கேள்வி! பதில்
1,கேள்வி :ஒரே நேரத்தில் பல பாங்குகளுக்கு பதில் சொல்லலாமா ?
பல பள்ளிவாசல்களில் ஒரே நேரத்தில் பாங்கு சொல்லும் சப்தத்தை கேட்கும் நபர் தன்னுடைய மஹல்லா பள்ளியின் பாங்கிற்கே பதில் சொல்ல வேண்டும்
ஃ பதாவா ஷாமி,பாகம் :1,பக்கம் 268
2,கேள்வி : தாடி இல்லாதவர் பாங்கு சொல்லலாமா ?
தாடியை சிரைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்படாத மிகவும் வன்மையாக கண்டிக்கப்பட்ட செயலாகும் எனவே தாடியை சிரைப்பது பாவமான செயலாக கருதப்படுவதால் இப்படிப்பட்ட நபர்கள் பாங்கு சொல்வதை மார்க்க அறிஞர்கள் மக்ரூஹ் என கூறுகிறார்கள்
ஃ பதாவா ஷாமி,பாகம் :5,பக்கம் 261
தஹ்தாவி : பக்கம் 108.
3,கேள்வி : தாடி யின் அளவு என்ன?
தடியின் அளவு ஒரு கைப்பிடி என்று மார்க்க அறிஞர்கள் குர்ஆன்,ஹதீஸ் ஆராய்ந்து கூறுகிறார்கள்.ஒரு பிடியை விட அதிகமானால் அப்படியே விட்டு விடலாமா ? அல்லது அதிகத்தை வெட்டிவிடலாமா ? எது சிறந்த முறை ? இரண்டையுமே சுன்னத் என குறிப்பிடுகிறார்கள்.
ரத்துல் முக்தார் ,பாகம் 2, பக்கம் 113.
4,கேள்வி : பாங்கை நடுவிலிருந்து கேட்டால் பதில் சொல்வது எப்படி?
பாங்கின் ஆரம்பத்திலிருந்து கேட்காமல் இடையிலிருந்து சப்தத்தை கேட்கும் நபர் பாங்கிற்கு பதில் ஆரம்பத்திலிருந்தே சொல்ல வேண்டும் .
ஃ பதாவா ஷாமி பாகம்1,பக்கம் 265
கேள்வி : மஸ்ஜிதில் பல் துலக்குவது கூடாது என்று சிலர் கூறுவது சரியா?
பதில் : பல் துலக்குவது சுன்னதான செயலாகும். உளு செய்வது, தொழுவது, குர்ஆன் ஓதுவது, வாயில் ஏதாவது மாற்றம் ஏற்படுவது போன்ற தேவைகள் ஏற்படும் போது வழியுறத்தப்பட்ட செயலாகவும் ஆகும். மஸ்ஜிதில் பல் துலக்குவது கூடாது என்று தெரிவிக்க கூடிய எவ்வித தடையும் இல்லாதபோது மஸ்ஜிதிலும் அதற்கு வெளியிலும் பல் துலுக்குவது கூடும் என்று அறிய முடிகிறது. நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”என் சமுதாயத்திற்கு சிரமம் ஏற்படாது என்று இருந்தால், ஒவ்வொரு தொழுகையின்போதும் பல் துலக்குமாரு ஏவியிருப்பேன்.”(1). இந்த நபிமொழியில் பல் துலக்குவதை பொதுவாக கூறப்பட்டுள்ளது என்பதை கவணிக்கும்போது கூடும் என்பதற்கு தான் ஆதாரம் இருக்கிறது என்பதை விளங்கலாம். ஆனாலும் அதில் அளவுகடந்து மஸ்ஜிதில் வாந்தி எடுத்து அசுத்தப்படுத்திவிடக் கூடாது என்பதில் கவணமாக இருக்வேண்டும்.
(1) அபு தாவூத் : 47, திர்மிதி : 22, நஸாயி :07
கேள்வி : என்னிடம் நல்ல தண்ணீர் இருக்கும் நிலையில் கடல் நீரில் உளு செய்வது கூடுமா? நிர்பந்தம் ஏற்படும்போது தான் கடல் நீரில் உளு செய்வது கூடும் என்று சிலர் கூறுகிறார்கள். வேறு சிலர்கள் கடல் நீரில் உளு செய்வது கூடாது என்கிறார்கள். இதனை எனக்கு தெளிவுபடுத்துங்கள்.
பதில் : கடல் நீரில் உளு செய்வது கூடும். நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள் : ‘‘கடல் நீர் தூய்மையானது, அதில் இறந்தவைகளும் அனுமதிக்கப்பட்டுள்ளது”(1). சுத்தமான தண்ணீர் உங்களிடம் இருந்தாலும் இல்லாவிட்டாலும் கடல் நீரில் உளு செய்வது தவறில்லை.
(1) நஸாயி 44, 143 அபு தாவூத் 83, இப்னு மாஜஹ் 386, 387
கேள்வி : ஒரு இளைஞன் திருமணம் செய்ய விரும்புகின்றான் ஆனாலும் திருமணத்தின் மூலம் சுமை ஏற்பட்டுவிடுமோ என்று அஞ்சுகிறான். பிறரிடம் எந்த தேவைகளையும் கேட்க கூடாது என்று அல்லாஹ்விடம் உடன்படிக்கை செய்துள்ளான். அவன் திருமணத்தை தவிர்ப்பது பாவமா?
பதில் : நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ”இளைஞர்களே உங்களில் யார் திருமணம் செய்ய சக்தி பெற்று இருக்கிறாறோ அவர் திருமணம் செய்துகொள்ளட்டும். நிச்சயமாக அது தவறான பார்வையை தடுக்க கூடியதாகவும் கற்பை பாதுகாக்க கூடியதாகவும் உள்ளது. யார் அதற்கு சக்தி பெறவில்லையோ அவர் நோன்பு நோற்கட்டும். அது அவருக்கு கேடயமாகும்”. (1) திருமணத்திற்கு சக்தி பெறுவது என்பது பொருளாதார சக்தியாகும். உடல் வலிமையல்ல. ஏனெனில் இந்த நபிமொழி உடல் வலிமையை பெற்றிருப்பவர்களை நோக்கிதான் பேசுகிறது. எனவே தான் திருமணத்திற்கு சக்தி பெறவில்லையெனில் நோன்பு நோற்கட்டும் என்று கட்டளையிடுகிறது. அந்த நோன்பு அவருக்கு கேடயமாக அமையும்.
வசதியில்லாதவன் கடன் பெற்று திருமணம் செய்வது விரும்பத்தக்க செயலா என்பது குறித்து அறிஞர்கள் மத்தியில் கருத்துவேறுபாடு நிலவுகிறது. அல்லாஹ் கூறுகிறான் : ”திருமணம் செய்வதற்கு சக்தியற்றவர்கள், அல்லாஹ் அவனது அருளால் அவர்களை செல்வந்தராக ஆக்கும் வரையில் பேணுதலுடன் இருந்துகொள்ளட்டும்”. (2)
நல்ல மனிதனைப் பொறுத்தவரையில் அவர் அல்லாஹ்விற்கு நிறைவேற்றவேண்டிய உரிமைகளையும் பிற மனிதர்களுக்கு நிறைவேற்றவேண்டிய உரிமைகளையும் சரிவர நிறைவேற்றுபவனாக இருப்பான்.
(1) புகாரி : 5065, முஸ்லிம் : 1400
(2) 24:33
கேள்வி : ஒரு கிராமத்தில் உள்ள மஸ்ஜித் மக்கள் வசிக்கும் பகுதியைவிட்டும் தூரமாக உள்ளது. இந்நிலையில் கிராமத்திற்கு நடுவில் பாங்கு சொல்வது கூடுமா அல்லது மஸ்ஜிதில் தான் சொல்லவேண்டுமா?
பதில் : நபி (ஸல்) அவர்களும் அவர்களது கலீஃபாக்களும் அவர்களுக்கு பின் வந்த முஸ்லிம்களும் நடைமுறைப் படுத்தியதை போன்று பாங்கு மஸ்ஜிதிலோ அல்லது அதற்கு அருகாமையிலோ தான் இருக்கவேண்டும். ஏனெனில் தொழுகையின் நேரத்தை அறிவிப்பு செய்வதும் அதற்காக அழைப்புவிடுப்பதும் மஸ்ஜிதில் தான் இருக்கவேண்டும். அதைவிட்டு தூரமாக இருக்க கூடாது. அதேவேளையில் மஸ்ஜிதில் இருந்தோ அதற்கு அருகாமையில் இருந்தோ பாங்கு சொல்லப்படும் போது பெரும்பான்மை மக்கள் அதனை செவியுற வாய்ப்பு இல்லையெனில் பொது நலனைக் கருத்தில் கொண்டு அனைவரும் கேட்பதற்குறிய இடத்திலிருந்து நிறைவேற்றுவதில் தவறில்லை.
கேள்வி : மக்ரிப் தொழுகையை பாங்கு சொன்னதும் தொழ வேண்டுமா? அல்லது பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் சுன்னத் தொழுவதற்கான நேரம் ஒதுக்க வேண்டுமா?
பதில் : வக்த் வந்ததும் மக்ரிப் தொழுகையை விரைவுபடுத்துவது குறித்து ஆதாரங்கள் உள்ளன. அதைப் போன்று மக்ரிப்புக்கு முன்னர் இரண்டு ரகாஅத் சுன்னத் தொழுவது குறித்தும் ஆதராங்கள் உள்ளது. நபி(ஸல்) கூறினார்கள் : “மக்ரிப்புக்கு முன்னர் தொழுங்கள், மக்ரிப்புக்கு முன்னர் தொழுங்கள் மூன்றாவதாக விரும்பியவர் தொழுட்டும் என்று கூறினார்கள்“. (1) இந்த நபிமொழி இரண்டு செயல்களுக்கும் ஆதாரமாக உள்ளது. யார் ஒருவர் பாங்கு சொன்னதும் மக்ரிப் தொழுகிறாறோ அதில் தவறில்லை. ஆனால் பாங்கிற்கும் இகாமத்திற்கும் இடையில் இரண்டு ரகாஅத் தொழுவது சிறப்புக்குறிய செயலாகும். நபித் தோழர்கள் மக்ரிப் தொழுகைக்கு முன்னர் இரண்டு ரகாஅத் தொழுபவர்களாக இருந்தார்கள். நபி(ஸல்) அவர்களும் அதனை அங்கீகரித்துள்ளார்கள். இது தொடர்பான அலி(ரலி) அவர்களின் அறிப்பு முஸ்லிமில் இடம்பெற்றுள்ளது.
(1) புகாரி : 1183, அபூதாவூத் : 1281
கேள்வி : நபி (ஸல்) அவர்கள் மிஃராஜின் போது கண்கூடாக அல்லாஹ்வை பார்த்தார்களா இல்லையா?
பதில் : இது பற்றி நபி(ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டபோது “ஒளியை பார்த்தேன்” (1) மற்றொரு அறிவிப்பில் “அவன் ஒளியானவன் எவ்வாறு பார்க்க முடியும்” (2) என்கின்ற ஆதாரங்களின் அடிப்படையில் ”மிஃராஜ் பயணத்தின் போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை கண்கூடாக பார்க்கவில்லை என்பது அஹ்லுஸ் ஸுன்னாவின் கொள்கையாகும்.
”மரணிக்கும் வரையில் ஒருவரும் இறைவனை பார்க்க முடியாது என்பதை தெரிந்துகொள்ளுங்கள்” (3) என்றும் நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(1) முஸ்லிம் : 178
(2) முஸ்லிம் : 178, திர்மிதி : 3282
(3) முஸ்லிம் : 2931
கேள்வி : வாஜிபிற்கும் சுன்னத்திற்கும் உள்ள வேறுபாடு என்ன?
பதில் : நடைமுறையில் வாஜிப் என்பது அதை செய்வதனால் நன்மையும் விடுவதனால் தன்டனைக்குறியதும் ஆகும். சுன்னத் என்பது அதை செய்வதனால் நன்மை உள்ளது ஆனால் அதை விடுவது தன்டனைக்குறியது அல்ல.
கேள்வி : ஒரே பகுதியில் உள்ள பல மஸ்ஜிதுகளில் ஒலிபெருக்கியை பயண்படுத்தி பாங்கு சொல்வது கட்டாயமா? ஒரு மஸ்ஜிதில் சொல்ல கூடிய பாங்கே அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் கேட்ககூடியதாக உள்ளது. அப்படியிருக்கையில் ஒரு மஸ்ஜிதில் மட்டும் பாங்கு சொன்னால் போதாதா?
பதில் : பாங்கு என்பது ஃபர்ளு கிஃபாயா (பொதுவான கடமை) ஆகும். ஒரு பகுதியில் இருக்கின்ற முஅத்தின் கூறிய பாங்கு அப்பகுதியில் உள்ள அனைவருக்கும் கேட்குமானால் அது போதுமானது. பாங்கு சொல்வதற்குறிய ஆதாரம் பொதுவாக கூறப்பட்டுள்ளது. அதனை கருத்தில் கொன்டு ஒவ்வொரு மஸ்ஜிதிலும் பாங்கு கூறுவது அனுமதிக்கப்பட்டதுதான்.
கேள்வி : ரமளான் அல்லாத மாதங்களில் சனிக்கிழமை நோன்புநோற்பது கூடுமா? அரஃபா தினம் சனிக்கிழமை வந்தால் என்ன செய்வது?
பதில் : சனிக்கிழமை மட்டும் நோன்புநோற்பது விரும்பத்தக்கது அல்ல. அப்துல்லா பின் புஸ்ரு தன் சகோதரர் மூலம் அறிவிக்கிறார் : ”நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ் கடமையாக்கிய நோன்பை தவிர மற்ற நோன்புகளை சனிக்கிழமை நோற்காதீர்கள். திராட்ச்சையின் பட்டை அல்லது மரத்தின் வேரை தவிர மற்றவை கிடைக்காவிட்டாலும் அதனையாவது மென்றுகொள்ளட்டும்” (1). சனிக்கிழமைகளில் மட்டும் நோன்புநோற்பது விரும்பத்தக்கது அல்ல என்பதற்கு காரணம்இ அன்றைய நாளை யூதர்கள் சிறப்புக்குரியதாக கருதுகின்றனர்.
இப்னு குதாமா (ரஹ்) கூறினார்கள் : சனிக்கிழமை மட்டும் நோன்கு நோற்பது தான் கூடாதுஇ அதற்கு முந்திய அல்லது பிந்திய நாட்களுடன் சேர்த்து நோன்புநோற்பது கூடும். வழமையாக நோன்குநோற்பவரது நோன்பு சனிக்கிழமை வந்தால் அதுவும் தவறில்லை. அபூ ஹுரைரா (ரலி) மற்றும் ஜுவைரியா (ரலி) அவர்களின் அறிவிப்புகள் இதற்கு ஆதாரமாக உள்ளன (2). அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ”உங்களில் எவரும் வெள்ளிக்கிழமையில் மட்டும் நோன்புநோற்க வேண்டாம். அதற்கு முந்திய பிந்திய நாட்களுடன் சேர்த்தே தவிர” என்று நபி (ஸல்) அவர்கள் கூறுவதை நான் கேட்டேன் (3). ஜுவைரியா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : வெள்ளிக்கிழமை ஜுவைரிய (ரலி) அவர்கள் நோன்புநோற்றிருக்கும் நிலையில் நபி (ஸல்) அவாகள் அவரிடம் வந்துஇ நேற்று நீ நோன்பு நோற்றாயா என்று கேட்டார்கள். அதற்கு (ஜுவைரியா (ரலி)) அவர்கள் இல்லை என்றார்கள். நாளைய தினம் நீ நோன்புநோற்க விரும்புகிறாயா? என்று கேட்டார்கள். அதற்கும் அவர்கள் இல்லை என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் : அப்படியானால் நீ நோன்பை முறித்துவிடு என்று கூறினார்கள்(4).
மேற்கூறப்பட்ட இரண்டு நபிமொழிகளும் ரமளான் அல்லாத காலங்களில் வெள்ளிக்கிழமையுடன் சேர்த்து சனிக்கிழமை நோன்புநோற்பது கூடும் என்று தெரிகிறது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வுக்கு மிகவும் பிடித்தமான நோன்பு நபி தாவூத் (அலை) அவர்களின் நோன்பாகும். அவர் ஒருநாள் விட்டு ஒருநாள் நோன்புநோற்பவராக இருந்தார்(5).
அரஃபா நோன்போ, ஆஷுரா நோன்போ அல்லது ஒருவர் வழமையாக நோற்ககூடிய நோன்போ சனிக்கிழமையில் வந்தால் அந்நாளில் அதை நோற்பது தவறில்லை என்பதை இந்த நபிமொழி சுட்டிக்காட்டுகிறது.
இப்னு ஹஜ்ர் அஸ்கலானி (ரஹி) அவர்கள் கூறினார்கள் : நபி (ஸல்) வெள்ளிக்கிழமை மட்டும் நோன்புநோற்பதை தடைசெய்துள்ளார்கள். எனினும் அரஃபா நோன்போ அல்லது வழமையாக நோற்கும் நோன்போ வெள்ளியன்று வந்தால் அதை நோற்பதில் தவறில்லை. அதேபோன்று தான் சனிக்கிழமை நோன்புநோற்பதும் (பத்ஹுல் பாரி).
இப்னு ஹுஸைமின் (ரஹி) அவர்கள் கூறினார்கள் : நான்கு நிலைகளில் சனிக்கிழமை நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டுள்ளது. அதில் ஒன்று தான் அரஃபா தினம் ஆஷுரா தினம் போன்ற நோன்புநோற்க அனுமதிக்கப்பட்டுள்ள நாட்களாகும் (6)
(1) திர்மிதி : 744, அபூதாவூத் : 2421, இப்னு மாஜஹ் : 1726
(2) அல்-முக்னி : 52ஃ3
(3) புகாரி : 1985, முஸ்லிம் : 1144
(4) புகாரி : 1986
(5) புகாரி : 2420
(6) மஜ்மூஉ ஃபதாவா வ ரஸாயில் : 57 ஃ 20
கேள்வி : பாலூட்டும் பெண்ணும் கர்ப்பிணியும் ரமளான் மாதத்தில் தனக்கோ தன் பிள்ளைக்கோ பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சி நோன்பை விட்டுவிடுகிறார்கள். இவர்கள் என்ன செய்ய வேண்டும்?. 1) ரமளானில் நோன்பை விட்டுவிட்டு பிறகு அதனை களா செய்து பரிகாரமாக ஏழைகளுக்கு உணவளிக்க வேண்டுமா?, 2) பரிகாரம் செய்யாமல் களா மட்டும் செய்தால் போதுமானதா? 3) களா செய்யாமல் பரிகாரம் மட்டும் செய்தால் போதுமா? மூன்றில் எது சரி?
பதில் : கர்ப்பிணி தனக்கோ தன் குழந்தைக்கோ பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சி நோன்பை விட்டுவிட்டால் அவள் அதனை களா மட்டும் செய்தால் போதுமானது. அவளது நிலை நோன்பு நோற்க இயலாத அல்லது நோன்பினால் பாதிப்பு ஏற்படுமோ என்று அஞ்சுகின்ற நோயாளியை போன்றுதான். அல்லாஹ் கூறுகிறான் : ”யார் நோயாளியாகவோ அல்லது பயணியாகவோ இருக்கின்றாரோ (நோன்பு நோற்பதற்கு) வேறு நாட்களை அவர்கள் கணக்கிட்டுகொள்ளவேண்டும்” [1].
இதைப்போன்று தான் பாலூட்டும் பெண்மணியும் களா மட்டும் செய்தால் போதுமானது.
[1] 2 : 185
கேள்வி : குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில், ஈஸா (அலை) அவர்கள் உயிருடன் இருக்கிறார்களா? அல்லது மரணித்துவிட்டார்களா?
பதில் : ஈஸா (அலை) அவர்கள் உயிரோடு இருக்கிறார்கள் என்பது தான் அஹ்லுஸ் சுன்னா வல் ஜமாஅத்தின் கொள்கை. அல்லாஹ் அவரை வானத்தின் பக்கம் உயர்த்தினான். மறுமைக்கு முன்பாக அவர் வானத்திலிருந்து இறங்கிவந்து நபி(ஸல்) அவர்களின் மார்க்கத்தின் அடிப்படையில் நீதத்துடன் ஆட்சி புரிவார். நபி (ஸல்) அவர்கள் கொண்டுவந்த சத்தியத்தின பக்கம் அழைப்பு விடுவார். இதனைத் தான் குர்ஆனும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் தெரிவிக்கின்றன. யூதர்களுடைய அவதூறுகளுக்கு பதிலளிக்கும் போது அல்லாஹ் கூறுகிறான் : ”இன்னும், ‘நிச்சயமாக நாங்கள் அல்லாஹ்வின் தூதராகிய – மர்யமின் குமாரராகிய-ஈஸா மஸீஹை கொன்றுவிட்டோம்’ என்று அவர்கள் கூறுவதாலும் (அவர்கள் சபிக்கப்பட்டனர்). அவர்கள் அவரைக் கொல்லவுமில்லை, அவரை அவர்கள் சிலுவையில் அறையவுமில்லை. ஆனால் அவர்களுக்கு (அவரைப் போன்ற) ஒருவன் ஒப்பாக்கப்பட்டான்;. மேலும் இ(வ் விஷயத்)தில் அபிப்ராய பேதம் கொண்டவர்கள், அதில் சந்தேகத்திலேயே இருக்கின்றார்கள் – வெறும் யூகத்தைப் பின்பற்றுவதேயன்றி அவர்களுக்கு இதில் எத்தகைய அறிவும் கிடையாது. நிச்சயமாக அவர்கள், அவரைக் கொல்லவே இல்லை’‘. (1).
ஈஸா (அலை) அவர்களை கொலைசெய்தோம் சிலுவையில் அறைந்தோம் என்ற யூதர்களின் வாதத்தை அல்லாஹ் நிராகரிக்கிறான். மேலும் அவரை அல்லாஹ் தனது அருளாலும் அவரை கண்ணிப்படுத்தும் விதமாகவும் தன்னளவில் உயர்த்திக்கொண்டான் என்று கூறுகிறான். இதனை அல்லாஹ் தனது தூதர்களில், அவர் நாடுவோருக்கு வழங்கக் கூடிய அற்புதாக ஆக்கியுள்ளான். ஆரம்பத்திலும் கடைசியிலும் ஈஸா(அலை) அவர்களுக்கு அல்லாஹ் ஏராளமான அற்புதங்களை வழங்கியுள்ளான். ”மாறாக அல்லாஹ் அவரை தன்னளவில் உயர்த்திக்கொண்டான்(2)” என்ற வசனத்தில் யூதர்களுக்கு மறுப்பளிப்பதன் நோக்கம் அல்லாஹ் அவரை உடலோடும் உயிரோடும் உயர்த்திக்கொண்டான் என்பதாகும். ஏனெனில், அவரது உயிரை மட்டும் கைப்பற்றி இருந்தால் அது அவர்களுக்கு மறுப்பாக இருக்காது. மேலும் இவ்வாறு செய்வது அல்லாஹ்வின் முழுமையான கண்ணியம் மற்றும் ஆற்றளை பறைச்சாற்றுவதாக உள்ளது. எனவேதான் அந்த வசனத்தின் இறுதியில் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான், ”அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தாவனாகவும் நுட்பமானவனாகவும் இருக்கிறான்”(3).
”வேதமுடையவர்களில் எவரும் தாம் இறப்பதற்கு முன் அவர் (ஈஸா) மீது ஈமான் கொள்ளாமல் இருப்பதில்லை. ஆனால் மறுமை நாளில் அவர் அவர்களுக்கு எதிராக சாட்சி சொல்பவராக இருப்பார்”(4). அனைத்து வேதக்காரர்களும் ஈஸா (அலை) அவர்களின் மரணித்திற்கு முன்னர் அவர் மீது நம்பிக்கைகொள்வார்கள். அது அவர்கள் இறுதிகாலகட்டத்தில் வருகின்றபோதுதான் என்பதனை பற்றிய விளக்கங்கள் நபிமொழிகளில் வந்துள்ளது. அபூ ஹுரைரா (ரலி) அறிவிக்கிறார்கள் : ‘‘நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : அல்லாஹ்வின் மீது ஆணையாக, நீதத்தோடும் நியாயத்தோடு ஈஸா (அலை) அவர்கள் உங்களுக்கு மத்தியில் இறங்குவதற்கு நெருங்கிவிட்டார். அவர் சிலுவையை முறிப்பார். பன்றிகளை கொள்வார். ஜிஸ்யா (வரி)யை தள்ளுபடி செய்வார். அந்நாளில் செல்வம் பெருகும். எந்த அளவுக்கெனில் அதனை யாரும் பெற்றுக்கொள்ள மாட்டார்கள்’‘(5). மற்றொரு அறிவிப்பில் நபி (ஸல்) கூறினார்கள் : ” உங்களில் ஒருவர் உங்களுக்கு தலைவராக இருக்கும் நிலையில் ஈஸா (அலை) உங்களிடையே இறங்கி வருவார். அப்போது உங்களது நிலை எவ்வாறாக இருக்கும்”(6). ஜாபிர் பின் அப்துல்லாஹ் அறிவிக்கிறார்கள் : ” நபி (ஸல்) கூறுவதை நான் செவியேற்றுள்ளேன். மறுமை நாள் வரை சத்தியத்திற்காக போராடுகின்ற ஒரு கூட்டம் என் சமுதாயத்தில் இருந்துகொண்டே இருப்பார்கள். அவர்களுக்கு மத்தியில் ஈஸா (அலை) அவர்கள் இறங்குவார்கள். அப்போது அவர்களது தலைவர் ஈஸா (அலை) அவர்களை நோக்கி ”வாருங்கள் எங்களுக்கு இமாமாக இருந்து தொழுகை நடத்துங்கள்” என்று கூறுவார். அதற்கு ஈஸா (அலை) அவர்கள், ”உங்களில் சிலர் சிலருக்கு தலைவர்களாவர். அது அல்லாஹ் இந்த சமுதாயத்திற்கு வழங்கிய சிறப்பாகும்” என்று கூறுவார்கள்”(7).
ஈஸா (அலை) அவர்கள் இறுதியில் வருவார்கள். நபி(ஸல்) அவர்களின் மார்க்கச் சட்டங்களின் அடிப்படையில் ஆட்சி நடத்துவார்கள். தொழுகை மற்றும் ஏனைய விஷயங்களுக்கு இந்த சமுதாயத்தைச் சார்ந்தவர்களே இருப்பார்கள் என்று இந்த நபிமொழி தெரிவிக்கின்றது.
நபித்துவம் நபி (ஸல்) அவர்களுடன் முற்றுப்பெற்றுவிட்டது என்பதற்கும் ஈஸா (அலை) அவர்களின் வருகைக்கும் மத்தியில் எவ்வித முரண்பாடும் இல்லை. ஏனெனில் ஈஸா (அலை) அவர்கள் ஒரு புதிய மார்கத்துடன் வரவில்லை.
யார், ஈஸா (அலை) அவர்கள் கொல்லப்பட்டார்கள் என்றோ சிலுவையில் அறையப்பட்டார்கள் என்றோ வாதிடுகிறானோ அவன் காஃபிராவான். ஏனெனில் அவன் அப்பட்டமாக குர்ஆன் வசனத்தையும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகளையும் மறுக்கிறான். அதேபோல் முஸ்லிமாக இருந்துகொண்டு யார், யூதர்கள் ஈஸா (அலை) அவர்களை சிலுவையில் அறைவதற்கும் கொல்லுவதற்கும் முயன்றபோது அல்லாஹ் அவரை மரணிக்கச் செய்தான் என்று நம்புகின்றாரோ அவர் குர்ஆனுக்கும் ஆதாரப்பூர்வமான நபிமொழிக்கும் முரண்படுவதானால் வழிகேட்டில் சென்றுவிடுகிறார்கள். இந்த தவறான புரிதலுக்கு காரணம் அல்லாஹ்வின் வசனத்தை தவறகாக புரிந்துகொண்டதுதான். ”‘ஈஸாவே! நிச்சயமாக நான் உம்மைக் கைப்பற்றுவேன்;. இன்னும் என்னளவில் உம்மை உயர்த்திக் கொள்வேன்;. நிராகரித்துக் கொண்டிருப்போருடைய (பொய்களில் நின்றும்) உம்மைத் தூய்மைப்படுத்துவேன்;. மேலும் உம்மைப் பின்பற்றுவோரை கியாம நாள் வரை நிராகரிப்போருக்கு மேலாகவும் வைப்பேன்;. பின்னர் உங்களுடைய திரும்புதல் என்னிடமே இருக்கிறது. (அப்போது) நீங்கள் தர்க்கம் செய்து கொண்டிருந்தது பற்றி நான் உங்களிடையே தீர்ப்பளிப்பேன்’ என்று அல்லாஹ் கூறியதை (நபியே! நினைவு கூர்வீராக)!(8).
இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள ”தவஃப்ஃபா” என்ற வார்த்தைக்கு மரணித்தல் என்று விளக்கமளித்தார்கள். இந்த விளக்கம் முன்னோர்களுடைய விளக்கத்திற்கும் நிராகரிப்பாளரான எதிரிகளிடமிருந்து அல்லாஹ் ஈஸா (அலை) அவர்களை காப்பாற்றி பூமியிலிருந்து தன் பக்கம் உயர்த்திக் கொண்டான் என்பதற்கும். இறுதியில் அவர் பூமிக்கு இறங்கி வருவார் வேதக்காரர்கள் அல்லாதவர்களும் அவரை நம்பிக்கை கொள்வார்கள் என்பதற்கும் முரணாகும்.
(1) 4:157
(2) 4:158
(3) 4:158
(4) 4:159
(5) புகாரி : 2222, முஸ்லிம் : 155
(6) முஸ்லிம் : 155
(7) முஸ்லிம் : 156
(8) 3:55
கேள்வி : திருட்டு, விபச்சாரம் போன்ற தண்டனைக்குறிய பெரும்பாவங்களுக்கு பாவமன்னிப்பு உண்டா?. பாவமன்னிப்பின் மூலம் தண்டனை நிறைவேற்றப்படுவது தடுக்கப்படுமா?. இஸ்லாமிய சட்டம் இல்லாத நாடுகளில் பெரும்பாவம் செய்தவன் என்ன செய்வது?
பதில் : (இஸ்லாமிய நாடுகளில்) நீதிபதியிடம் வழக்குவந்து ஆதாரங்களும் போதுமானவையாக இருந்தால் தண்டனை நிறைவேற்றவேண்டும். பாவமன்னிப்பு கோரியதானால் தள்ளுபடி செய்யமுடியாது. ”காமிதியா குலத்தைச் சார்த பெண் பாவமன்னிப்பு கோரியதற்கு பிறகு நபி (ஸல்) அவர்களிடம் வந்து தண்டிக்க வேண்டினார். அப்பெண்னைக் குறித்து நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள் : அவர் பாவமன்னிப்பு கோரினார் அவருடைய பாவமன்னிப்பை மதினாவைச் சார்ந்த 70வது நபர்களுக்கு பகிர்ந்துஅளிக்கப்பட்டால் அது அவர்களுக்கு போதுமானதாக இருந்திருக்கும்”(1). இந்த நபிமொழியில் அப்பெண் பாவமன்னிப்பு கோரியிருந்தாலும் அவருக்குரிய தண்டனையை நிறைவேற்றினார்கள்.
இஸ்லாமிய ஆட்சி இல்லாதபோது தனது பாவத்தை மறைத்து அல்லாஹ்விடத்தில் உண்மையாக பாவமன்னிப்பு கோரவேண்டும். ஒருவேளை அல்லாஹ் அவரது பாவமன்னிப்பை ஏற்கக்கூடும்.
(1) முஸ்லிம் : 1696, திர்மிதி : 1435, அபூதாவூத் : 4440
கேள்வி : ”நடு விரலிலும் ஆட்காட்டி விரலிலும் மோதிரம் அணிவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்” என்றும் மற்றொரு அறிவிப்பில் ”நடு விரலிலும் அதற்கடுத்த விரலிலும்” என்றும் நபிமொழிகள் உள்ளது. இதில் அடுத்த விரல் என்பது ஆட்காட்டி விரலா அல்லது மோதிர விரலா?. எந்த விரலில் மோதிரம் அணிவது?
பதில் : இடது, வலது கைகளில் மோதிர விரலில் ஆண்கள் (தங்கம் அல்லாத) மோதிரம் அணிவது கூடும். நடு விரலிலும் ஆட்காட்டி விரலிலும் வெறுக்கத்தக்கதாகும். அலி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : ”இந்த விரலிலும் இந்த விரலிலும் நான் மோதிரம் அணிவரை நபி(ஸல்) அவர்கள் தடுத்தார்கள் என்று தனது நடு விரலையும் அதற்கடுத்த விரலையும் சுட்டிகாட்டினார்கள்” (1). வேறு அறிவிப்புகளில் அற்கடுத்த விரல் என்பது ஆட்டிகாட்டி விரல் தான் என்பது தெளிவுபடுத்தப்பட்டுள்ளது. அலி(ரலி) அவர்கள் கூறினார்கள் : ” கிஸ்ஸி (எகிப்து, சிரியா நாட்டு ஆடை), சிகப்பு கம்பளங்களால் அலங்கரிக்கப்பட்ட வாகனம் மற்றும் இந்த விரலிலும் இந்த விரலிலும் மோதிரம் அணிவதை நபி (ஸல்) அவர்கள் தடைசெய்தார்கள் என்று தனது நடு விரலையும் ஆட்காட்டி விரலையும் சுட்டிகாட்டினார்கள்’‘(2).
எனவே ஆட்காட்டி விரலிலும் சுட்டு விரலிலும் தான் மோதிரம் அணிய தடை உள்ளது.
(1) முஸ்லிம் : 2078
(2) திர்மிதி : 1786
கேள்வி : ரமளானில் பணத்திற்காக அல்லாமல் சீட்டு விளையாடுவது கூடுமா?
பதில் : பணத்திற்காக சீட்டு விளையாடுவது தடைசெய்யப்பட்ட சூதாட்டமாகும். ஏனெனில் அது பிறரது செல்வத்தை அநியாயமான முறையில் உண்பதாகும். அவ்விளையாட்டில் பகைமையும் அல்லாஹ்வின் நினைவை விட்டு தடுக்கின்ற செயலும் இருப்பதனால் அல்லாஹ் அதனை மதுவுடன் இனைத்து கூறியுள்ளான். அல்லாஹ் கூறுகின்றான் : ”மது, சூதாட்டம் ஆகியவற்றின் மூலமாக உங்களுக்கு மத்தியில் வெறுப்பையும் பகைமையையும் ஏற்படுத்துவதற்கு ஷைத்தான் விரும்புகின்றான். மேலும் தொழுகையை விட்டும் அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டும் உங்களை தடுப்பதற்கும் விரும்புகின்றான். எனவே அதனை விட்டும் நீங்கள் விலகிக்கொள்ளமாட்டீர்களா?.”(1).
பணத்திற்காக அல்லாமல் சீட்டு விளையாடுவதும் ஹராம்தான். ஏனெனில் அது, அல்லாஹ்வை நினைவு கூறுவதை விட்டும் தொழுகையை விட்டும் ரமளானிலும் மற்ற மாதங்களிலும் மனிதனை தடுக்கக் கூடியாதாக உள்ளது.
(1) 5:91
கேள்வி : நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது ஹராமா?
பதில் : நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது ஹராமல்ல எனினும் உட்கார்ந்த நிலையில் சிறுநீர் கழிப்பது சுன்னதாகும். ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் : ”நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்று உங்களுக்கு யாராவது சொன்னால் அதனை நம்பாதீர்கள், நபி (ஸல்) அவர்கள் அமர்ந்துகொண்டே தவிர சிறுநீர் கழிக்கவில்லை.” (1) இப்பாடத்தில் வந்துள்ள மிக ஆதாரப்பூர்வமான செய்தி இதுவாகும். என்று திர்மிதி இமாம் அவர்கள் கூறியுள்ளார்கள். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் சிறுநீர் கழிக்கும்போது ஆயிஷா (ரலி) அவர்கள் நபி(ஸல்) அவர்களை மறைப்பதற்காக திரைபிடித்து நின்றுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டு சிறுநீர் கழித்தார்கள் என்கிற அனுமதியும், உமர் (ரலி), அலி (ரலி), இப்னு உமர் (ரலி), ஜைது பின் ஸாபித் (ரழி) மூலமாக அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஹுதைஃபா (ரளி) அறிவிக்கிறார்கள் : ”நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத்தாரின் குப்பை மேட்டிற்கு வந்த போது நின்கொண்டு சிறுநீர் கழித்தார்கள்,” (2). மேற் கூறிய இரண்டு ஹதீஸ்களுக்கும் இடையில் எவ்வித முரண்பாடும் இல்லை. நின்றுகொண்டு சிறுநீர் கழித்தது, அந்த இடம் அமர்வதற்கு பொருத்தமில்லாமல் இருக்கலாம். அல்லது நின்றுகொண்டு சிறுநீர் கழிப்பது ஹராமல்ல என்று தெரிவிப்பதற்காகவும் இருக்கலாம். அமர்ந்து கொண்டு சிறுநீர் கழிப்பது சுன்னது தான், கட்டாயமல்ல. கட்டாயமானதாக இருந்திருந்தால் தான் அதற்கு மாறுசெய்வது ஹராமாகும்.
(1) திர்மிதி : 12 (2) புகாரி : 394
No comments:
Post a Comment