Pages

Monday, October 26, 2015

முஹர்ரம் மாதத்தின் அனாச்சாரங்களும், ஆஷூரா நோன்பின் சிறப்புகளும்

முஹர்ரம் மாதத்தின் அனாச்சாரங்களும், ஆஷூரா நோன்பின் சிறப்புகளும்
 
முஹர்ரம் மாதம் 10ம் நாள் ஆஷூரா  தினம் என்று கூறப்படும். அந்த நாளின் சிறப்பை பின்வரும் ஹதீஸ்கள் மூலம் தெரிந்து கொள்ளலாம். அதற்கு முன்பாக அன்றைய நாளில் நிகழ்ந்து கொண்டிருக்கும் அனாச்சாரங்களை காண்போம்.
பஞ்சா எடுப்பது, மாரில் அடித்துக் கொள்வது, தீக்குழியில் இறங்குவது, துக்கம் கடைபிடிப்பது, கொளுக்கட்டை போன்ற பதார்த்தங்கள் செய்து வைத்து பாத்திஹாக்கள் ஓதுவது. இவைகள் அனைத்தும் நபி(ஸல்) அவர்களின் பேரர் ஹூசைன்(ரலி) அவர்கள் இறந்ததற்காக செய்யப்படும் அனாச்சாரங்களாகும். நபி (ஸல்) அவர்கள் இறந்ததற்காகவோ, அவர்களுடைய மனைவி மக்கள் இறந்ததற்காகவோ, எந்த ஒரு நபித்தோழர்களும் இவ்வாறு செய்ததில்லை. ஷைத்தானின் சதித்திட்டத்தால் அவர்களின் பேரர் இறந்த பின் மக்களால் ஏற்படுத்தப்பட்ட இச்செயல் இன்று வரை நடை முறைப்படுத்தப்பட்டு வருகிறது.

இவர்களின் மரணம் ஒன்றும் புதிதல்ல,அல்லாஹ்வால் படைக்கப்பட்ட எல்லா படைப்பினங்களுக்கும் இறப்பை அல்லாஹ் ஏற்படுத்தி உள்ளான்.
ஒவ்வொரு ஆத்மாவும் மரணத்தை சுவைத்தே தீரும்.'  (அல்குர்ஆன்: 3:185)
 
நீங்கள் எங்கிருந்த போதிலும் மரணம் உங்களை அடைந்தே தீரும். மிகப்பலமாக கட்டப்பட்ட கோட்டைகளில் நீங்கள் இருந்தபோதிலும் சரியே!    (அல்குர்ஆன்: 4:78)

எந்தஒரு மனிதனுடைய இறப்பிற்கும் மூன்று  நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்க அனுமதி இல்லை. ஜைனப் பின்த் ஸலமா (ரலி) என்ற ஸஹாபிப் பெண்மணி அறிவிக்கிறார்கள். நான் நபி (ஸல்) அவர்களுடைய மனைவி உம்மு ஹபீபா (ரலி) அன்ஹா அவர்களிடம் அவருடைய தந்தை அபூ சுப்யான் அவர்கள் மரணமடைந்த (சில நாட்களில்) சென்றேன். அப்போது அவர்கள் மஞ்சள் நிற பொருளையோ அல்லது அது போன்ற நறுமணப் பொருளையோ வரவழைத்தார்கள். பின்னர் அங்கிருந்த ஒரு சிறுமிக்கு அதை தடவினார்கள். பின்னர் தாங்களும் தங்களின் இரு கண்ணங்களிலும் தடவிக் கொண்டார்கள். பின்னர் இவ்வாறு கூறினார்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக எனக்கு நறுமணப் பொருள்களின் பக்கம் இப்போது தேவை இல்லை எனினும் நான் இப்போது நறுமணத்தை உபயோகித்ததற்கான காரணம் நபி (ஸல்) அவர்கள் மின்பரில் கூறக்கேட்டிருக்கின்றேன். ''அல்லாஹ்வையும், மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட பெண்மணி எந்தவொரு மரணத்திற்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைபிடிக்கக் கூடாது.'' எனினும் தனது கணவரின் மரணத்திற்காக அப்பெண்மணி நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் கடைபிடிப்பாள். அதாவது இத்தா இருப்பாள். (நூல்: புகாரி, முஸ்லிம்)

ஆனால் இன்று பல நூறு ஆண்டுகளுக்கு முன்பு மரணமான நபி(ஸல்) அவர்களின் பேரரின் மரணத்திற்காக இந்த நிகழ்ச்சியை கொண்டாடுவது நபி(ஸல்) அவர்களின் சொல்லை புறக்கணித்து வாழ்பவர்களின் கூட்டத்தில் இணைத்து விடும். எனவே இப்பூமியில் பிறந்து இறந்த எவருக்காகவும்  ஒரு நாளை நிர்ணயம் செய்து துக்கம் கடைபிடிப்பது அல்லது அவர்களின் ஞாபகமாக நினைவு நாள் கொண்டாடுவது நபி (ஸல்) அவர்களின் வழிமுறை அல்ல. நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் என்னுடைய கப்ரை  (நினைவுநாளாக)  வணங்குமிடமாக ஆக்கிவிடாதீர்கள். (அபூஹூரைரா(ரலி) நூல்: அபூதாவுத்.)

இன்னும் நபித்தோழர்கள் கூறுவதைப் பாருங்கள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் பைஅத் (உறுதிப்பிரமாணம்) செய்த போது நாங்கள் ஒப்பாரி வைத்து அழமாட்டோம் என்ற உறுதி மொழியை பெற்றுக்கொண்டார்கள். (உம்மு அதிய்யா(ரலி)    நூல்: புகாரி முஸ்லிம்)

அபூதர்தா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் (என்தந்தை) வியாதியால் வேதனைப்பட்டு மயக்கமடைந்தார். அவருடைய தலை அவரின் குடும்பப் பெண்களில் ஒருவருடைய மடியில் இருந்தது  அப்போது ஒரு பெண் சப்தமிட்டு (ஒப்பாரிவைப்பதற்காக) அங்கு வந்தார். அந்தப் பெண்ணின் அச்செயலை மறுத்துரைக்க அவர் சக்தி பெற்றிருக்க வில்லை. அவர் மயக்கத்திலிருந்து விடுபட்டதும் நபி (ஸல்) அவர்கள்  எவர்களை விட்டும் விலகி இருந்தார்களோ அவர்களை விட்டு நானும் விலகிக்கொள்கிறேன். நிச்சயமாக நபி (ஸல்) அவர்கள் ஒப்பாரி வைத்து அழுகும் பெண்ணை விட்டும் சோதனை (சிரமதுடைய) நேரத்தில் தலையை மொட்டை அடித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும்  தன் ஆடைகளை கிழித்துக் கொள்ளும் பெண்ணை விட்டும் நீங்கியவர்களாக உள்ளார்கள் எனக் கூறினார்கள். (நூல்:புகாரி)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் 'யார் முகத்தில் அடித்துக் கொண்டு இன்னும் சட்டைப்பையை  கிழித்துக் கொண்டும் அறியாமை காலச் செயல்களின் பால் மக்களை அழைக்கின்றாரோ அவர் நம்மைச் சார்ந்தவரல்ல. (இப்னுமஸ்வூத்(ரலி)  நூல்: புகாரி, முஸ்லிம்)

மிகப் பெரிய எச்சரிக்கை:
ஆனால் இன்று அன்றைய தினம் மார்பகங்களில் அடித்துக் கொண்டு தன்னையே வதைத்துக் கொள்ளும் அவலத்தை பார்க்கிறோம். இது யாருடைய பழக்கம் என்றால் அறியாமைக்கால மக்களின் பழக்கம், இன்னும் மாற்றார்களின் பழக்கம். இதை செய்பவர் நபி (ஸல்) அவர்களைச் சார்ந்தவரல்ல. எனவே இதுபோன்ற அனாச்சாரங்களை தவிர்த்து கொண்டு மார்க்கத்தின் அடிப்படையில் செயல்படுவோம்.

சிறப்புகள்:
ரமழானின் நோன்பிற்கு பிறகு மிக சிறப்பான நோன்பாக அல்லாஹ்வின் மாதமான முஹரம் மாதத்தின் நோன்பாகும். என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: அபூஹூரைரா (ரலி)  நூல்: முஸ்லிம்)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆஷூரா நோன்பை தானும் நோற்று அதை மற்றவர்கள் நோற்கவும் கட்டளை இட்டார்கள். (ஆதாரம்: புகாரி)
 
நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பைப் பற்றி கேட்கப்பட்டது அதற்கு  நபி (ஸல்) அவர்கள் அது கடந்த கால பாவங்களை மன்னிக்கும் எனக் கூறினார்கள். (அறிவிப்பாளர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம்)

இவ்வளவு சிறப்பை பெற்றுள்ள இந்த நோன்பை நோற்பவர்களை விட அனாச்சாரங்களில் ஈடுபடுபவர்கள் நம்மில் அதிகமானவர்கள். எனவே மார்கத்தில் அனுமதித்துள்ள நோன்பை நோற்று அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிப்போம்.அனாச்சாரங்களை விரட்டி அடிப்போம்.

நோன்பு நோற்கும் நாட்கள்:
நபி(ஸல்) அவர்கள் மதினாவிற்கு வருகை தந்தபோதுஆஷூரா நாளில் யூதர்கள் நோன்பிருப்பதைக் கண்டார்கள். இந்நாளின் சிறப்பென்ன? என்று யூதர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு யூதர்கள் இது மகத்தான நாளாகும். இந்நாளில் தான் மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். மேலும் ஃபிர்அவ்னையும் அவனுடைய சமூகத்தினரையும் (கடலில்)மூழ்கடித்தான். எனவே அல்லாஹ்வுக்கு நன்றி கூறும் விதமாக மூஸா (அலை) அவர்கள் நோன்பு நோற்றார்கள். அதனால் நாங்கள் நோன்பு நோற்கிறோம் என்று கூறினார். நபி(ஸல்) அவர்கள் நாங்கள் தான் மூஸா (அலை) அவர்களை பின்பற்றுவதில் உங்களை விடத் தகுதியானவர்கள் என்று கூறினார்கள். மேலும் அந்நாளில் நோன்பு நோற்றார்கள், நோன்பு நோற்குமாறு கட்டளையிட்டார்கள். மற்றொரு அறிவிப்பில் அடுத்த வருடம்   உயிரோடு  இருந்தால்  ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன் எனக் கூறினார்கள் அறிவிப்பாளர்: இப்னுஅப்பாஸ்(ரலி) நூல்: புகாரி, முஸ்லிம்)

யூதர்களுக்கு மாறு செய்ய வேண்டுமென்பதற்காகவே நபி (ஸல்) அவர்கள் ஒன்பது, பத்து ஆகிய இரு தினங்களில் நோன்பு நோற்க கட்டளை இட்டுள்ளார்கள். எனவே இந்த தினங்களில் நோன்பு நோற்பது முஹர்ரம் மாதத்தில் நாம்  செய்ய வேண்டிய  செயலாகும்.

எனவே நோன்பை நோற்று நமது பாவங்களை போக்கிக் கொள்வதுடன் நபி (ஸல்) அவர்களுடைய சொல்லுக்கும் கட்டுப் பட்டவர்களாக ஆகுவோம். இதுவே அல்லாஹ்விற்கு பொருத்தமானதாக அமையும். இதனடிப்படையில் நமது செயலை அமைத்துக் கொள்வோமாக!.

நோன்பையே பிற சமூகத்தாருக்கு ஒப்பில்லாமல் வைக்கும்படி கட்டளையிடப்பட்டுள்ள நாம் இன்றைக்கு எத்தனையோ விசயங்களில் மாற்றார்களுக்கு ஒப்பாகவோ அல்லது அதைவிட மோசமாகவோ நடக்கிறோம் உதாரணமாக:  முஹர்ரம் மாதம்  திருமணம்  முடிக்கக்   கூடாது, புதிதாக திருமணம் முடித்த தம்பதிகள் சேரக்கூடாது, இன்னும் 10 தினங்கள் மாமிச உணவுகள் சாப்பிடக்கூடாது போன்ற செயல்கள். உண்மையிலேயே இதுயாருடைய கலச்சாரம் என்று சிந்தித்துப் பார்த்துதெளிவு பெறுவோம்.  யார் எந்த ஒரு கூட்டத்தாருக்கு ஒப்பாக நடக்கிறாரோ அவரும் அவர்களைச் சார்ந்தவரே என நபி(ஸல்)அவர்கள் கூறினார்கள். அறிவிப்பாளர்:இப்னுஉமர்(ரலி)நூல்:அபூதாவூத்

மேலும் 'காலத்தை திட்டுவதன் மூலம் ஆதமுடைய மகன் என்னை திட்டுகின்றான், என அல்லாஹ் கூறுவதாக அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்.   அபூஹூரைரா (ரலி) நூல்: புகாரி

எனவே காலம் மற்றும் நேரம் எதுவும் நம்மை ஒன்றும் செய்துவிட முடியாது அதற்கு எந்த சக்தியும் கிடையாது அல்லாஹ் அதை இயக்கிக் கொண்டிருக்கிறான் எனவே அவன் நாடியது தான் நடக்கும் என்று உறுதி கொள்ளவேண்டும். இத்தகைய உறுதியான கொள்கையே அல்லாஹ்விடம் உயர்ந்த அந்தஸ்த்தை பெற்றுத்தரும். இன்னும் எந்த செயலை செய்கின்ற பொழுதும் அல்லாஹ் அவனது தூதரின் வழிகாட்டுதல் இருக்கிறதா? என்று பார்த்து விளங்கி செயல்படவேண்டும். சத்தியத்தை விளங்கி  செயல்படுவோமாக! இன்னும் இது போன்ற அனாச்சாரங்களிலிருந்து விடுபடுவோமாக!

முஹர்ரம் மாதமும் அது தரும் பாடமும்.


அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மத்துள்ளாஹி வபரக்காத்துஹூ.. அன்பின் சகோதர சகோதரிகளே.... அல்லாஹ் ஒருவனுக்கே எல்லாப்புகழும்! அவனே தன் தூதரை நேர்வழியுடனும் சத்திய மார்க்கத்துடனும் அனுப்பினான். அவனது தூதர் முஹம்மது அவர்கள் மீது ஸலவாத்தும் ஸலாமும் உண்டாகட்டுமாக. அவர்கள் தங்கள் பொறுப்பை நிறைவேற்றினார்கள்! இறைவனின் மார்க்கத்தை ஒளிவு மறைவின்றி அனைவருக்கும் போதித்தார்கள்! இறைவழியில் இறுதிவரை உண்மையான முறைப்படி ஜிஹாது செய்தார்கள் . அவர்களை ஏற்றவர்கள் ஏற்றம் கண்டனர். அவர்களை ஏற்க மறுத்தவர்கள் பெரும் நஷ்டமடைந்தனர். 
 அல்லாஹ் உலகத்தை படைத்து மனிதர்களுக்கு காலங்களை கணித்துக் கொள்வதற்காக பன்னிரண்டு மாதங்களாக ஆக்கினான். இந்த மாதங்களில் சில மாதங்களை சிலதை விட்டும், சில நாட்களை சிலதை விட்டும், மேலும் சில நேரங்களை சிலதை விட்டும் வணக்க வழிபாடுகள் மூலம் சிறப்பாக்கினான். இதன் மூலம் மனிதன் அதிகம் நற்செயல்கள் செய்யவேண்டும் என்பதும் அவனது அந்தஸ்து நற்செயல்களால் உயர்த்தப்பட வேண்டும் என்பதும் ஒரே நோக்காகும். இத்தகைய சிறப்பான மாதங்களில் முஹர்ரம் மாதமும் ஒன்றாகும். வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: “வானங்களையும் பூமியையும் படைத்தது முதல் காலம் சுழன்று கொண்டிருக்கின்றது. ஒரு வருடத்தில் பன்னிரண்டு மாதங்கள் உள்ளன. அவற்றில் நான்கு புனிதமானவையாகும். அதிலும் மூன்று மாதங்கள் தொடர்ச்சியாக வருகின்ற துல் கஃதா, துல் ஹிஜ்ஜா, முஹர்ரம் மாதங்களாகும். அடுத்தது ஜமாதுல் ஊலாவுக்கும் ஷஃபானுக்கும் மத்தியில் இருக்கின்ற ரஜப் மாதமும் ஆகும்” (ஆதாரம்: புகாரி) மேற்குறிப்பிடப்பட்ட ஆதாரங்கள், புனிதமான மாதங்கள் நான்கு என்பதனை தெளிவு படுத்துகின்றது. அவை: 1) துல் கஃதா, 2) துல் ஹிஜ்ஜா, 3) முஹர்ரம், 4) ரஜப் எனப்படும் மாதங்களாகும். இம்மாதங்களுக்கு இருக்கக்கூடிய புனிதத்துவத்தை நாம் பாதுகாக்க வேண்டும். இம்மாதங்களில் பேணவேண்டிய சில ஒழுங்கு முறைகளை இஸ்லாம் நமக்கு தெளிவுபடுத்தி தருகின்றது. ஹுரும் என்ற அரபுச்சொல் தடுக்கப்பட்டவை, புனிதம் என்ற பொருள்களை உள்ளடக்கி இருக்கின்றன. அல்லாஹ் புனிதமாக்கிய மாதங்களில் ஒன்று முஹர்ரம் மாதமாகும். அதனை நபி(ஸல்) அவர்கள் நமக்கு அறிவித்துள்ளார்கள். அல்லாஹ் புனிதப்படுத்தியதைப் பேணுவது நம் கடமையாகும். மேலும் அல்லாஹ் கூறுகின்றான் ''அதில் உங்களுக்கு நீங்களே தீங்கிழைத்துக் கொள்ளாதீர்கள் '' (9:36). புனிதம் மிக்க மஸ்ஜிதுல் ஹராமில் குற்றமிழைப்பது எவ்வளவு குற்றமோ அது போன்றே புனிதம் மிக்க மாதங்களில் தவறிழைப்பதும் பெரும் குற்றமாகும். எனவே மற்ற மாதங்களைக் காட்டிலும் அதிகமாகப் புனிதம் மிக்க மாதங்களைப் பேணுதல் அவசியம் ஆகும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ரமழான் மாத நோன்புக்கு பின் சிறந்த நோன்பு முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பின் சிறந்த தொழுகை இரவுத் தொழுகையாகும்" (ஆதாரம்: முஸ்லிம்) 
  முஹர்ரம் மாதத்தின் சிறப்பு:
                   இம்முஹர்ரம் மாதம் அல்லாஹ்வின் மாதம் என எம்பெருமானார் (ஸல்) அவர்களால் புகழ்ந்துரைக்கப்பட்ட சிறப்புமிகு மாதம் ஆகும். முஹர்ரம் மாதத்திற்கென்று பல்வேறு தனிச்சிறப்புக்கள் உள்ளன. அவற்றில் தலையாயவை இரண்டாகும். இம்மாதம் இஸ்லாமிய வருடப்பிறப்பின் ஆரம்ப மாதமாகும். இம்மாதத்தின் 10ஆம் நாள் இறைத்தூதரான மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் சத்திய அழைப்பிற்கு செவிசாய்த்து, ஏகஇறைவன்மீது நம்பிக்கைக் கொண்ட சமூகத்தினரையும் (பனூ இஸ்ரவேலர்), அவர்களை அழித்தொழிக்கப் புறப்பட்ட ஃபிர்அவ்னிடமிருந்து வல்ல இறைவன் பாதுகாத்த நாளாகும். "ரமலான் நோன்பிற்குப் பிறகு சிறந்த நோன்பு அல்லாஹ்வுடைய மாதமாகிய முஹர்ரத்தின் நோன்பாகும்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ ஹூரைரா (ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம். மேற்கண்ட ஹதீஸில் இம்மாதத்தை அல்லாஹ்வின் மாதமாக நபி (ஸல்) அவர்கள் சிலாகித்துக் குறிப்பிடுகின்றார்கள். மட்டுமல்ல, முஹர்ரம் மாதம் 9 (தாசுஆ) மற்றும் 10 (ஆஷுரா) ஆகிய இரு தினங்களில் அனுசரிக்கப்படும் நோன்புகள் ரமலான் மாத நோன்புகளுக்கு அடுத்தபடியான சிறந்த நோன்புகளாக நபி (ஸல்) அவர்களால் இங்கு அடையாளப் படுத்தப்படுகிறது. ஆஷூரா நோன்பைப்பற்றி நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. (அதற்கு), "சென்ற வருடத்தின் பாவங்களுக்கு (அது)பரிகாரமாக அமையும்" என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூகதாதா(ரலி), நூல்: முஸ்லிம். ஒரு வருட பாவங்களுக்குப் பரிகாரமாக விளங்கும் இந்த ஆஷூரா தினம் என்பது முஹர்ரம் மாதத்தின் 10ஆம் நாள் என்பது அனைவரும் அறிந்த விஷயமே. "மூஸா (அலை) அவர்களைப் பெருமைப் படுத்துவதற்கு யூதர்களைவிட நான் அதிகத் தகுதி வாய்ந்தவன்" எனக் கூறி அவ்வருடம் முஹர்ரம் 10 அன்று நோன்பு நோற்ற நபி(ஸல்) அவர்கள், "எதிர்வரும் வருடம் (உயிருடன்) இருந்தால் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்" (அறிவிப்பவர் :இப்னு அப்பாஸ்(ரலி) அவர்கள். நூல்: முஸ்லிம்.) எனக் கூறிச்சென்றார்கள்.
 முஹர்ரம் மாதத்தின் படிப்பினை: நபிகள் நாயகம்(ஸல்) அவர்கள் உயிரோடு இருந்து முஹர்ரம் 10 அன்று மட்டும் நோன்பு வைத்திருந்தாலும் அவர்களின் எண்ணத்திற்கியைந்து 9 மற்றும் 10 ஆகிய இரு தினங்களில் ஆஷூரா நோன்பு வைக்கும் முஸ்லிம் சமூகம் அதன் பின்னணியில் உள்ள நபி(ஸல்) அவர்களின் உறுதியான சமுதாய சிந்தனையைக் குறித்து ஆழமாகச் சிந்திப்பதில்லை. நபி(ஸல்) அவர்கள், "அடுத்த வருடம் உயிருடன் இருப்பின் 9 அன்றும் நோன்பு வைப்பேன்" என்று ஏன் கூறினார்கள்? அதற்கு நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் விரவிக் கிடக்கும் பல்வேறு நிகழ்வுகள் தெளிவான பதிலைத் தருகின்றன. யூத சமுதாயம் என்பது, உலகில் பல சமூகங்களை நேர்வழிப்படுத்த இறைவனால் அனுப்பப்பட்ட நபிமார்களின் எண்ணிக்கையை வைத்து மிகவும் அதிகமான நபிமார்களைப் பெற்றுக் கொண்ட சமுதாயமாகும். எனினும் தங்களுக்கு அனுப்பப்பட்ட பல நபிகளை நிராகரித்தது மட்டுமன்றி அவர்களுக்கு அனுப்பப்பட்ட நபிகளுள் அதிமானோரைக் கொடூரமாகக் கொலையும் செய்தவர்கள் யூதர்களாவர். இதனால் இறைவனின் கடும் சினத்திற்குரியவர்களாகி இறைவனால் சபிக்கப்பட்ட கூட்டமாக, இறைவனின் தீர்ப்பை எதிர்நோக்கி இருக்கும் கூட்டமாக அவர்கள் இருக்கின்றனர். இந்தக் காரணத்தினால் எப்பொழுதுமே தம்முடைய செயல்களில் எதுவும் யூதர்களுக்கு ஒப்பாக எவ்விஷயத்திலும் இருந்து விடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் அதிக சிரத்தை எடுத்துக் கொண்டனர். அதோடு தன் தோழர்களுக்கு சந்தர்ப்பம் கிடைக்கும் பொழுதெல்லாம் யூதர்களுக்கு மாறு செய்யும்படி வலியுறுத்தவும் செய்தனர். இதற்கு உதாரணமாகப் பல்வேறு வரலாற்று நிகழ்வுகளைக் குறிப்பிடலாம். அவற்றில் ஒன்றுதான் இந்த ஆஷூரா 9ஆம் நாள் நோன்பும். எவ்விஷயத்திலும் யூதர்களின் செயலுக்கு, தான் ஒப்பாக இருந்து விடக்கூடாது என்பதில் கவனம் செலுத்திய நபி(ஸல்) அவர்கள் நன்மைகள் செய்வதிலும் நன்றி செலுத்துவதிலும் அவர்களைவிட மேலதிகமாக இருக்கும் முகமாக ஆஷூரா 9 அன்றும் நோன்பு வைக்க விழைந்தார்கள். இவ்வாறு தமது ஒவ்வொரு அசைவிலும் மாற்றாரின் கலாச்சாரத்தைப் பின்பற்றிவிடக்கூடாது என்பதில் நபி(ஸல்) அவர்கள் கவனமாக இருந்ததன் காரணம், இஸ்லாமியக் கலாச்சாரம் எவ்விதத்திலும் மற்ற கலாச்சாரங்களோடு ஒன்றி அழிந்து விடக்கூடாது; தனித்தன்மையும் திகழ வேண்டும் என்று கருதியேயாகும். ஆஷூராவின் சிறப்பு. “நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது யூதர்கள் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்று வந்ததைக் கண்டனர். அது பற்றி நபி(ஸல்) அவர்கள் யூதர்களிடம் வினவிய போது “மூஸா(அலை) அவர்களையும், இஸ்ரவேலர்களையும் அவர்களின் எதிரி(பிர்அவ்ன்) இடமிருந்து அல்லாஹ் காப்பாற்றிய சிறந்த நாளாகும்” என்று யூதர்கள் காரணம் கூறினர். “உங்களை விட மூஸா(அலை) அவர்களுக்கு நான்தான் அதிக உரிமை உள்ளவன் என்று நபி(ஸல்) அவர்கள் கூறி, அன்று நோன்பு வைக்குமாறும் உத்தரவிட்டனர். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: புகாரி 3397, முஸ்லிம். இந்தக் கட்டளை மூலம் ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்பது கட்டாயக் கடமை என்று தெரிந்திருந்தாலும் ஆஷுரா நோன்புக் கட்டாயக் கடமை அல்ல. காரணம் நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது – ரமழான் நோன்பு கடமையாக்கப்படாத நேரத்தில் – இந்த நோன்பைக் கடமையாக ஆக்கி இருந்தனர். ரமழான் நோன்புக் கடமையாக்கப்பட்டபின் ஆஷுரா நோன்பைக் கட்டாயம் நோற்க வேண்டும் என்று நபி(ஸல்) அவர்கள் வலியுறுத்தவில்லை. “நபி(ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வந்தபோது ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கும்படி கட்டளையிட்டிருந்தனர். ரமழான் நோன்பு கடமையாக்கப்பட்ட பின், “விரும்பியவர் இந்த ஆஷுரா தினத்தில் நோன்பு நோற்கட்டும்! விரும்பாதவர் விட்டு விடலாம்” என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அன்னை ஆயிஷா(ரழி) நூல்கள்: புகாரி 1592, முஸ்லிம். இதே கருத்தை முஆவியா(ரழி) அவர்களும் அறிவிக்கின்றார்கள். (புகாரி, முஸ்லிம்) “ஆஷுரா தினத்தை யூதர்கள் கண்ணியப்படுத்தி நோன்பு நோற்கின்றனர்” என்று நபி(ஸல்) அவர்களிடம் சில நபித்தோழர்கள் கூறியபோது, “அடுத்த ஆண்டு நான் உயிரோடு இருந்தால் (யூதர்களுக்கு மாற்றமாக) ஒன்பதாம் நாளும் நோன்பு நோற்பேன்” என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள். ஆனால் அடுத்த ஆண்டு இந்த தினத்திற்கு முன்பே நபி(ஸல்) அவர்கள் வபாத்தாகி விட்டார்கள்.” அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரழி) நூல்கள்: முஸ்லிம் 1916, 1917, அஹ்மத், அபூதாவூது. இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஆஷூரா எனும் இந்த நாளையும் (ரமலான்) என்னும் இந்த மாதத்தையும் தவிர வேறெதையும் ஏனையவற்றை விடச் சிறப்பித்து தேர்ந்தெடுத்து நபி (ஸல்) அவர்கள் நோன்பு நோற்பதை நான் பார்த்ததில்லை. நூல்: புகாரி 2006 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஹர்ரம் பத்தாவது நாளில் (ஆஷூரா) நோன்பு நோற்பதை அதற்கு முந்தைய ஓராண்டின் பாவத்திற்குப் பரிகாரமாக அல்லாஹ் ஆக்குவான் என நான் எதிர்பார்க்கிறேன். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1976 நபி (ஸல்) அவர்களிடம் ஆஷூரா நோன்பு பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு, அது கடந்த ஆண்டின் பாவத்திற்குப் பரிகாரமாகும் என்றார்கள். அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி) நூல்: முஸ்லிம் 1977 மேற்கூறிய நபிமொழிகள் மூலம் முஹர்ரம் மாதம் ஒன்பதாம் நாளும், பத்தாம் நாளும், நோன்பு ஸுன்னத் என்பதை நாம் உணரலாம். இதுதான் ஆஷுரா நாளின் சிறப்பு. கர்பலா இற்றைக்கு1400 ஆண்டுகளுக்கு முன்பு நடந்த ஒரு சோக நிகழ்வு அது. நீதியும் அநீதியும் சத்தியமும் அசத்தியமும் மோதிக் கொண்ட நாள் அது. மனச்சாட்சிகளை உருகவைக்கும் அந்த நிகழ்வுதான் கர்பலா நிகழ்வு. ஹிஜ்ரி 61ம் ஆண்டு அண்ணல் நபி(ஸல்) அவர்களின் பேரர் இமாம் ஹூசைன்(ரலி) அவர்களும் அவர்களின் குடும்பத்தினரும் பனீ உமையா கூட்டத்தினரால் கர்பலா எனும் பாலைவனத்தில் மிகபரிதாபகரமான முறையில் படுகொலை செய்யப்பட்டார்கள். நபியவர்களினதும், தோழர்களினதும் அளப்பெரிய தியாகங்களுக்கும் அயராத உழைப்பிற்கு மத்தியில்; வளர்த்தெடுக்கப்பட்ட புனித இஸ்லாம், உமையாக்களினால் மாசுபடுத்தப்பட்டது. குர்ஆனின்; விளக்கங்களும் நபியவர்களின் சுன்னாவும் அக்கொடியவர்களின் ஆட்சிக்கும் அதிகாரத்திற்கும் சாதகமாக வியாக்கியானம் செய்யப்பட்டன. அநீதிகளும் அனாச்சாரங்களும் இஸ்லாத்தின் பெயரால் அரங்கேற்றப்பட்டன. இஸ்லாமிய நல்லொழுக்கங்களும் அதன் பெருமான விழுமியங்களும் சிதைக்கப்பட்டு சீரழிக்கப்பட்டன. நபியவர்களின் மார்க்கம் அழிக்கப்படும் அந்த அபாயகர நிலையை கண்டு அதனைப்பாதுகாக்கும் முழுநோக்குடன் இமாம் ஹூசைன்(ரலி) அவர்கள் கர்பலா நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் தனது பயனத்தின் நோக்கம் பற்றிக் கூறுகையில் “நான் சமூகத்தில் குளப்பத்தை ஏற்படுத்த இப்பயனத்தை மேற்கொள்ள வில்லை. எனது பாட்டனாரினது மார்க்கத்தில் சீர்திருத்தத்தை மேற்கொண்டு நன்மையை ஏவி தீமையைத்தடுக்கவே இதனை செய்கிறேன்” எனக் கூறினார்கள். நபியவர்களின் மார்க்கம் யஸீதினால் குளிதோன்றி புதைக்கப்படுவதை சகித்துக் கொள்ளாத இமாம் ஹூசைன் அவர்கள் தனது குடும்பத்தாருடனும் தனது போராட்டத்திற்கு உதவிக்கரம் நீட்ட முன்வந்த வாக்கு மீறாத தோழர்களுடனும் கர்பலாவுக்கு வருகை தந்து அநியாயக்காரர்களுடன் போராடி தனதுயிரையும் தனது குடும்பம் மற்றும் தோழர்களின் உயிர்களையும் அல்லாஹ்வின் பாதையிலே தியாகம் செய்தார்கள். நபி(ஸல்) அவர்களின் பேரப்பிள்ளையான ஹுஸைன் (ரலி) அவர்களின் மரணம் (கொலை) யஸீத் பின் முஆவியா என்பவரால் நடத்தப்படுகின்றது. யஸீத் பின் முஆவியா தனி மனிதராக நின்று இந்த காரியத்தில் ஈடுபடவில்லை. அந்ந சம்பவம் நடக்கும் போது சம்பவம் நடந்த கர்பலா பகுதியில் யஸீத் பின் முஆவியா என்பவரே ஆளுனராக இருந்தார். அவருடைய ஆளுமைப் பகுதிகளுக்கு எதிராகவும் அவரது அதிகாரத்துக்கு எதிராகவும் நடந்தேறிய குழப்பங்களிலேயே ஹுஸைன் (ரலி) அவர்கள் கொல்லப்படுகிறார்கள். (முஹர்ரம் மாதம் 10 நாள் இந்த சம்பவம் நடக்கின்றது) நபி (ஸல்) அவர்களின் அன்புக்கும் அளவுகடந்த நேசத்துக்கும் உரிய பேரரான இமாம் ஹுஸைன் (அலை) அவர்களும், பெண்கள் சிறுவர்கள் அடங்கிய அவர்களது உறவினர்களும் உமையா ஆட்சியாளனான யசீதினால் கர்பலாத் திடலில் கொடூரமாகக் கொலை செய்யப்பட்டு, ஈட்டி முனையில் சிரசுகள் குத்தி உயர்த்தப்பட்டு ஊர்வலம் எடுத்துச் செல்லப்பட்ட ஒரு கோரமான நிகழ்வை எதிர்கொண்ட கசப்பான அனுபவம் இந்த முஹர்ரம் மாதத்துக்கு உண்டு. வரலாற்றிலே ஒரு திருப்புமுனையாக அமைந்து, குறிப்பிட்டதொரு சகாப்தத்தையே உருவாக்கிய கர்பலா நிகழ்வில் பின்னிப் பிணைந்து காணப்படும் இமாம் ஹுஸைன் (அலை) அவர்களின் வாழ்க்கைத் தடங்கள் மிகுந்த அனுதாபத்திற்குரியனவாகும். இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், சிறந்த சிந்தனையுடையோராயும் துணிச்சல் மிக்கோராயும் துன்பங்களையும் ஆபத்துகளையும் எதிர்நோக்கும் வல்லமை பெற்றோராயும் விளங்கினார்கள். சந்தர்ப்ப சூழ்நிலைகளால் உயிரையே இழக்க நேரிட்டாலும் அசைக்க முடியாத மனவுறுதியோடு எதையும் தாங்கும் மனத்திண்மை படைத்தோராய்த் திகழ்ந்தார்கள். இஸ்லாமியக் கொள்கைகளை, கோட்பாடுகளைக் காப்பாற்றிக் கொள்வதிலே அன்னார் காட்டிய வீரமும் மனவுறுதியும் சரியான தீர்மானங்களும் சிலாகிக்கத்தக்கவை. வெறும் அரசியல் நோக்கிற்காக அல்லாமல், தூர்ந்து செல்லும் இஸ்லாமியத்தைப் பாதுகாக்கும் உயர் இலட்சியத்துடன் இமாம் ஹுஸைன் (அலை) அவர்கள், இந்நிகழ்வில் பங்கேற்றார்கள். ஆட்சியாளர்களை சீர்திருத்தம் செய்வதற்கு சமாதான முயற்சியைப் பயன்படுத்த முனைந்தார்கள். ஆனாலும், நிராயுதபாணியாக நின்ற அவர்களை, உமையாக்கள் கொடூரமாகக் கொன்றனர். தமது ஆட்சிக்கு எதிரான, அல்லது தமது ஆட்சியை விரும்பாத சக்திகளைக் களையும் உமையாக்களின் திட்டத்திற்கு இமாம் ஹுஸைனும் பலியாகிப் போனார்கள். ஹிஜ்ரத் கிபி 622 –ல் முஹ்ம்மது மக்காவிலிருந்து யஸ்ரிப் என்ற மதீனாவிற்கு புலம்பெயர்ந்தார். இதை ஹிஜ்ரத் என்றும், அன்றிலிருந்து புதிய சகாப்தத்துடன், இஸ்லாமியக் காலக்கணக்கு துவங்குவதாக கூறுவதையும் நாம் அறிவோம். ஹிஜ்ரத் என நாம் வழமையாக அழைக்கும் வரலாற்று உண்மைகள் முஸ்லிம் பொதுமக்களுக்கு மத்தியில் மிகவும் பிரபல்யமானவை. இறைதூதர் (ஸல்) அவர்களின் தலைமையில் ஒரு சிறு கூட்டத்தினர் மக்காவிலிருந்த தம் வீடுகளை விட்டு மதீனாவுக்குப் புலம் பெயரும் நிர்ப்பந்தத்திற்குட்பட்டனர். அக்கூட்டத்தினர் தம்மிடமிருந்த அனைத்து சொத்துக்களையும் விட்டுசென்றது, ஈமானை மட்டும் அது சுமந்து சென்றது, நபித்துவத்தின் பின்னர் 13 ம் வருடத்தில் இது நிகழ்ந்தது. இப்பூவுலகில் முதன் முதலாக ஹிஜ்ரத் பயணத்தை மேற்கொண்டவர் இறைதூதர் நபி இப்றாஹீம் (அலை) அவர்களே! அன்னார் தமது துணைவியார் ஸாராவுடன் "ஹர்ரான்" என்ற ஊரிலிருந்து "பாலஸ்தீனம்" சென்று அங்கு குடியேறினார்கள். இதுவே இஸ்லாமிய வரலாற்றில் நிகழ்ந்த முதல் ஹிஜ்ரத் எனக் கருதப்படுகிறது. தாம் கொண்ட கொள்கையின் அடிப்படையில் அசைக்க முடியாத விசுவாசத்தோடு செயலாற்றுவதை வலியுறுத்தும் இஸ்லாம் எனும் இனிய மார்க்கத்தை காப்பதற்காக அந்த மார்க்கம் போதிக்கும் அறநெறிகளை தம்மில் நிலைநிறுத்தி தாமும் செயற்படுவதோடு, அவற்றைத் தரணியில் தழைக்கச் செய்வதற்காக நாடு துறப்பதையே ஹிஜ்ரத் என்ற பதம் விளக்கி நிற்கிறது. இவ்வகையில் இறைவனுக்காக இறைதூதர் மீது கொண்டிருந்த தூய அன்பிற்காக இறைவனும் இறைதூதரும் ஈந்தளித்த ‘தீன்’ எனும் சன்மார்க்கத்திற்காக அன்றைய அரபகத்து முஸ்லிம்கள் தாம் பிறந்த புனித மக்கா நகரை மட்டுமல்ல தாம் பெற்ற மக்களை துறந்தார்கள். பெற்றோரையும் உற்றார் உறவினர்களையும் துறந்தார்கள். இறைத்தூதரின் நாடு துறத்தல் என்ற ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் ஹிஜ்ரி ஆண்டு. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத். பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன. இறைத்தூதரின் நாடு துறத்தல் என்ற ஹிஜ்ரத்தை அடிப்படையாகக் கொண்டு துவங்கப்பட்டதுதான் முஸ்லிம்கள் பயன்படுத்தி வரும் ஹிஜ்ரி ஆண்டு. இறைத்தூதர் முஹம்மது நபி(ஸல்) அவர்கள் வாழ்விலும் இஸ்லாமிய வரலாற்றிலும் மிகப் பெரும் திருப்பு முனையை ஏற்படுத்தியதுதான் இந்த ஹிஜ்ரத். பெருமானாரின் ஒவ்வொரு அசைவிலும் ஏராளமான பாடங்கள் உள்ளன. அது போல் பெருமானார் செய்த ஹிஜ்ரத்திலும் மனிதர்களுக்கு ஏராளமான படிப்பினைகள் உள்ளன. யத்ரிப்(மதீனா)வுக்கு ஹிஜ்ரத் செய்யுமாறு இறைவனின் கட்டளை வந்ததும் நான் இறைவனின் தூதர் எனவே புறப்படுகிறேன் என்று புறப்பட்டு விடவில்லை. திட்டம் இடாமலோ, தனித்தோ, யாருடைய உதவியையும் நாடாமலும் புறப்பட்டு விடவில்லை. முறையாகவும் செம்மையாகவும் திட்டமிட்டார்கள். மனிதர்களிடமிருந்து தேவையான உதவிகளையும் பெற்றார்கள். மனித மனதில் பல காட்சிகளை வரைய மூல ஊற்றாக அமைந்த, அமையும் இந்நிகழ்வு கவலையையும், மனவெழுச்சிகளையும் தூண்டும் பல நிகழ்வுகளாக வரலாற்றில் பதியப்பட்டுள்ளது. அந்நிகழ்வில் தௌர் குகை நிகழ்வு மிகுந்த மனவெழுச்சியைத் தூண்டக் கூடியது என்பதில் சந்தேகமில்லை. சிலந்தி குகை வாயிலில் வலைபின்னுகிறது. புறா அங்கே கூடு கட்டுகிறது. விரட்டுவோரை வழிதவறச் செய்யும் நிகழ்வுகளாக இவை அமைந்து விடுகின்றன. இறுதிமுடிவை தீர்மானிக்கும் அந்தச் சில நிமிடங்களின்போது இறைதூதர் (ஸல்) அவர்கள் தம் தோழர் அபூபக்கர் (ரழி) அவர்களுக்கு அப்பிரமிக்கச் செய்யும் ஆச்சரியமான வார்த்தைகளைக் கூறுகிறார்: நபி(ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் இஸ்லாமிய வரலாற்றில் மாபெரும் ஓர் திருப்பு முனையாக அமைந்துள்ளது போன்று, அவர்களின் வாழ்க்கை முறையும் மனித சமுதாயத்திற்கு ஒரு வழி காட்டலாக அமைந்திருப்பதை நாம் அறிந்திருந்தும் நமது வாழ்வை இஸ்லாமிய நெறிகளின் பால் செலுத்தி சீர்படும் எண்ணத்துடன் அதை வரவேற்பதில் தான் உண்மையான புத்தாண்டின் மகிழ்வு அமைந்திருக்கிறது. வல்ல நாயன் நல்லதோர் திருப்புமுனையை நமது வாழ்விலும் நல்கி, நலம் பல பெற அருள் புரிவானாக! ஆமீன் 

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்

முஹர்ரம் மாதத்தின் சிறப்புகள்


“முஹர்ரம்”

இஸ்லாமிய ஆண்டின் முதல் மாதமாகும் முஹர்ரம். முற்காலம் தொட்டு அரபிகள் இம்மாதத்தைப் புனித மாதங்களில் ஒன்றாகக் கொண்டிருந்தனர். முஹர்ரம் என்னும் அரபிச் சொல்லிற்கு “விலக்கப்பட்டது” என்று பொருள்.

“சொற் பொருள்”

முஹர்ரம், ஹராம்,ஹரம், ஹுரும், தஹ்ரீம,இஹ்ராம் என்ற சொற்கள் ஒரே வேர் சொல்லிலிருந்து பிறந்த சொற்களாகும். பாவங்கள் அல்லது செய்யக்கூடாதவைகளை செய்வதை விட்டும் தடுக்கப்படுவதால் விலக்கப்பட்டது, தடுக்கப்பட்டது,என்றும் விலக்கப்பட்டதை செய்வதைவிட்டும் தடுக்கப்படுவதால் அச்செயல் புனிதமானது என்றும், தடுக்கப்படும் இடம் புனிதமான இடம் என்றும் பொருள் கொள்ளப்படுகிறது.

( உ-ம் : தொழுகைக்கு முன் செய்யப்படும் செயல்கள் தொழுகையில் தடுக்கப்படுவதால் “தக்பீர் தஹ்ரீம்” என்றும் , உம்ரா,ஹஜ்ஜ’க்குமுன் அனுமதிக்கப்படுவை இஹ்ராமுக்கு நிய்யத் செய்ததும் தடுக்கப்படுவதால் “இஹ்ராம்” என்றும், ஹரம் எல்லைக்கு வெளியே செய்யப்படும் பாவமானவை- விலக்கப்பட்டவை- ஹரம் எல்லையில் தடுக்கப்படுவதால் “ஹரம்”-புனித எல்லை- என்றும்,”மஸ்ஜிதுல்ஹராம்”- புனிதமான பள்ளி வாசல்- என்றும் சொல்லப்படுகிறது.)

“புனித மாதங்கள்- அஷ்ஹுருல் ஹுரும்”

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை பன்னிரண்டாகும். அவற்றுள் நான்கு மாதங்கள் புனிதமானவை ஆகும். ( அல்-குர்ஆன் 9:36) எனத் திருமறை கூறுகிறது. அவை துல்கஃதா, துல்ஹஜ், முஹர்ரம், ரஜப் ஆகிய மாதங்களாகும்.

இந்நான்கு மாதங்கள் புனிதமிக்கவை என்னும் போது ஏனைய மாதங்கள் சிறப்புக்குரியவை அல்ல என்பது பொருளல்ல. ஏனெனில் ரமளான் என்னும் மாண்பார் மாதம் இதில் தான் வருகிறது.இந்நான்கு மாதங்களை நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காலம் முதல் மக்கள் புனிதமானவையாகக் கருதி வந்தனர்.

ஒருவர் அறியாமல் செய்த தீங்கையும் தம் மானம் அழிக்கும் பெரும் குற்றமாகக் கொண்டு அதற்காக பழி வாங்குவதில் தம் காலத்தையெல்லாம் கழித்து வந்தவர்கள் அரபிகள். கொலை,கொள்ளை போன்ற மாபாதகச் செயல்களை செய்வதற்கு அவர்கள் கொஞ்சமும் தயங்காதவர்கள்.இந்த ஓயாச்சண்டைகளிலும் ஒழியாச் சச்சரவுகளிலும் ஈடுபட்டிருந்த அவர்களை தடுப்பதற்கு இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாதங்களே இந்நான்கு மாதங்களும். அவற்றுள் முதன்மையானதே முஹர்ரம் மாதமாகும்.

குறிப்பாக இந்த மாதத்தில் தமது சண்டை சச்சரவுகளை விலக்கிவைத்திருப்பதால் தான் விலக்கப்பட்டது என்ற பொருள் கொண்ட “முஹர்ரம்” என்ற பெயர் இதற்கு ஏற்பட்டது. இவ்விதம் அக்கால அரபிகள் தமது உணர்ச்சிகளையும், வாளையும் உறையுள் போடத்தேர்ந்தெடுத்ததற்குக் காரணம் இந்த மாதத்தை ஒரு புனித மாதமாகக் கருதியது தான்.

இந்த மாதத்தில் தான் “ஆஷூரா” என்னும் நாள் வருகிறது. இந்த ‘ஆஷூரா’ என்னும் சொல் ஹீப்ரு மொழிச் சொல்லாகும். அதாவது “பத்தாவது நாள்” என்பது பொருளாகும். யூதர்களின் பத்தாவது நாளுக்கு இப்பெயர் இருந்து வருகிறது. யூதர்களின் “திஷ்ரி” மாதமும் அரபிகளின் “முஹர்ரம்” மாதமும் இணையாக வருபவையாகும். திஷ்ரி மாதத்தின் பத்தாம் நாளே முஹர்ரம் மாதத்தின் பத்தாம் நாளாகும்.

யூதர்கள் இந்த பத்தாம் நாளில் நோன்பு நோற்கும் வழக்க முடையவர்களாக இருந்தனர். நபி(ஸல்) அவர்கள் மக்காவைத் துறந்து மதீனா வந்தபோது இப்பழக்த்தைக் கண்டதும் அதற்குரிய காரணத்தை அவர்களிடம் கேட்டனர். அதற்கு “நானே இறைவன்” எனக் கூறிய பிர்அவ்னையும் அவனுடைய படையினரையும் இறைவன் செங்கடலில் மூழ்கடித்ததும் நபி மூஸா (அலை) அவர்களையும் அவர்களின் மக்களையும் காத்தருளியதும் அந்நாளில்தான் என்றும் அந்த நன்றியை நினைவுகூர மூஸா(அலை) அவர்கள் அந்நாளில் நோன்பு நோற்றனர் என்றும் அதனையே தாங்களும் பின்பற்றுவதாகவும் கூறினர். அதைக்கேட்ட நபி (ஸல்) அவர்கள் , ” அவ்விதமாயின் நானும் என் மக்களும்தாம் உங்களையும்விட மூஸா(அலை) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்கள்” என்று கூறி அது முதல் தாங்களும் நோற்று தம் மக்களையும் அவ்வாறே நோன்பு நோற்குமாறும் பணித்தனர்.

அது மட்டுமன்றி “வரும் ஆண்டும் நான் இவ்வுலகில் வாழ்ந்தால் முஹர்ரம் ஒன்பதாவது நாளும் நோன்பு நோற்பேன்” என்றும் கூறினார்கள். { ஆதாரம்: முஸ்லிம், அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ்(ரலி)



இஸ்லாமிய (அரபு) வருடத்தின் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தின் சிறப்புகளை இஸ்லாமிய சமூகம் சரிவர முழுமையாக புரிந்து கொள்ள வில்லை என்றே கருத வேண்டியுள்ளது.

அதன் காரணமாகத்தான் இம்மாதத்தில் இஸ்லாத்தின் பெயரால் பல்வேறு வகையிலான அனுஷ்டானங்கள் உலகின் பல பகுதிகளிலும் கடைப்பிடிக்கப்படுகின்றன. அதில் தமிழ் முஸ்லிம் சமூகமும் விதிவிலக்கின்றி கூடுதலான பல அம்சங்களோடு அவற்றை கடமையான செயல்களைப் போல் நிறைவேற்றி வருவதை காண்கிறோம்.

இம்மாதத்தில் கடைப்பிடிக்கப்படுவனவற்றில் பிரதானமான ஒன்று, முஹர்ரம் ஒன்று முதல் பத்து வரை நடத்தப்படும் சடங்குகள், அவை தொடர்பான சம்பிரதாயங்கள். ஈராக்கிலுள்ள கர்பலா எனும் நகரத்தில் நடைபெற்ற ஒரு போரைச் சுற்றியே இவை அமைந்துள்ளன. இதன் நினைவாக ஷியா பிரிவினரிடையே ஏற்பட்ட அல்லது ஏற்படுத்தப்பட்ட கலாச்சாரம், தமிழகம் போன்ற பகுதிகளில் சுன்னத் வல் ஜமாஅத்தினர் என அறியப்பட்டவர்களிடத்திலும் வெவ்வேறு பெயர்களில் ஊடுருவி உள்ளதை இங்கு வேதனையோடு சுட்டிக்காட்ட வேண்டிய அவசியம் உள்ளது.

முஹர்ரம் பத்தாம் நாளைப் பொறுத்த வரை, வேறு ஒரு காரணத்திற்காக நினைவுபடுத்தி அந்நாளில் இறைவனுக்கு நன்றி தெரிவிக்கும் வகையில், நோன்பிருக்கும் படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருக்க, நமது சமூகம் அதே நாளில் நோன்பிருந்து கொண்டு வேறு காரணங்களை கூறி வருவது வேதனையானது.

இஸ்ரவேலர்களிடமிருந்து நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் முஹர்ரம் பத்தாம் நாளில் காத்தருள் புரிந்ததற்காக, அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக அந்நாளில் நோன்பிருக்கும் படி நபி (ஸல்) அவர்கள் நமக்கு கட்டளையிட்டிருக்க, நமது சமூகமோ அந்நாளை துக்க நாளாக அனுஷ்டிப்பதும் அந்நாளில் ஹஸன் ஹுஸைனுக்காக நோன்பிருப்பதாக கூறிக் கொள்வதும் அறியாமை மாத்திரமல்லாமல், இணை வைப்புமாகும் என்பதனை நாம் உணர்ந்து கொள்ள வேண்டும்.

مَنْ تَشَبَّهَ بِقَوْمٍ فَهُوَ مِنْهُمْ 

மன் தஷப்பஹ பிகவ்மின் ஃபஹுவ மின்ஹும் (அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்கள்: அபூதாவூத் 4031, அஹ்மத் 5114)

என்பது நபிமொழி. எவ்வித உருவ வழிபாட்டிற்கும் அனுமதி இல்லாத மார்க்கத்தில் கையை (ஐந்தை உருவகப்படுத்தி) வழிபாடு நடத்தக்கூடியவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையான, 'யார் பிற சமூக மக்களின் நடைமுறைகளை பின்பற்றுகின்றனரோ அவர்கள், அந்த சமூகத்தைச் சேர்ந்தவர்களே' என்ற வாக்கை எண்ணிப்பார்க்க கடமைப்பட்டுள்ளனர். மற்றும் ஒர் அறிவிப்பில், 'அவர்கள் என்னைச் சேர்ந்தவர்களல்லர்' என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது. இந் நபிமொழிகள் மூலம் அத்தகையோர் இஸ்லாமிய வட்டத்திலிருந்து வெளியேறியவர்களாகவே கணிக்கப்படுவர்.

தீவிரமான ஷியா பிரிவு முஸ்லிம்களும், அவர்களைச் சார்ந்துள்ளவர்களும் படிப்படியாக தங்களது கை சின்னத்தை தெருமுனைக்கு கொண்டு வந்து முஹர்ரம் ஒன்று முதல் பத்து நாட்களும் சடங்கு செய்து வருகின்றனர் (இந்து முன்னணி, ஆர்.எஸ்.எஸ் போன்றவர்களால் வீதி முனைகளில் நிறுத்தப்பட்டுள்ள வினாயகர் சிலைகளைப் போல) 

தாயத்து, தட்டு போன்றவற்றை தொழிலாக செய்து வரும் சில முஸ்லிம் பெயர்தாங்கிகளால் இந்த கை சின்னத்திற்கு பத்து நாட்களும் சாம்பிராணி சடங்குகள் நிறைவேற்றப்படுகின்றன (பத்து நாட்களுக்கு வினாயகர் சிலைகள் பூஜை செய்யப்படுவது போல) 

முஹர்ரம் பத்தாம் நாள் கொடூரமான ஆயதங்களால் தங்களை தாங்களே தாக்கிக் கொண்டு இந்த கை சின்னத்தை பல்லக்கில் ஏற்றி ஊர்வலமாக பவனி வந்து ஒரிடத்தில் கூடி கலைகின்றனர். (வினாயகர் சிலைகளை ஊர்வலமாக எடுத்துச் சென்று கடல், ஆறு போன்ற நீர் நிலைகளில் கரைத்து மாசுபடுத்தி பின்னர் கலைந்து செல்பவர்களைப் போல).

இங்கு நாம் சுட்டிக்காட்டியிருப்பது ஒப்பீட்டுக்காக மட்டுமே. அதுவும் ஒருசில விஷயங்களை மாத்திரமே. விரிவஞ்சி விளக்கங்களை தவிர்த்துள்ளோம். இந்த சிறிய ஒப்பீட்டில் இருந்தே இவை எந்த அளவிற்கு மாற்று மதத்தவரின் வணக்க வழிபாடுகளை ஒத்திருக்கிறது என புரிந்து கொள்ளலாம். இவை தெளிவான இணைவைப்பு என்பதில் எவருக்கும் மாற்று கருத்து இருக்க முடியாது.

சிலர் மேற்குறிப்பிட்ட சடங்குகளை தவிர்ந்து கொண்டாலும், வேறு சில வழக்கங்களை கடைப்பிடித்து வருகின்றனர். அவற்றில் தமிழக கிராம அளவில் பிரசித்த பெற்ற ஹஸன் ஹுஸைன் ஃபாத்திஹா முக்கியமான ஒன்றாகும்.

முஹர்ரம் பத்தாம் நாள் அன்று கர்பலா யுத்தத்தின் நினைவாக அரிசி மாவில் கொழுக்கட்டைகள் செய்து அந்நாளில் (அப்போரில்) உயிர் நீத்தவர்களுக்காக ஃபாத்திஹா ஓதும் பழக்கம் காலகாலமாக கடைப்பிடிக்கப்பட்டு வருகின்றது. அதிலும் குறிப்பாக அப்போரில் வெட்டுப்பட்ட கை, கால், தலைகளை உருவகப்படுத்த இக்கொழுக்கட்டைகள் உருண்டையாகவும் நீளமாகவும் உருவாக்கப்படுகின்றன. நாங்கள் பாஞ்சா (கை உருவத்தை) தூக்குவதில்லை என பெருமைப்பட்டுக் கொள்ளும் சுன்னத் வல் ஜமாஅத்தினர் தான் இத்தகைய கை, கால், தலை கொழுக்கட்டைகளை உருட்டி (படையல்)விழா நடத்துக் கொண்டுள்ளனர்.

இச்சடங்கு சம்பிரதாயங்கள் சில இடங்களில் வெவ்வேறு விதமாக கடைப்பிடிக்கப்படுவதும் உண்டு. நமது நோக்கம் அவற்றை அனைவருக்கும் அறிமுகப்படுத்துவது அல்ல. எனவே பரவலாக அறியப்பட்ட இரு விஷயங்களை மட்டுமே இங்கே சுட்டிக்காட்டியுள்ளோம்.

பொதுவாகவே ஒரு பிதஅத் (தூதன அனுஷ்டானம்) நுழையுமானால், அங்கு ஒரு சுன்னத் (நபிவழி) மறைந்து விடும். இங்கே மேற்குறிப்பிட்ட விஷயங்கள் பித்அத் என்ற அளவுகோலையும் தாண்டி, ஷிர்க் (இணை வைப்பு) என்கிற அபாய கட்டத்தை தொட்டு விடுகின்றன என்பதனை உணர (அ) உணர்த்த நாம் கடமைப்பட்டுள்ளோம்.

அப்படியானால், முஹர்ரம் மாதம் குறித்து குர்ஆன் மற்றும் நபிமொழி வாயிலாக நமக்கு கிடைப்பது என்ன? என்பதனை முழுமையாக நாம் அறிந்து கொள்வது அவசியமாகும்.

முதலாவதாக, அல்குர்ஆனைப் பொறுத்தவரை,

முழுவருடத்தின் நான்கு மாதங்களை போர் செய்ய தடை செய்யப்பட்ட கண்ணியப்படுத்தப்பட்ட மாதங்களாக குறிப்பிடுகின்றது. அந்த நான்கு மாதங்கள் ரஜப், துல்கஅதா, துல்ஹஜ், முஹர்ரம் ஆகியவைகளாகும்.

இன்னும் அத்தியாயம் அல்ஹஜ்ஜின் 32 ஆம் வசனத்தில் குறிப்பிடும் போது, 'யார் அல்லாஹ்வின் அத்தாட்சிகளை கண்ணியப்படுத்துகிறாரோ அது அவரது உள்ளத்திலுள்ள தக்வாவின் அடையாளமாகும்' என்று குறிப்பிடுகின்றான். அதே அத்தியாயம் 36 ஆவது வசனத்திலும் இதே போன்றே குறிப்பிடுள்ளதையும் காணலாம்.

அதேபோல், ஹதீஸைப் பொறுத்தவரை,

'முஹர்ரம் மாதத்தை 'அல்லாஹ்வின் மாதம்' என ரஸுல் (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2157)

'முஹர்ரம் பத்தாம் நாள் நபி மூஸா (அலை) அவர்களை அல்லாஹ் இஸ்ரவேலர்களிடமிருந்து பாதுகாத்ததாக நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2082)

'முஹர்ரம் மாதம் பத்தாம் நாளில் இதே காரணத்திற்காக நபி (ஸல்) அவர்கள் நோன்பிருந்து உள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2083)

'முஹர்ரம் 9 இலும், 10 இலும் நோன்பிருக்கும் படி தனது தோழர்களை அறிவுறுத்தி உள்ளார்கள். (நூல்: முஸ்லிம் 2088)

ஆக, முஹர்ரம் மாதத்தில் நாம் செய்யக்கூடிய அமல்களாவன: நபி (ஸல்) அவர்களின் வழிகாட்டுதலின் படி அல்லாஹ்விற்கு நன்றி செலுத்தும் முகமாக முஹர்ரம் 9 மற்றும் 10 ஆகிய நாட்களில் நோன்பிருப்பதும், அம்மாதத்தை கண்ணியப்படுத்தும் முகமாக திக்ருகளை நஃபிலான வணக்கங்களை அதிகப்படுத்துவதுமேயாகும்.

வல்ல அல்லாஹ் நமக்கு அத்தகைய பண்பையும் பக்குவத்தையும் தந்தருள்வானாக.