையில் அவர்களுக்கு நிச்சயமாகத் தடுக்கப்பட்டுவிட்டது. (அதுவரையில்) அவர்கள் பூமியில் தட்டழி(ந்து கெட்டலை)வீர்கள், ஆகவே, இந்தப் பாவிகளான ஜனங்களைப்பற்றி நீர் கவலை கொள்ளாதீர்“ என்று (மூஸாவுக்கு) அல்லாஹ் கூறினான்.
(அல்குர்ஆன் - 5 :21,26)
அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் இஸ்ரவேலர்கள் நாற்பது ஆண்டுகாலம் “தீஹ்“ என்ற சம வெளியில் வெளியேற முடியாமல் தட்டழிந்து திரிந்தார்கள். இச்சோதனைமிக்க காலகட்டத்தில் கடும் பஞ்சம் இவர்களை வாட்டி வதைத்தது. உண்பதற்கு உணவில்லை பருகுவதற்குப் போதுமான நீரும் இல்லை,இரண்டும் கெட்டான் நிலையில் அவர்கள் வாழ்வு சுழன்று கொண்டிருந்தது. இஸ்ரவேலர்கள் படும் துயரம் தாங்காமல் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் வானத்திலிருந்து மன்னு ஸல்வபாவை இறக்கியருளுமாறு அல்லாஹ்விடம் இறைஞ்சினார்கள். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் துஆவை அல்லாஹ் அங்கீகரித்து தினமும் விண்ணிலிருந்து “மன்னு ஸல்வா“ என்ற உணவை இறக்கியருளினான். அதனைப் புசித்து பசியை போக்கினர்.
தாகத்தை தணிப்பதற்காக தங்கள் வசமிருந்த கல்லில் தங்கள் கோலால் தட்டினார்கள். அதிலிருந்து பன்னிரண்டு ஊற்றுக்கள் ஒலித்தோடின. அதனை அருந்தி தாகத்தைத் தீர்த்துக் கொண்டனர். இஸ்ரவேலர்கள் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு சொல்லமுடியாத துன்பங்களை தொடராகக் கொடுத்திருந்தாலும்கூட அவர்கள்மீது அன்பாகவே நபி மூஸா அலைஹிஸ்ஸலாமவர்கள் இருந்தார்கள்.
மன்னு, ஸல்வா
ஆறு இலட்சம் இஸ்ரவேலர்களுடன் ”தீஹ்” என்ற சமவெளியில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் தங்கியிருந்தபோது அல்லாஹுத்தஆலா இவர்களுக்கு இருவகையான ஆகாரங்களை வழங்கினான்.
01. மன்னு
02. ஸல்வா
“மன்னு“ என்பது வெள்ளை நிறத்தினாலான தேனையொத்த திரவம்போன்ற ஒருவகை இனிப்புப்பண்டமாகும். இது தினமும் மழைபோன்று பொழியும். “ஸல்வா“ என்பது சமைத்த ஒருவகை உணவாகும். இது பற்றி அல்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது.
“உங்களுக்காக “மன்னு, ஸல்வா“வை இறக்கிவைத்து நாம் உங்களுக்கு அளித்து வரும் பரிசுத்தமானவற்றை (நாளைக்கென்று பதுக்கி வைக்காமல் தினமும்) உண்ணுங்கள் என்று கட்டளையிட்டோம்., எனினும் நமக்கொன்றும் தீங்கிழைக்கவில்லை, எனினும் தமக்குத்தாமே அவர்கள் தீங்கிழைத்துக் கொண்டார்கள்“
(அல்குர்ஆன் - 2 : 57)
நாளைக்கென்று பதுக்காமல், தினமும் புசித்து முடிக்க வேணடும் என்ற கட்டளையின் பிரகாரம் மன்னு,ஸல்வா தினமும் இறக்கியருளப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் வாக்கில் நம்பிக்கையிழந்த சிலர் பதுக்கத் தொடங்கினர். இதன்பின் விண்ணிலிருந்து மன்னு, ஸல்வா உணவு இறங்குவது தடைப்பட்டது. பதுக்கிய உணவும் மாமிசமும் கெட்டுவிட்டது. இதுபற்றி பின்வருமாறு றஸுலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் குறிப்பிட்டார்கள்.
“இஸ்ரவேலர்கள் இல்லாதிருப்பின் உணவு, கெட்டுப்போகும் நிலை தோன்றியிருக்காது. மன்னு,ஸல்வாவை இவர்கள் பதுக்கிய நாளிலிருந்துதான் இவை கெட்டுப்போக ஆரம்பித்தன. இதற்கு முன் இப்படி ஒரு நிலை இருந்ததில்லை.“
ஆதாரம் : தப்ஸீர் றூஹுல்பயான், பாகம் - 01, பக்கம் - 142
பிரகாசமிக்க கரம்
பிர்அவ்னை நல்வழியின்பால் அழைக்கும்படி நபி மூஸா அலைஹிஸ்ஸலாமவர்களுக்கு அல்லாஹுத்தஆலா கட்டளையிட்டான். அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று பிர்அவ்னின் அவைக்குச் சென்றார்கள். அதுவேளை நபியவர்களுக்கு அல்லாஹ் இருவிதமான அற்புதங்களை வழங்கினான்.
01. புனிதத்தடி
02. பிரகாசமிக்க கரம்
தங்களது கரத்தை தனது கக்கத்தில் வைத்து எடுத்தால் கரம் ஒளிதரும். மீண்டும் அதே கரத்தை கக்கத்தில் வைத்து எடுத்தால் கரம் பழைய நிலைக்கு மீளும், இந்த அற்புதத்தை அல்குர்ஆன் பல இடங்களில் பிரஸ்தாபிக்கின்றது. சூறத்துத் தாஹாவில் சற்று விரிவாக கூறப்பட்டுள்ளது.
“உம்முடைய கரத்தை உமது கக்கத்தில் சேர்த்து வை(த்து எடும்) அது மிக்க பிரகாசத்துடன் மாசற்ற வெண்மையாக வெளிவரும் (இது) மற்றோர் அத்தாட்சியாகும்.“
(அல்குர்ஆன் - 20 : 22)
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு வழங்கப்பட்ட அற்புதங்களில் மகத்தான அற்புதமாக இது கணிக்கப்படுகிறது. நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் புனித கரத்திலிருந்து இரவு பகல் வேறு பாடின்றி கதிரவனைப் போன்றதொரு பிரகாசம் வெளிப்பட்டது என அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் ரழியல்லாஹு அன்ஹுமா கூறியுள்ளார்கள்.
ஆதாரம் : கஸாயினுல் இர்பான், பக்கம் - 453
குரங்குகளாக உரு மாறிய யூதர்கள்
நபிதாவூத் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமூகத்தைச் சார்ந்த பன்னீராயிரம் பேர் அல்லாஹ்வின் கட்டளையை மீறிய காரணத்தால் குரங்குகளாக உரு மாற்றம் செய்யப்பட்டனர். இவர்கள் கடலோரம் அமைந்துள்ள “ஈலா“ என்ற கிராமத்தில் வசித்து வந்தார்கள்.
மறுமையை மறந்து இவ்வுலகமே எல்லாம் என்று வாழ்ந்த இவர்களைச் சோதிக்க வல்ல நாயன் நாடினான். இவர்களின் பிராதான தொழில் மீன்பிடியாகும். சனிக்கிழமை மீன்பிடிப்பது இவர்களுக்குத் தடை செய்யப்பட்டிருந்தது. சனிக் கிழமை அதிகளவு மீன் கரையொதுங்குவதை அவதானித்த இவர்கள் அல்லாஹ்வின் தடையை மீறி மீன்பிடிக்க நாடினார்கள்.
இவர்களின் பேராசையை புரிந்துகொண்ட ஷைத்தான் இவர்களை வழிகெடுப்பதற்கு பின்வரும் ஒரு தந்திரத்தைச் சொல்லிக் கொடுத்தான்.
“கடலிலிருந்து ஒரு கால்வாய் தோண்டி கடலுக்கு வெளியே பெரிய மடுவை ஏற்படுத்துவதால் சனிக்கிழமை அதிகளவு கரையொதுங்கும் மீன்கள் கால்வாய் வழியாக மடுவை வந்தடையும். மீன்கள் மடுவை அடைந்ததும் கால்வாயை மூடிவிட வேண்டும். இவ்வாறு ஒதுங்கிய மீன்களை சனிக்கிழமை பிடிக்காமல், ஞாயிறு பிடிப்பதால் அல்லாஹ்வின் தடையை மீறிய குற்றம் வராது. இதன் மூலம் கணிசமான மீன்கள் கிடைக்கும்! தடையை மீறிய குற்றத்திலிருந்து விடுதலையும் கிட்டும்!
ஷைத்தானி்ன் தந்திரம் தங்கமாக பகட்டியது. உடனே செயலில் குதித்தனர். மடுவுக்குள் மீனை சிக்கவைப்பதும், மீன் பிடிப்பதற்குச் சமன்“ என்பதைப் புரிந்து கொள்ளாத இவர்கள், சனிக்கிழமை மீனை கையால் பிடிக்காவிட்டால் போதும் என்று கற்பனை செய்து கொண்டனர். உண்மையில் இது அல்லாஹ்வின் கட்டளையை மீறும் செயல் என்பதை இவர்கள் அறியவில்லை!
இவர்களின் இந்த அடாத்து செயலை யூதர்களில் பலர் விரும்பவில்லை. இதனால் யூதர்கள் மூன்று கூட்டமாகப் பிரிந்தனர்.
01. வெளிப்படையாக எதிர்ப்பவர்கள்
02. உளமாற வெறுப்பவர்கள்
03. இச்செயலை ஆதரிப்பவர்கள்
வெளிப்படையாக இப்பாதக செயலை எதிர்ப்பவர்கள் இச்செயலை ஆதரிப்பவர்களுடன் அனைத்து வகையான தொடர்புகளையும் நிறுத்திக் கொண்டதுடன், இவர்களைப் பிடிக்கும் அல்லாஹ்வின் தண்டனை தங்களுக்கு அணுகாதிருக்க ஊரின் மத்தியில் ஓர் தடுப்பு மதில் ஒன்றை எழுப்பி போக்குவரத்திற்காக ஒரு சிறு வழியையும் வைத்தனர்.
சனிக்கிழமை மீனைச் சிறைப்படுத்தி மீனைப்பிடிப்போரை தாவூத் நபியவர்கள் எச்சரித்தார்கள், அவர்கள் அதனைக் கண்டு கொள்ளவில்லை. தாவூத் நபி அலைஹிஸ்ஸலாமவர்கள் பொறுமை இழந்தார்கள்.இவர்களைச் சபித்தார்கள். இதன் பின் இவர்கள் வாழ்ந்த பகுதி வெறிச்சோடிக் கிடந்தன. மனித நடமாட்டம் இல்லாதிருப்பதை அவதானித்தவர்கள் தடுப்புச் சுவருக்கு மேலால் எட்டிப் பார்த்தனர். என்ன ஆச்சரியம்!அவர்கள் அனைவரும் குரங்குகளாக உருமாறியிருந்தனர்.
தடுப்புச் சுவரைத் தாண்டி அவர்களைப் பார்க்கச் சென்றவர்களை குரங்குகளாக உருமாறியவர்கள் தங்கள் உறவினர்களை இனங்கண்டு கட்டிப் பிடித்து கதறியழுதனர். ஆனால் உறவினர்கள் குரங்குகளாக உரு மாறியவர்களை இனங்காண முடியாதவாறு தவித்தனர்.
உண்ணவும், பருகவும் முடியாமல் தவித்த இவர்கள், மூன்று நாட்கள் வரை பசியோடும், தாகத்தோடும் இருந்து இறந்து போயினர். இவ்வாறு குரங்குகளாக உருமாறி இறந்தவர்களின் மொத்த எண்ணிக்கை 12,000ஆகும்.
சனிக்கிழமை மீன் பிடிப்பதை வெளிப்படையாக எதிர்த்தவர்களும், மனதால் வெறுத்து ஒதுங்கியவர்களும் இத்தண்டனையிலிருந்து தப்பிக் கொண்டனர்.
ஆதாரம்:தப்ஸீர் ஸாவி,பாகம்- 01,பக்கம்-35
மேற்கண்ட வரலாற்றினை திருக்குர்ஆன் பின்வருமாறு விபரிக்கின்றது,
“மேலும் (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமையில் (மீன்பிடிக்க கூடாது என்றிருந்த வரம்பை) உங்களில் எவர்கள் மீறி விட்டார்கள் என்பதையும், அதற்காக நாம் அவர்ளை நோக்கி “நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குகளாகி விடுக!“ எனக் கூறினோம் என்பதையும் நீங்கள் தெளிவாக அறிந்தேயிருக்கிறீர்கள். இதனை அக்காலத்திலிருந்தவர்களுக்கும், பின்னுள்ளவர்களுக்கும் ஒரு படிப்பினையாகவும்,பயபக்தி (தக்வா)உடையோருக்கு ஒரு நற்போதனையாகவும் நாம் ஆக்கினோம்“.
(அல்குர்ஆன்- 02 : 65,66)
இவ்விவகாரங்களை பின்வரும் திருவசனங்கள் சற்று விரிவாகக் கூறுகின்றன,
“(நபியே!) கடற்கரை ஒரத்திலிருந்த ஓர் ஊர் (ஈலா மக்களை) பற்றி நீர் அவர்களைக் கேளும். (ஓய்வு நாளாகிய) சனிக்கிழமையன்று (மீன் வேட்டையாடக் கூடாதென்று தடுக்கப்பட்டிருந்தும்) அவர்கள் வரம்பு மீறி(மீன் வேட்டையாடி)க் கொண்டிருந்தார்கள். ஏனென்றால் அவைகள் முன்வந்து (நீர் மட்டத்திற்குத்) தங்கள் தலைகளை நீட்டிக் கொண்டிருந்தன. சனிக்கிழமை அல்லாத நாட்களில் அவர்களிடம் (அவ்வாறு) அவை வருவதில்லை. அவர்கள் பாவம் செய்து கொண்டிருந்ததன் காரணமாக அவர்களை இவ்வாறு (மிகக் கடினமான) சோதனைக்குள்ளாக்கினோம்“
(அல்குர்ஆன்- 09 : 163)
“(இதனை அவ்வூரிலிருந்த நல்லோர் அவர்களுக்கு நல்லுபதேசம் செய்து தடை செய்தார்கள். இதனைக் கண்ட) அவர்களில் ஒரு கூட்டத்தினர் (இவர்களை நோக்கி) அல்லாஹ் எவர்களை அழித்துவிட வேண்டுமென்றோ, அல்லது (நாடி) இருக்கின்றானோ அந்த மக்களுக்கு நீங்கள் ஏன் நல்லுபதேசம் செய்கின்றீர்கள்?“என்று கூறினார்கள்.
அதற்கவர்கள் “இதனால் நாம் உங்கள் இறைவனிடம் நம் பொறுப்பிலிருந்து நீங்கிவிடுவதற்காக (நாங்கள் நல்லுபதேசம் செய்கின்றோம்) என்றும், அதனால் (மீன் பிடிக்கும்) அவர்கள் (ஒரு கால்) விலகிவிடலாம்“.என்றும் பதில் கூறினார்கள்.
(அல்குர்ஆன்- 09 : 164)
“அவர்களுக்கு எச்சரிக்கப்பட்டதை அவர்கள் (பொருட்படுத்தாது) மறந்து (பின்னும் மீன்பிடிக்க முற்பட்டு)விடவே பாவத்திலிருந்து விலகி வந்தவர்களை நாம் இரட்சித்துக் கொண்டு வரம்பு மீறியவர்களை அவர்கள் செய்து கொண்டிருந்த பாவத்தின் காரணமாக கொடிய வேதனையைக் கொண்டு தண்டித்துக் கொண்டோம்“.
(அல்குர்ஆன்- 09 : 165)
ஆகவே, தடுக்கப்பட்டிருந்த வரம்பை அவர்கள் மீறவே அவர்களை நோக்கி “நீங்கள் சிறுமைப்பட்ட குரங்குளாகி விடுங்கள்“ என்று நாம் (சபித்துக்) கூறினோம்.
(அல்குர்ஆன் - 09 : 166)
விலை மதிப்பற்ற மாடு
திருக்குர்ஆனிலுள்ள அத்தியாயங்களில் மிகப் பெரியது சூறத்துல் பகறாவாகும். இந்த சூறத்தில் ஒரு காளை மாடு பற்றிய கதை இடம்பெற்றுள்ளது. அதனால், பகறா - காளை என்று இந்த அத்தியாயத்திற்கு பெயர் வந்தது. கதையின் சாரம் பி்ன்வருமாறு...
இஸ்ரவேலர்கள் மத்தியில் ஒரு சாலிஹான மனிதர் இருந்தார். அவரிடம் ஒரு காளைக் கன்று இருந்தது.இவருக்கு வயதுக்கு வராத ஒரு ஆண் குழந்தையும் இருந்தது. தனக்கு மரணம் நெருங்கிவிட்டதென்பதை உணர்ந்த அப்பெரியவர் காளைக் கன்றை காட்டுக்கு அழைத்துச் சென்று, “யா அல்லாஹ்! இந்த காளைக் கன்றை என் மகன் பெரியவனாகும்வரை உன் பாதுகாப்பில் விட்டுச் செல்கின்றேன்“ என்று கூறிவிட்டு காளையை காட்டில் விட்டு வந்து விட்டார். சிறிது காலத்தின் பி்ன் அப்பெரியார் மரணித்து விட்டார்.
காலப்போக்கில் சிறுவன் இளவனானான். தனது தாய்க்கு மிக்க உதவியாளனாக விளங்கினான். பக்திமிக்க இளைஞன் அல்லாஹ்வை அதிகமாக அஞ்சி நடக்கும் ஒருவனாக விளங்கினான், இரவை மூன்றாகப் பிரித்து ஒரு பகுதியில் உறங்குவான். மறுபகுதியில் வணங்குவான், எஞ்சிய பகுதியில் தாய்க்குப் பணி செய்வான். தினமும் அதிகாலை காட்டுக்குச் சென்று விறகு வெட்டிக் கொண்டு வருவான். அதனை விற்று,அதனை மூன்று பங்காக்கி ஒரு பங்கை தனக்கும், மறு பங்கை தனது தாய்க்கும், மூன்றாவது பங்கை தர்மமும் செய்வான்.
ஒரு தினம் மகனைப் பார்த்து தாய் இவ்வாறு கூறினாள்,
“எனதருமை மகனே! உனது தந்தை அநாந்தரமாக ஒரு காளைக் கன்றை உனக்காக விட்டுச் சென்றுள்ளார்.அது இன்ன காட்டில், இன்ன இடத்தில் அல்லாஹ்வின் பாதுகாப்பில் விட்டுச் சென்றுள்ளார். அதனால்,நீர் இன்ன காட்டின் பக்கம் சென்று இவ்வாறு கூறுவீராக!
ஹளரத் இப்றாஹீம், ஹளரத் இஸ்மாயீல், ஹளரத் இஸ்ஹாக்கின் நாயனே! எனது தந்தை உனது பொறுப்பில் விட்டிருந்த காளையை என்னிடம் ஒப்படைத்துவிடு! அது மஞ்சள் நிறமுடையது.கதிரவனின்செங்கதிர் போன்று அதன் தோல் பளபளக்கும்“,இவ்வாறு தாய் கூறியதைக் கேட்ட தனயன் கானகம் சென்றான்.
குறித்த இடத்திற்குச் சென்ற தனயன் தாய் சொல்லிக் கொடுத்த துஆவை ஓதினார். துஆ ஓதியதும் தனயனைத் தேடி காளை விரைவாக ஓடி வந்தது. காளையைக் கைப்பற்றிய தனயன் இல்லம் மீண்டான்.மகனே! இக்காளையை சந்தைக்கு எடுத்துச் சென்று மூன்று தீனாருக்கு விற்றுப் பணம் பெற்று வாரும்!ஆனால், எனது ஆலோசனையின்றி எந்த முடிவும் எடுக்கக் கூடாது என்று தாயானவள் கூறினாள்.உண்மையில் அப்போது ஒரு காளையின் சந்தை விலை மூன்று திர்ஹமாகத்தான் இருந்தது,
காளையை சந்தைக்கு எடுத்துச் சென்றார். அவசரமாக ஒருவர் வந்தார், (உண்மையில் அவர் மனிதர் அல்ல.மலக்காகும்) உனது தாயிடம் ஆலோசிக்காமல் காளையை மூன்று திர்ஹத்தைவி்ட அதிக விலைக்குத் தாருங்கள்! என்று கேட்டார். நீங்கள் மூன்றல்ல,அதைவிட எவ்வளவு கூடுதல் பணம் தந்தாலும் தாயின் அனுமதியின்றி ஒருபோதும் தர முடியாது என்று தனயன் அடித்துக் கூறினான்.
சந்தை முடிந்து இல்லம் வந்ததும் கண்டது யாவற்றையும் தாயிடம் கூறினார். அமைதியாகக் கேட்டிருந்த தாய் புகழ்ந்தாள். மகனே! இது மனிதன் அல்ல! இது மலக்காக இருக்கக் கூடும்! அதனால் அவரிடமே கேள்!காளையை இப்போது விற்கவா? அல்லது விற்க வேண்டாமா? எப்போது விற்பது மிக்க பயனுள்ளதாக அமையும்?
விடிந்ததும் காளையோடு சந்தைக்குச் சென்றார். வானவரும் அங்கு வந்தார். தாய் கூறியபடி அவரிடம் ஆலோசனை செய்தார். இப்போது காளையை விற்க வேண்டாம். எதிர்காலத்தில் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் சமுகத்தினர் அதிக விலை கொடுத்து வாங்குவர். இந்த மாட்டின் தோலின் கொள்ளளவு தங்கம் தர வேண்டும் என்று அவர்களிடம் கேட்க வேண்டும். அவ்வாறு தந்துவிட்டு வாங்கிச் செல்வர் என்று மலக்கு கூறினார்.
சில தினங்களுக்குப் பின், இஸ்ரவேலர்களில்“ஆமில்“என்ற பெயர்கொண்ட ஒரு பெரும் செல்வந்தர் கொலை செய்யப்பட்டார். அவரின் சாச்சாவின் இரு புதல்வர்கள்தான் இக்கொலையைச் செய்து, பாழடைந்த இடத்தில் வீசி விட்டனர். பொழுது புலர்ந்ததும் கொலையாளியைத் தேடினர். எதுவித துப்பும் கிடைக்கவில்லை.
நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் சிலர் சென்று கொலையாளியைப் பற்றி்க் கேட்டனர். ஒரு காளையை அறுத்து, அதன் நாக்கால்,அல்லது வாலால் பிரேதத்தில் அடியுங்கள். அவர் உயிர் பெற்றெழுந்து கொலையாளியை நேரில் கூறுவார் என்று நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் கூறினார்கள்.இதைக்கேட்ட அவர்கள் காளையின் நிறம், வயது, பருவம் மற்றும் அடையாளங்கள் என்ன என்று கேள்விகளுக்கு மேல் கேள்விகளை அடுக்கினர்.இறுதியில் காளையின் முழு விபரத்தையும் கச்சிதமாக விளங்கியபின்,காளையைத் தேட ஆரம்பித்தனர்.
நீண்ட சிரமத்திற்குப் பின் இந்த இளவனிடம் ஒரு காளை இருப்பதாகக் கேள்விப்பட்டனர். உடனே இளவனிடம் வந்து காளையைப் பார்த்தனர். சொல்லப்பட்ட அனைத்து அங்க அடையாளமும் அச்சொட்டாக இருப்பதைக் கண்டு நிம்மதியடைந்தனர். காளையின் தோலின் கொள்ளளவு தங்கத்தைக் கொடுத்து காளையைப் பெற்றுச் சென்றனர்.
காளையை அறுத்து அதன் நாக்கால் அல்லது வாலின் எலும்பினால் பிரேதத்தில் அடித்தார்கள். உடனே கொலையுண்டவர் உயிர் பெற்றெழுந்தார். எனது சொத்தில் ஆசை கொண்டு எனது சகோதரனின் இரு புதல்வர்கள்தான் என்னைக் கொன்றார்கள் என்று கூறியதும் அவர் இறந்து போனார். பி்ன்னர், அவ்விருவரும் கைது செய்யப்பட்டு பழிக்குப்பழி எடுக்கப்பட்டனர். தாய் சொல் கேட்டு நடந்த தனயன் காளையின் தோல் அளவு தங்கத்தைப் பெற்று வீடு சேர்ந்தார்.
ஆதாரம் : தப்ஸீர் ஜலாலைன், தப்ஸீர் ஸாவி
மேற்கண்ட நிகழ்வை முழுமையாக திருக்குர்ஆன் பின்வருமாறு கூறுகின்றது,
“ஒரு காளையை நீங்கள் அறுக்கும்படி அல்லாஹுத்தஆலா உங்களுக்கு மெய்யாகவே கட்டளை இடுகிறான் என மூஸா தன் சமூகத்தார்களிடம் கூறியதை நபியே நினைத்துப் பாருங்கள்“
அவர்கள் “(மூஸாவே!) நீங்கள் எங்களை பரிகாசம் செய்கிறீரா?“ என்றார்கள் (அதற்கு) அவர் “நான்(பரிகாசம் செய்யும்) அறிவீனர்களில் உள்ளவனாவதை விட்டும் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்பைத் தேடுகிறேன்“ என்றார்.
“அ(தன் வய)து என்ன? வென்று எங்களுக்கு அறிவிக்கும்படி எங்களுக்காக உமது இறைவனை நீர் கேளும்“ என்றார்கள். (அதற்கு மூஸா) “நிச்சமாக அது காளைக் கிழடுமன்று, இளங் கன்றுமன்று, இதற்கு மத்திய பருவத்திலுள்ள ரிஷபம் என அவன் (அல்லாஹ்) கூறுகின்றான்“ எனக்கூறி “உங்களுக்கு இடப்பட்ட கட்டளையை நீங்கள் நிறைவேற்றுங்கள்“ என்றார்.
அதற்கவர்கள் “அதன் நிறம் என்ன? என்று அறிவிக்கும்படி எங்களுக்காக நீர் உம்முடைய இறைவனைக் கேளும்“ என்றார்கள், (அதற்கு மூஸா) “அது பார்ப்பவரைக் கவரக் கூடயது. கலப்பற்ற மஞ்சள் நிறமான ரிஷபம்“ என அவன் கூறுகிறான் என்றார்.
அதற்கவர்கள் “அந்த ரிஷபம் எங்களை சந்தேகத்திற்குள்ளாக்குகின்றது. அஃது எது (வேலை செய்து பழகியதா? அல்லவா?) என எங்களுக்கு விபரித்து அறிவிக்கும்படி உம்முடைய இறைவனை நீர் எங்களுக்காகக் கேளும், அல்லாஹ் நாடினால், இனி நிச்சயமாக நாங்கள் (இவ்விஷயத்தில்) நேர்வழி பெற்று விடுவோமெனக்“ கூறினார்கள்.
(அதற்கு மூஸா) “அது பூமியில் உழவடித்தோ, பயிருக்கு நீரிறைத்தோ, கசங்காததும், நல்ல யாதொரு வடுவுமில்லாததுமான ரிஷபம்“ என்று அவன் கூறுகின்றான் என்றார் (அதற்கு) அவர்கள் “இப்பொழுதுதான் நீர் பின்பற்றும் விவரம் கொண்டு வந்தீர்“ எனக் கூறிப் பின்னும் செய்ய மனமில்லாமலே அதனையவர்கள் அறுத்தார்கள்.
“நீங்கள் ஒருவனைக் கொலை செய்துவிட்டுத் (தப்பித்துக்கொள்ள) அதைப் பற்றி நீங்கள் தர்க்கித்துக் கொண்டிருந்த சமயத்தில் (அந்த ரிஷபத்தை அறுக்கும்படி கட்டளையிட்டு, கொலை விஷயத்தில்) நீங்கள் மறைத்துக் கொள்ள விரும்பியதை அல்லாஹ் வெளியாக்கினான்“.
ஆகவே, (அவர்களை நோக்கி) “நீங்கள் (அதனை அறுத்து) அதில் ஒரு பாகத்தைக் கொண்டு(கொலையுண்ட) அவனை அடியுங்கள்“ என நாம் கூறினோம். “(அவ்வாறு அடித்தவுடன் மரணித்தவன் உயிர் பெற்றெழுந்து கொலையாளியை அறிவித்தான், அவன் உயிர்பெற்ற) இவ்வாறே, மரணித்தவர்களை அல்லாஹ் உயிர்ப்பிப்பான் என்பதை நீங்கள் அறிந்து கொள்ளும் பொருட்டு, அவன் தன்னுடைய(ஆற்றலை அறிவிக்கக்கூடிய) சான்றுகளை உங்களுக்கு காட்டினான்“.
(அல்குர்ஆன் - 2 : 67 - 73)
அல்குர்ஆன் கூறும் கதையில் பல்வேறு படிப்பினைகள் பொதிந்துள்ளன. அவற்றில் சிலதை சுருக்கமாக அடியி்ற் தருகின்றேன்.
01. அல்லாஹ்வின் நல்லடியார்கள் விட்டுச்செல்லும் பொருட்களில் நன்மையும், பறக்கத்தும் உண்டு.கதையில் வரும் நபர் ஒரு காளைக் கன்றையே விட்டு்ச் சென்றார். அதில் அல்லாஹுத்தஆலா எண்ணிக்கையற்ற பறக்கத்தை வைத்துள்ளான். ஒரு கன்றின் மூலம் கணக்கற்ற செல்வத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான்.
02. மகனில் இரக்கம் வைத்து காளைக்கன்றை காட்டில் விட்டார். அந்த நல்ல மனிதர். இதன் மூலம் பிள்ளைகளில் இரக்கம் கொள்வதும், பிள்ளைகளுக்காக கொஞ்சம் பொருட்களை விட்டுச் செல்வதும் அல்லாஹ்வின் நல்லடியார்களின் வழக்கமாகும்.
03. பெற்றோரின் நலன் பேணுவோருக்கும், அவர்களுக்குப் பணிவிடை செய்வோருக்கும் அல்லாஹுத்தஆலா அறியாப் புறத்திலிருந்து செல்வத்தை வழங்குவான். அல்லாஹ்வைப் பயந்து பெற்றோருடன் பண்புடன் நடந்துகொண்ட கதையில்வரும் அநாதையை மாபெரும் செல்வந்தனாக அல்லாஹ் ஆக்கியதைப் பாருங்கள்!
04. அல்லாஹ்வின் தீர்ப்பில் விவாதிப்பதும், பரிகாசம் பண்ணுவதும் சொல்லத்தகாத சோதனைக்கு காரணமாக அமையும். இஸ்ரவேலர்களுக்கு ஒரு மாட்டை அறுக்குமாறு மட்டுமே கூறப்பட்டது.ஏதாவது ஒரு காளை மாட்டை அறுத்திருந்தால் விடயம் முற்றுப் பெற்றிருக்கும். ஆனால்,
அவர்கள் அமைதி கொள்ளாமல், கேள்விகளை அடுக்கினார்கள். எப்படியான காளை? அதன் நிறம் என்ன?வேலை செய்து களைத்ததா? இல்லையா? அதன் வயது என்ன? என்று கேட்டதனால் பெரும் சோதனைக்குள்ளானார்கள். இதனால், குறித்த இலட்சணம் உள்ள மாட்டையே அறுக்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டது. காளையின் தோலின் கொள்ளளவு தங்கம் நிறைத்துக் கொடுத்து உலகில் எந்த ஒரு மாட்டுக்கும் இல்லாத அதி உச்ச விலை கொடுத்து வாங்கவேண்டி வந்தது.
05. அல்லாஹ்வின் பாதுகாப்பில் விடப்படும் சொத்துக்களை அல்லாஹுத்தஆலா நிச்சயம் அதனைப் பாதுகாக்கின்றான். அதில், கணக்கற்ற நன்மைகளையும், பறக்கத்துக்களையும் வைக்கின்றான்.
06. அல்லாஹ்வின் பொறுப்பில் தனது பிள்ளைகளையும், குடும்பத்தையும் பாரம்பண்ணினால் அல்லாஹுத்தஆலா நினைத்துப் பார்க்க முடியாதளவு நன்மைகளை அவர்களுக்கு அருளுகின்றான்.
07. அமீறுல் முஃமினீன் ஹளரத் அலி ரழியல்லாஹு அன்ஹு கூறுகின்றார்கள்,
மஞ்சல் நிறத்தினாலான தோல் சப்பாத்து அணிந்தவர் எப்போதும் மகிழ்ச்சிகரமாக இருப்பார்.குறைந்தளவு கவலையே, அவரைத் தொடரும்.திருமறையில் மஞசள் மாட்டைப் பற்றிக் கூறும்போது“பார்ப்பவரைப் பரவசப்படுத்தும்“ என்று கூறியிருப்பது நோக்கத்தக்கது.
08.குர்பானி கொடுக்கப்படும் பிராணி குறையற்றும் பார்ப்பதற்கு அழகானதாகவும் அதிகூடிய விலை கொண்டதாக வுமிருப்பது ஏற்றமாகும்.
மாண்டவர்கள் மீண்டு்ம் உயிர் பெற்றனர்.
கலீமுல்லா நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்கு மூன்று கலீபாக்கள் இருந்தனர். நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வபாத்தான பின் மூன்று கலீபாக்களும் ஒருவர் பின் ஒருவராக நபியானார்கள்.
மூஸா அலைஹிஸ்ஸலாம் வபாத்தான பின் முதலில் நபியானவர் யூஷஃ பின் நூன் அலைஹிஸ்ஸலாம் ஆவார். இரண்டாவது கலீபா ஹளரத் காலப் பின் யூஹ்னா அலைஹிஸ்ஸலாம், ஹளரத் யூஷஃ பின் யோஹ்னா அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வபாத்தான பின் நபியானவர்கள். இவர்களின் மறைவின் பின் மூன்றாவது கலீபாவான ஹளரத் “ஹஸ்கீல்“ அலைஹிஸ்ஸலாம் நபியானார்.
ஹளரத் ஹஸ்கீல் அவர்களுக்கு “இப்னுல் அஜுஸ்“ என்ற புனைப்பெயராலும் இவர்கள் அழைக்கப்பட்டார்கள். ஹளரத் ஹஸ்கீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தாய் கிழவியாக இருந்தார்கள்.அதனால், கிழவியின் மகன் என்று அழைக்கப்பட்டார்கள்.
யஹுதிகளின் கொலைவெறித் தாக்குதல்களிலிருந்து 70,000 நபிமார்களை இவர்கள் முன்நின்று பாதுகாத்தர்கள். பின் அவர்களை தனது பாதுகாப்பில் வைத்துக் கொண்டார்கள். யஹுதிகளின் அரக்கர் கூட்டம் இவர்களையும் கொலை செய்யத் துணிந்தனர். அல்லாஹ்வி்ன் பெரும் கருணையால் பாதுகாக்கப்பட்டார்கள். பின் பல்லாண்டுகள் வாழ்ந்து மக்களை நல்வழிப்படுத்தும் தூய பணியில் ஈடுபட்டார்கள்.
இஸ்ரவேலர்களுள் ஒரு பிரிவினர் ஹளரத் ஹஸ்கீல் அலைஹிஸ்ஸலாம் அவர்களி்ன் நகரத்தில் குடியிருந்தனர். ஒரு தினம் நகரில் வாந்திபேதி பரவியது. அதனால், பலர் இறந்து போனார்கள். மரணத்தை அஞ்சிய இவர்கள் நகரத்தை துறந்து காட்டில் ஓர் ஓடைக்கருகில் இருப்பிடத்தை அமைத்துக் கொண்டனர்.
தண்டனை கொடுக்கும் ஒரு மலக்கை அல்லாஹுத்தஆலா அங்கே அனுப்பிவைத்தான். ஒரு மலையின் பொதும்பில் ஒளிந்துகொண்ட இவர் நீங்கள் அனைவரும் மரணித்து விடுங்கள்! என்று உரத்துக் கூச்சலிட்டார். இக்கூச்சலைக் கேட்ட நோயுற்ற இவர்கள் அனைவரும் இறந்து போயினர். இவ்வாறு இறந்தவர்களின் மொத்தம் 70,000 பேர்.
இறந்தவர்களி்ன் தொகை அதிகமாக இருந்ததினால், அவர்களி்ன் ஈமைக் கிரிகைகளை செய்வதில் அதிகம் சிரமப்பட்டனர். அதனால், அவர்களின் பிரேதங்கள் அடக்கம் செய்யப்படாமல் எட்டு தினங்கள் வரை மைதானத்தில் கவனிப்பாரின்றி கிடந்தது.
பிரேதங்களின் வாடை ஊர் எங்கும் பரவியது. விலங்குகளிலிருந்து பிரேதங்களைப் பாதுகாப்பதற்காக நல்லவர்கள் சிலர் சேர்ந்து மைதானத்தைச் சுற்றி மதில் அமைத்தார்கள். சில நாட்களின் பின் தங்களது சமுகத்தினரை தேடி அவ்வழியால் ஹளரத் ஹஸ்கீல் அலைஹிஸ்ஸலாம் வந்தார்கள். கபன் செய்து அடக்கம் செய்யப்படாமல் நிராதரவாக கிடப்பதையும் கண்டு மனம் நொந்தனர்.
அல்லாஹ்விடத்தில் இரு கரம் ஏந்தி இவ்வாறு இறைஞ்சினார்கள்,
யா அல்லாஹ்! இவர்கள் அனைவரும் எனது சமுகத்தினராவார்கள். அறியாமைத்தனமாக பிழை செய்துள்ளனர். மரணத்திற்கு அஞ்சியே நகரத்தை விட்டும் கானகம் வந்தனர். இவர்கள் யாவரும் எனது நகரத்தைச் சேர்ந்தவர்கள் இவர்களுடன் எனக்கு நல்ல உறவும் இருந்தது! எனது இன்ப துன்பங்களில் இவர்களும் பங்கெடுத்தனர்.
ஐயோ! எனது சமுகம் முழுவதும் மாண்டு போயுள்ளனர். நான் மட்டும் தனித்துவிட்டேன். யா அல்லாஹ்!எனது இந்த சமுகத்தினர் உனது புகழை ஓதினர். உனது ஏகத்துவத்தை ஏற்றனர். உனது கீர்த்தியைப் பாடினர். உன் மகத்துவத்தை பறை சாற்றினர். ஆழ்ந்த கவலைதோய்ந்த மனதுடன் உன்னிடம் பிரார்த்திக்கின்றேன் என்று முறையீடு செய்து கொண்டிருக்கும்போது அல்லாஹ்விடமிருந்து வேகமாக வஹி வந்தது.
“ஓ ஹஸ்கீலே! சிதைந்து கிடக்கும் எலும்புகளைப் பார்த்து, எலும்புகளே! நீங்கள் யாவரும் ஒன்று சேருமாறு அல்லாஹ் உங்களுக்கு கட்டளை இடுகின்றான் என்று கூறும்“ நபியவர்கள் இதைக் கூறியதும் எலும்புகள் அசையத் தொடங்கின. ஒவ்வொருவரினதும் எலும்புகள் ஒன்று சேர்ந்து அதன் அதன் இடத்தில் பொருந்திக் கொண்டன. மீண்டும் வஹி வந்தது.
ஓ ஹஸ்கீலே! மீண்டும் கூறுங்கள்! எலும்புகளே அல்லாஹ்வின் கட்டளைப் பிரகாரம் தசைகளைப் போத்தி்க் கொள்ளுங்கள்! இதைக் கேட்டதும் அவசரமாக எலும்புகள் அனைத்தும் தசைகளைப் போத்திக் கொண்டன. மூன்றாம் முறையாகவும் வஹி வந்தது.
ஓ ஹஸ்கீலே! கூறுங்கள்! பிணங்களே! அல்லாஹ்வின் ஆணையாக நீங்கள் அனைவரும் எழுங்கள் என்றதும் மாண்டுபோன 70,000 பேர் மீண்டும்,
“ஸுப்ஹானக்கல்லாஹும்ம வபி ஹம்திக்க லாஇலாஹ இல்லா அன்த“
என்று கூறிக் கொண்டே உயிர்பெற்று எழுந்தனர். பின், காட்டைத் துறந்து தங்களது சொந்த நகரத்தில் மீண்டு்ம் வந்து குடியேறினர். நீண்ட காலம்வரை வாழ்ந்து அவர்களின் ஆயுட் காலத்தைப் பூர்த்தியாக்கினர்.
மாண்ட இவர்கள் உயிர்பெற்று வாழ்ந்தாலும் பிணவாடை அவர்கள் உடலிலும், அவர்களின் சந்ததிகளி்ன் உடலிலும் வீசிக்கொண்டே இருந்தது. இவர்கள் ஆடை அணிந்தால், அது கபன் உடை போன்று ஆகிவிடும்.கப்றில் அடக்கம் செய்யப்பட்டால், மையித்தின் கபன் துணி எவ்வாறு அழுக்கடைந்திருக்குமோ அவ்வாறே இவர்களி்ன் ஆடையும் அழுக்கடைந்து காணப்படு்ம். இந்த அடையாளங்கள் இவர்களின் சந்ததிகளான யஹுதிகளிடம் இன்றுவரை காணப்படுகின்றன.
ஆதாரம் : தப்ஸீர் ஸாவி, பாகம் - 01, பக்கம் - 101
தப்ஸீர் றூஹுல் பயான் பாகம் - 02, பக்கம் - 277
மேற்படி விந்தையான விடயம் திருக்குர்ஆனில் சூரத்துல் பகறாவில் பின்வருமாறு இடம்பெற்றுள்ளது,
“(நபியே!) மரணத்திற்குப் பயந்து தங்கள் வீடுகளை விட்டு ஆயிரக்கணக்கில், வெளியேறியவர்களை நீர் கவனிக்கவில்லையா?“ அல்லாஹ் அவர்களை நோக்கி “நீங்கள் இறந்து விடுங்கள்“ எனக்கூறி(இறக்கச்செய்து) பின்னர் அவர்களை உயிர்ப்பித்தான். நிச்சயமாக அல்லாஹ் மனிதர்கள் மீது கருணையுள்ளவனாக இருக்கின்றான். எனினும், மனிதர்களில் பெரும்பாலோர் நன்றி செலுத்துவதில்லை“
(அல்குர்ஆன் : 02 - 243)
இஸ்ரவேலர்களின் மேற்படி வியக்கத்தக்க வரலாற்றுக் குறிப்பிலிருந்து பின்வரும் படிப்பினைகளைப் பெறுகின்றோம்.
01. மரணத்தை அஞ்சி எந்த மனிதனும் ஓடித்தப்ப முடியாது. அதனால், மரணத்திற்கு அஞ்சி ஓடுவது அறிவீனமாகும். அல்லாஹுத்தஆலா ஒருவருக்கு மரணத்தை விதித்த நேரத்தில்தான் மரணம் வரும் ஒருவரின் விதிக்கப்பட்ட ஆயுளில் ஒரு நொடி முந்தவும் மாட்டாது. பிந்தவும் மாட்டாது. அதனால்,அல்லாஹ்வின் விதியை ஏற்றுப் பொருந்திக்கொண்டு பொறுமையுடனும், நன்றியுடனும் நடந்துகொள்ளல் வேண்டும்.
02. மேற்படி திருவசனத்தில் முஜாஹிதீன் (போராளி)களுக்கு வழிகாட்டுதல் வழங்கப்பட்டுள்ளது.ஜிஹாதிலிருந்து பின் வாங்கல் அல்லது யுத்த களத்திலிருந்து பாய்ந்து செல்லல், மரணத்தைத் தடுக்கும் வழியாகாது. அதனால், யுத்தத்தில் மன உறுதியுடன் காலூன்றி நின்று போராட வேண்டும். மரணம் ஏலவே விதிக்கப்பட்டு முடிந்த விடயமாகும்.
உரிய நேரத்திற்கு முன் மரணம் நிச்சயம் முந்தமாட்டாது. விதியில் உறுதியான நம்பிக்கை கொண்டோர் சிங்கம் போன்று வீரத்துடன் களத்தில் போராடுவர். கோழைத்தனமோ, அச்சமோ ஒருபோதும் அவர்களை அனுகாது இஸ்லாம் வளர்த்த இந்த தீரத்தினால்தான் ஆயிரமாயிரம் இறைவிரோதிகளை முஸ்லிம்கள் சரித்தார்கள். அதனால் வெற்றிகள் அவர்கள் காலடிதேடி வந்து அவர்களின் பாதங்களை முத்தமிட்டன.
ஒவ்வொரு யுத்தத்திலும் வெற்றி வாகை சூடி மகத்தான கூலிகளையும், நிறைவான கொள்கைகளை(ஙனீமத்) பொருட்களையும் சுருட்டிக்கொண்டனர்.
மன்னர் ஷாஹ் அப்துல் மாலிக் பின் மர்வானின் ஆட்சிக்காலத்தில் சிரியாவில் கொலறா பரவியது. மன்னர் மரணத்திற்கு அஞ்சி குதிரையிலேறி நகரத்தை விட்டும் வெளியேறினார். வெளியேறும்போது தனது முக்கிய அடிமைகளையும், சில இராணுவத்தினரையும் சேர்த்துக் கொண்டார். மரணத்தின் அச்சத்தால் மன்னர். பாதத்தை மண்ணில் பதிப்பதற்கு பயந்தார். அதனால் குதிரையின் மேலே தூங்கினார்.
பயணத்தின் நடுவில் ஓர் இரவு மன்னருக்குத் தூக்கம் வரவில்லை. தனது அடிமையை அழைத்து தனக்கு சுவாரஸ்சியமான கதை ஒன்று சொல்ல வேண்டினார். மதியூகியான அடிமை மன்னருக்கு உபதேசம் பண்ண தங்கமான தருணம் கிடைத்து விட்டது. என்று புளகாங்கிதமடைந்தவள் பின்வரும் இக்கதையைக் கூறினாள்.
“நரி ஒன்று உயிருக்குப் பாதுகாப்புத்தேடி சிங்கத்திற்கு சேவகம் செய்து வந்தது. சிங்கத்தின் மீதுள்ள அச்சத்தினால் எந்தவொரு விலங்கும் நரியை நெருங்குவதில்லை. நரி அச்சமின்றி மிக நிம்மதியுடன் சிங்கத்தோடு வாழ்ந்து வந்தது. ஒரு நாள் ஒரு வேட்டை மிருகம் நரியை விரட்டியது. நரி ஓடிச் சென்று சிங்கத்திடம் அடைக்கலம் தேடிக் கொண்டது.
வேட்டைப்பிராணி நரியை விரட்டியபடியால், சிங்கம் நரியை அணைத்துக்கொண்டு காட்டில் விட்டுவிட்டு வந்தது. சிங்கத்தை விட்டு பிரிய மனமி்ல்லாத நரி சிங்கத்திடம் பாதுகாப்பை வேண்டியது. நரியைப் பார்த்து சிங்கம் பேசியது.
நரியாரே! பூமியிலுள்ள விலங்ககுளிலிருந்து உன்னை என்னால் பாதுகாக்க முடியும். ஆனால்,வானத்திலிருந்து தாக்குதல் நடத்துவனிடமிருந்து என்னால் எப்படி உனக்குப் பாதுகாப்புத் தர முடியும்?என்று சிங்கம் கூறிவிட்டு இடம் நகர்ந்தது.
புத்தியுள்ள அடிமை கூறிய கதை மன்னருக்கு உறைத்தது. கதையின் கருப்பொருளை மன்னர் புரிந்து கொண்டார்.
பூமியில் உள்ள விரோதியிலிருந்து தனது இராணுவம் பாதுகாப்பு வழங்கும். ஆனால், விண்ணிலிருந்து இறங்கும் சோதனைகள், விபத்துக்களிலிருந்து தன்னை தனது ஆட்சியோ, செல்வக் கருவூலமோ, தனது படையோ நிச்சயம் பாதுகாக்க மாட்டாது. விண்ணின் தாக்குதலைத் தடுக்கும் வல்லமை தனித்தவனான அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு என்பதை நன்கு புரிந்துகொண்ட மன்னரின் மனதிலிருந்து கொலராவின் கொடும் பயம் நீங்கியது. அல்லாஹ்வின் விதியைப் பொருந்திக் கொண்டவராக மன நிம்மதியுடன் மாளிகையை நோக்கி ஏகினார்.
ஆதாரம் : தப்ஸீர் றூஹுல் பயான், பாகம் - 02, பக்கம் - 378
அற்புதப் பேழை
கலீமுல்லாஹ் நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களுக்குப் பின் யூஷஃ பின் மதாஃ அலைஹிஸ்ஸலாம் நபியானார்கள். பின் இவர்களைத் தொடர்ந்து பலர் நபியாக வந்தார்கள்.இஸ்ரவேலர்கள் நபிமார்களின் பேச்சைக் கேளாமல் பாவச் செயலில் எல்லை கடந்து போகலாயினர்.இதனால் நபிமார்கள் வருவது நின்று போயிற்று. வழிகாட்டுதலும் தலைமைத்துவமும் இல்லாத சமூகமாக இஸ்ரவேலர்கள் காணப்பட்டனர்.
இந்நிலையில்தான், அமாலிக்கர்கள் இவர்கள்மீது படையெடுத்தனார். இவர்கள் எகிப்திலும் பலஸ்தீனத்திற்குமிடையில் கடற்கரையில் வசித்துவந்த ஒரு சமுகத்தினர் ஆவார்கள். அரக்கத் தனமிக்க இவர்கள் இஸ்ரவேலர்களுடன் போர் தொடுத்து இவர்களை கொன்றொழித்தனர். 440 பேர் கைதியாகப் பிடித்து அவர்களிடமிருந்து வரி வசூலித்து வந்தனர்.
இஸ்ரவேலர்களில் நபி யஃகூப் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் வழிவந்த “லாவி“ என்பவரின் கோத்திரத்திலிருந்துதான் நபிமார்கள் தோன்றி வந்தனர். இக்கோத்திரத்தில் ஒரு கற்பிணிப் பெண் தவிர ஏனைய யாவரும் யுத்தத்தில் கொல்லப்பட்டனர்.
இஸ்ரவேலர்கள் அப்பெண்னைப் பிடித்து ஒரு பாதிரியாரின் இல்லத்தில் பாதுகாத்து வந்தனர். தங்களுக்கு வழிகாட்டும் ஒரு நபியின் வருகையை இஸ்ரவேலர்கள் மிக்க ஆவலுடன் எதிர்பார்த்திருப்பதைக் கண்ட இப்பெண் அல்லாஹ்விடம் தனது வயிற்றிலிருக்கும் குழந்தையை ஆணாக்கியருளும்படி உருக்கமாகப் பிரார்த்தித்தார். அவர் துஆவை அல்லாஹ் ஏற்று ஆண் குழந்தையை பிரசவித்தான்.
குழந்தைக்கு “ஷம்மூயில்“ என்று பெயர் சூட்டப்பட்டது. பிரார்த்தனை ஏற்கப்பட்டவர் என்பது இதன் பொருள்.
குழந்தை வளர்ந்து வாலிபனானது. பைத்துல் முகத்ஸிலுள்ள ஒரு பாதிரியாரிடம் தௌறாத் வேதத்தைக் கற்பதற்காக அனுப்பப்பட்டார். பாதிரியாரும் தன் புத்திரர் போன்றே கவனித்து வந்தார். ஹளரத் ஷம்மூ அலைஹிஸ்ஸலாம் பக்குவ நிலைளை அடைந்ததும் ஹளரத் ஜிப்ரியீல் அலைஹிஸ்ஸலாம் இவர்கள் முன்தோன்றி “அல்லாஹுத்தஆலா உங்களை நபியாக தேர்வு செய்துள்ளான். ஆதலால் நீங்கள் மக்களிடம் சென்று சன்மார்க்கப் பிரசாரத்தைப் புரிவீராக!“ என்று நற்செய்தி கூறினார்கள்.
அல்லாஹ்வின் கட்டளையை ஏற்று தன் சமுகத்திடம் சென்று என்னை அல்லாஹ் நபியாகத் தேர்ந்து அனுப்பியுள்ளான் என்று கூறி பிரசாரத்தை துவக்கினார். மக்கள் இவர்மேல் ஐயம் கொண்டனர். உங்கள் வாதம் உண்மையாயின் எங்களுக்கு ஓர் அரசரை நியமிக்க வேண்டும். அவர் தலைமையில் எதிரிகளுடன் நாங்கள் போராட வேண்டும் என்று வேண்டினர்.
இஸ்ரவேலர்களின் அரசர்களை நபிமார்கள் தெரிவு செய்வதும், அரசர்களுக்கு ஆலோசனை கூறுவதும்,அல்லாஹ்விடமிருந்து வரும் செய்திகளை அரசர்கள் மூலம் மக்களிடத்தில் நடைமுறைப்படுத்துவதும் அக்காலத்து வழக்கமாகும்.
ஹளரத் ஷம்மூயில் அலைஹிஸ்ஸலாம் அல்லாஹ்விடம் பிரார்த்தித்தார்கள். ஒரு தடியும், பைத்துல் முகத்தஸிலுள்ள எண்ணெய் உள்ள ஒரு கிண்ணமும் வழங்கப்பட்டது. அரசராக வருபவர் இத்தடியின் உயரத்தைக் கொண்டவராக இருப்பர். அவர் வந்ததும் கிண்ணத்தில் உள்ள எண்ணெய் கொதிக்கும். இதுவே அரசராக நியமிக்கப்பட்டதற்கான ஆதரமாகக் கூறப்பட்டது.
இந்நிலையில், ஹளரத் தாலூத்தீன் தந்தையின் கழுதை காணாமல் போய் விட்டது. கழுதையைத் தேடிக் கண்டுபிடித்து வருமாறு மகன் தாலலூத்தையும், தனது அடிமையையும் அனுப்பி வைத்தார். கழுதையைத் தேடிச் செல்லும் வழியில் ஹளரத் ஷம்முயில் அலைஹிஸ்ஸலாம் எதிர்ப்பட்டார்கள்.
கழுதையைப் பற்றிய தகவலை நபியிடம் கேட்டறியலாம். வாருங்கள் என்று அடிமையின் ஆலோசனைப்படி தாத்தும் அடிமையும் ஷஃமமூயில் அலைஹிஸ்ஸலாமிடம் சென்றனர். தாலூத்தும் நபி ஷம்முயிலும் பேசிக்கொண்டிருக்கும் போது கிண்ணத்திலிருந்த எண்ணெய் கொதிக்க ஆரம்பித்தது. தன்னிடமிருந்த தடியால் தாலூத்தை அளந்து பார்த்ததும் உயரம் சரியாக இருந்தது.
கிண்ணத்திலிருந்த எண்ணெய்யை அவர் உடலில் பூசி உம்மை அரசனாக்குமாறு என்னை அல்லாஹுத்தஆலா பணித்துள்ளான். ஆதலால், இஸ்ரவேலர்களின் அரசர் நீர்தான் என்று நற்செய்தி கூறினார்கள். அரசராக நான் தெரிவு செய்யப்பட்டதற்கான ஆதாரம் என்ன? உமது கழுதை வீடு வந்து சேர்ந்திருக்கும். சென்று பாருங்கள் என்று கூறினார்கள். சொன்னபடி கழுதை தந்தையிடம் வந்திருந்தது.
தாலூத்தை இஸ்ரவேலர்களின் அரசராக அல்லாஹ்வால் தெரிவு செய்யப்பட்டுள்ளார் என்று நபி ஷம்முயில் அலைஹிஸ்ஸலாம் கூறியதும், இஸ்ரவேலர்கள் ஆச்சரியப்பட்டனர். வழக்கமாக நபி யஃகூப் என்பவரின் குடும்பத்திலி ருந்துதான் அரசர்கள் வருவது வழக்கம்.
இதற்கு மாறாக, தாலூத் என்பவர் புன்யாமீனின் சந்ததியைச் சேர்ந்தவர். ஏழை, தோல் பதனிடும் தொழில் செய்பவர். இவர் எப்படி அரசராகலாம் என்று வியப்படைந்தனர்.
அரசருக்குரிய தகுதி, அறிவு, ஆளுமை, உடற்பலமுமே அன்றி வெறும் வமிசம் அன்று அல்லாஹுத்தஆலா கூறினான். அப்போது அவர் அல்லாஹ்வால் அரசராக்கப்பட்டதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டனர். இஸ்ரவேலர்களிடமிருந்து தவறிப்போன “தாபூத்“ என்ற பேழை அவரிடமிருக்கும் என்று நபி ஷம்மூயில் அலைஹிஸ்ஸலாம் கூறினார்கள்.
தாபூத் என்பது தேக்குமரத்தினால் செய்யப்பட்ட ஒரு பேழை நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் சுவர்க்கத்திலிருந்து வரும்போது இதனையும் கொண்டு வந்தார்கள். நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மறைவிற்குப் பின் நபிமார்கள் மூலமாக கைமாறி நபி மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் வந்து சேர்ந்தது.
“தாபூத்“ என்பது புனிதமான ஒரு பேழையாகும். இஸ்ரவேலர்கள் எதிரிகளுடன் போர் செய்யச் சென்றால் எதிரிகளின் தொகையைக் கண்டு மிரண்டு விடுவர். இந்நிலையில் இப்பேழையை அவர்களுக்கு முன்னால் வைக்கப்படும். அப்பேழையிலிருந்து வெளிவரும் அற்புத அருளால் போராளிகளின் இதயத்தில் தைரியமும்,உற்சாகமும் மன அமைதியும் ஏற்படும். தாபூத்தை முன்னிறுத்தி செய்யப்படும் யுத்தங்கள் யாவும் வெற்றியாகவே முடிந்து வந்தன.
இஸ்ரவேலர்கள் மத்தியில் முரண்பாடுகள் தோன்றினால் தாபூத்திடம் தீர்ப்பை வேண்டுவார்கள்.தாபூத்திலிருந்து தீர்ப்பு நற்செய்தியும் சத்தமாக ஒலிக்கும் தாபூத்தை வஸீலாவாக்கி மக்கள் தங்கள் தேவைகளை வேண்டி வந்தனர். தேவைகளும் நிறைவேறின. நோய் நொடிகள், கொள்ளை நோய்கள்,துயரங்கள் யாவும் தாபூத்தின் பறக்கத்தால் அற்றுப் போயின பொதுவாக தாபூத் இஸ்ரவேலர்களுக்கு நம்பிக்கை நட்சத்திரமாகவும் இறையருளும் மன நிம்மதியும் வழங்கும் அற்புதங்களுக்கு கருவூலமாகவும் இருந்து வந்தது.
இந்நிலையில், இஸ்ரவேலர்களின் அடாத்து செயல்கள் அதிகரித்து விட்டன. பஞ்சமா பாதகங்கள் புரியலாயினர். இவர்களி்ன் எல்லை தாண்டிய பாவச் செயல்களால் அல்லாஹுத்தஆலா இவர்கள் மீது கோபங் கொண்டான். இறை தண்டனை இவர்களைத் துயரத்துடன் தொடரத் தொடங்கின.
இச்சந்தர்ப்பத்தில்தான், அமாலிக்கா இனத்தைச் சேர்ந்த அரக்கர்கள் இவர்கள் மீது படையெடுத்தனர்.இவர்களைத் தோற்கடித்த அமாலிக்கர்கள் இவர்களுக்கு அருள் பாலித்துவரும் தாபூத் என்ற அருட் பேழையை அபகரித்து எடுத்துச் சென்று குதிரையின் உபாதைகள் உள்ள தொழுவத்தில் வீசிவிட்டனர்.
தாலூத் அரசராக நியமிக்கப்பட்டபோது அமாலிக்க சமுகத்தினரை அல்லாஹுத்தஆலா சோதித்தான். தாபூத்திற்குப் பக்கத்தில் உபாதை கழித்து தாபூத்தை அசிங்கப்படுத்தியவர்களுக்கு ”மூலவியாதி“ ஏற்பட்டது.மற்றவர்களும் விதவிதமான நோய்களுக்குள்ளாக்கப்பட்டனர். இதனால், அவர்களின் ஐந்து நகரங்கள் அழிந்து நாசமாயின.
தாபூத் என்ற பெட்டியை அசிங்கப்படுத்தியதனால்தான் தாங்களுக்கு நமது நகரமும் சோதிக்கப்பட்டு அழிக்கப்பட்டன என்பதை அங்குள்ள சிலர் உணர்ந்தனர். அதனால் தாபூத் என்ற பெட்டியை இரு காளையில் ஏற்றி ஊரைவிட்டும் அப்புறப்படுத்தினர்.
அல்லாஹுத்தஆலா மலக்குகளை அனுப்பி அக்காளையை தாலூத்தின் இல்லம் சேர்த்து வைத்தான்.இவ்வாறு இழந்துபோன புனித தாபூத் மீண்டும் இஸ்ரவேலர்கள் வசமாகியது. தாபூத்தை ஹளரத் ஷம்மூயில் அலைஹிஸ்ஸலாம் கைப்பற்றியதும் தாலூத்தை மன்னராக்கினார்கள். இஸ்ரவேலர்களும் தாலூத்தை மன்னராக மனதார அங்கீகரித்துக் கொண்டனர்.
ஆதாரம் : தப்ஸீர் ஸாவி, பாகம் - 01, பக்கம் - 201
தப்ஸீர் றூஹுல் பயான், பாகம் - 02, பக்கம் - 386
தாபூத்தில் இருந்தவை யாவை?
மூன்று முழம் உயரமும், இரண்டு முழம் அகலமும் கொண்ட தாபூத் பெட்டகத்தி்ல் மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் ஆஸாக்கோல், அவர்களின் சில ஆடைகள், ஹாறூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களி்ன் தலைப்பாகை, சுலைமான் நபி அலைஹிஸ்ஸலாம் அவர்களின் மோதிரம், தௌராத்தில் சில ஏடுகள், மன்னு ஸல்வாவின் சில பகுதிகள் மற்றும் நபிமார்களி்ன் உருவங்கள் உள்ளிட்டவைகள் அவற்றுள் இருந்தன.
ஆதாரம் : ஜலாலைன், காஸின், ஸாவி, றூஹுல் பயான்
திருக்குர்ஆன் புனிதத் தாபூத் பற்றி பின்வருமாறு கூறுகின்றது,
“அவர்களுடைய நபி (அஷ்மூவில்) அவர்களை நோக்கி நிச்சயமாக அல்லாஹுத்தஆலா “தாலூத்தை”உங்களுக்கு அரசனாக அனுப்பியிருக்கின்றான் என்று கூறியதற்கு அவர்கள் “எங்கள் மீது அவருக்கு எவ்வாறு அரசுரிமை ஏற்படும்? அவரைவிட தாம்தாம் அரசு புரிய மிகத் தகுதியுடையோர், (அரசருக்கு அவசியமான) திரளான திரவியத்தையும் அவர் அடையவில்லை என்று கூறினார்கள். (அதற்கு அவர்களுடைய நபியாகிய) அவர் “நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது (அரசு புரிய) அவரைத் தேர்ந்தெடுத்திருக்கின்றான். அன்றி, ஞானத்திலும், உடற் பலத்திலும் உங்களைவிட அவரை அதிகப்படுத்தியுமுள்ளான். அல்லாஹ் அவன் விரும்பியவர்களுக்கே தன் ஆட்சியை அளிப்பான். (ஆட்சி செய்யும் தகுதியுடையோரை) நன்கு அறிந்தவனாகவும் உள்ளான்“.
(அல்குர்ஆன் - 2 :247)
“பின்னும் அவர்களுடைய நபி அவர்களை நோக்கி அவருடைய ஆட்சிக்கு அடையாளம் உங்கள் இறைவனிடமிருந்து மலக்குகள் சுமந்த வண்ணமாக ஒரு பேழை நிச்சயமாக உங்களிடம் வரும். அதில் உங்களுக்கு மன நிம்மதியளிக்கக் கூடியதும், மூஸா, ஹாறூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களி்ன் சந்ததிகள் விட்டுச்சென்ற மீதமுள்ளதும் இருக்கும் மெய்யாகவே நீங்கள் விசுவாசிகளாக இருந்தால் நிச்சயமாக உங்களுக்கு அதில் ஓர் அத்தாட்சி உண்டு என்பதைக் காண்பீர்கள்“ என்று கூறினார்.
(அல்குர்ஆன் - 2 : 248)
தாபூத் பேழையின் கதையால் பின்வரும் படிப்பினைகள் பொதிந்துள்தைக் காண முடிகின்றது.
01. மகான்கள் நபிமார்கள் விட்டுச் செல்லும் பறக்கத்துப் பொதிந்த பொருட்களில் மகத்தான கண்ணியமும் மரியாதையும் உண்டு. இவற்றின் மூலமாக அடியார்கள் எண்ணிலடங்காத இறையருட் பாக்கியங்கள் இருக்கின்றன. மூஸா அலைஹிஸ்ஸலாம் அவர்களின் செருப்புக்கள், துணிகள் மற்றும் ஹாறூன் அலைஹிஸ்ஸலாம் அவர்களின் தலைப்பாகை உள்ளிட்ட பொருட்களை மலக்குகள் தங்களின் நூறானியத்தான தோழில் சுமந்து வந்து ஹளரத் அஷ்மூவில் அலைஹிஸ்ஸலாம் அவர்களிடம் கையளித்தனர்.
அப்பெட்டியில் முஃமீன்களுக்கு மன அமைதி இருக்கின்றது என்று திருக்குர்ஆன் கட்டியம் கூறுகின்றது.மகான்களின் முதுசங்கள் எங்ககெல்லாம் உள்ளதோ அங்ககெல்லாம் இறையருள் இறங்கும். அதைச் சுற்றியுள்ள முஃமீன்கள் மன சாந்தியும் இறையருளும் பெறுவர்.
நபிமார்கள் பாவித்த பொருட்களைத் தாங்கியிருக்கும் பெட்டியில் இறையருள் இறங்குமாயின், நபிமார்கள்,வலிமார்கள் அடங்கியிருக்கும் புனித கப்றுகளில் இறையருள் இறங்க மாட்டாதா? அதனைச் சுற்றியிருப்போர் அதனைப் பெற்று நிம்மதியுடன் வாழ முடியாதா?
நபிமார்கள், வலிமார்களி்ன் கப்றுகளை இழிவுபடுத்துவோர், அவமரியாதை செய்வோர் நிச்சயம் அல்லாஹ்வின் கோபத்திற்கும், தண்டனைகளுக்கும் உரித்துடையவர்களாவர். அமாலிக்கா சமுகத்தினருக்கு ஏற்பட்ட இழிவுக்கும் சோதனைக்கும் “தாபூத்தை“ அசிங்கப்படுத்தியதுதான் காரணம் என்பதை அவர்கள் உறுதியாக நம்பினர். அதனால், அதனை இஸ்ரவேலர்கள் பக்கம் திருப்பி அனுப்பினர்.
தாபூத்தின் பறக்கத்தினால் இஸ்ரவேலர்கள் யுத்தத்தில் வெற்றி பெற்றனர். அதுபோன்று மகான்களின் கப்றுகளிலிருந்து முஃமீன்களின் தேவைகள் நிறைவேறும். நோய் நொடிகள் அகலும். ஏனெனில்,நபிமார்களின் உடல் பட்ட உடைகளை விட அவர்களின் புனித உடல் பெறுமதி வாய்ந்ததுதானே!
பாவங்கள் புரிந்து அக்கிரமம் புரிகின்ற சமுகத்திலிருந்து அமைதி, பாதுகாப்பு, கண்ணியம், இறையருள்,உதவி ஆகியன எடுக்கப்பட்டுவிடும். இஸ்ரவேலர்கள் எல்லை தாண்டிய குற்றச் செயல்களில் ஈடுபட்டதனால் அல்லாஹுத்தஆலா அவர்களுக்கு அருள்பாலித்துக் கொண்டிருந்த “தாபூத்“ என்ற பேழையை அமாலிக்கா அரக்கர்களை அனுப்பி பறித்தெடுத்தான். இதனால், பல்லாண்டுகளாக இஸ்ரவேலர்கள் சொல்லொணாத் துயரங்களுக்கு ஆளானார்கள்.
No comments:
Post a Comment