திப்பு சுல்தான் வரலாறு
காந்திஜி ‘யங் இந்தியா’ 23 ஜனவரி 1930 தேதியிட்ட இதழில் பக்கம் 31-ல் இப்படி எழுதுகிறார்;
‘மைசூரின் பதேஹ்அலி திப்பு சுல்தானைப் பற்றி வெளிநாட்டு வரலாற்றாளர்கள் மதவெறியர் என்றும் இந்து குடிமக்களை வலுக்கட்டாயமாக இஸ்லாம் மதத்திற்கு மாற்றினார் என்றும் எழுதுகிறார்கள்.
ஆனால் அவர் அப்படிப் பட்டவரல்ல. அதற்கு நேர்மாற்றமாக அவர் இந்துக்களுடன் நல்லிணக்கத்தை கடைப்பிடித்திருந்தார். சிருங்கேரி மடத்தின் சங்கராச்சாரியாருக்கு திப்பு எழுதிய 30-க்கும் மேற்பட்ட கடிதங்கள் மைசூர் அரசின் தொல்பொருள் ஆய்வு நிலையத்தில் இருக்கிறது.
அவை கன்னட மொழியில் எழுதப் பட்டவை. அவற்றில் ஒரு கடிதத்தில் திப்பு சங்கராச்சாரியாரின் கடிதம் தன்னிடம் கிடைக்கப்பெற்றதை தெரியப் படுத்தி, அவரை தனக்காகவும், நாட்டு மக்களுக்காகவும், மற்றும் உலக அமைதிக்காகவும் ஒரு யாகம் நடத்தச் சொல்லி கேட்டுக் கொண்டுள்ளார்.
மேலும், நன்மக்கள் இருக்கும் இடத்தில்தான் மழை பெய்யும் என்பதைச் சொல்லி சிருங்கேரியிலிருந்த சங்கராச்சாரியாரை மைசூருக்கே திரும்ப வந்துவிடும்படியும் வேண்டுகோள் விடுத்திருக்கிறார்.
அவரது இந்தக் கடிதம் இந்திய வரலாற்றில் பொன்னெழுத்துகளால் பொறிக்கப்பட வேண்டிய ஒன்று.’
மேலும் ‘திப்பு சுல்தான் இந்து முஸ்லிம் ஒற்றுமையின் உருவாக்கம்‘ எனவும் காந்தி ‘யங் இந்தியா’வில் எழுதினார்.
விக்கிரக ஆராதனையாளர்களை தரைமட்டமாக்கி அழித்த, எட்டாயிரம் ஆண்கள், பெண்கள் ஆகியோரை சிறைப்படுத்திய, காபிர்களில் ஆண்கள் சிறுவர்கள் என பேதமில்லாமல் அனைவர் கழுத்துக்களுக்கும் தலையை சுமக்கும் பாரம் இல்லாமலாக்கிய ஒருவரைப் பற்றி காந்தி ஏன் இப்படி எதிர்மறையான கருத்தைச் சொல்ல வேண்டும்?
சாரதா கோவிலை மறுநிர்மாணம் செய்வதற்காக சிருங்கேரி மடத்திலிருந்து சங்கராச்சாரியார் திப்பு சுல்தானுக்கு கடிதம் எழுதினார். திப்பு சங்கராச்சாரியார் மீது மிகுந்த மதிப்பு கொண்டிருந்தார் என்பதற்கு ஆதாரங்களாக அவர் எழுதிய கடிதங்கள் இன்னும் இருக்கின்றன.
டாக்டர் எஸ். ராதாகிருஷ்ணன் தனது ‘Present Cresis of Faiths’ என்ற நூலில் குறிப்பிட்டார், ‘திப்பு பல சந்தர்ப்பங்களில் சிருங்கேரி சங்கராச்சாரியாரிடம் நாட்டு நலனுக்காக பூசைகள் செய்யும்படி கேட்டுக் கொண்டுள்ளார்.
குறிப்பாக, ஒருமுறை சங்கராச்சாரியாரின் வழிகாட்டுதல்படி சஹஸ்ர சண்டி ஜபம் நடத்தப்பட்டபோது திப்பு மிகுந்த மகிழ்ச்சியை தெரிவித்தார்.
’ கோழிக்கோட்டில் உள்ள இந்துக்கள் அனைவரையும் இஸ்லாத்திற்கு கொண்டு வந்தது போதாமல் கொச்சியில் உள்ளவர்களையும் இஸ்லாமை தழுவச் செய்வது தன்னுடைய ஜிகாத் என்று அறிவித்த ஒருவருக்கு இந்துக்களின் ஆன்மீகத் தலைவரான சங்கராச்சாரியார் ஏன் கடிதம் எழுதினார்?
இஸ்லாமிய மத வெறியரான ஒருவர் நாட்டு நலனுக்காக இந்துமத முறைப்படி யாகங்கள் செய்யும்படி ஏன் சங்கராச்சாரியாரிடம் கேட்டுக் கொண்டார்?
‘இஸ்லாம் மதத்திற்கு மாறும்படி வற்புறுத்தியதால் 3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்டார்கள்’ என்று வரலாற்று புத்தகத்தில் எழுதிய ஹரி பிரசாத் சாஸ்திரி அதற்கு ஆதாரமாக மைசூர் கெசட்டை காட்டினார்.
ஆனால் மைசூர் கெசட்டை ஆய்வு செய்து அதன் புதிய பதிப்பை எடிட் செய்த பேராசிரியர் ஸ்ரிகந்தையா, ‘3000 பிராமணர்கள் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் மைசூர் கெசட்டில் எங்குமே குறிப்பிடப் படவில்லை.
மைசூர் வரலாற்றை ஆய்வு செய்து வரும் ஒரு மாணவன் என்ற முறையில் நான் அடித்துச் சொல்வேன், இப்படி ஒரு சம்பவம் நடக்கவே இல்லை‘ என்கிறார். மைசூர் பல்கலைக் கழகத்தின் பேராசிரியர் ஸ்ரிகந்தையாவின் கண்ணில் படாத ஒரு சம்பவம் கல்கத்தா பல்கலைக் கழக சம்ஸ்கிருத துறைத் தலைவரான ஹரி பிரசாத் சாஸ்திரி கண்ணில் எப்படி பட்டது?
இந்திய வரலாறு எந்த அளவிற்கு திரிக்கப்பட்டு சாயமேற்றப்பட்டு உருமாறிக் கிடக்கிறது என்பதற்கு இவை மிகச்சிறிய உதாரணங்கள். வரலாற்றுத் திரிபுகளுக்கு மத்தியில் உண்மையைத் தேடுவது வைக்கோல் போருக்குள் ஊசியை தேடுவதை விட சிரமமானதாகியிருக்கிறது.
ஆங்கிலேயர்களுக்கு சிம்ம சொப்பனமாகவும் பெரும் சவாலாகவும் இருந்தவர் திப்பு சுல்தான். ‘Haider Ali and Tipu Sultan were formidable adversaries who inflicted a severe defeat on the British and came near to breaking the power of the East India Company‘ என The Discovery of India, (6th edn., London, 1956, pp.272-73) என்ற நூலில் குறிப்பிடுகிறார் ஜவஹர்லால் நேரு.
முதலாம் மற்றும் இரண்டாம் மைசூர் போர்களில் கடும் தோல்வியைச் சந்தித்த ஆங்கிலேயர், திப்புவை நேருக்கு நேர் போரிட்டு வெல்ல முடியாது என்பதை புரிந்துக்கொண்டு அவர்களின் வழக்கமான ‘ஆயுதமான’ பிரித்தாளும் சூழ்ச்சியை பயன்படுத்தினர். அன்று அவர்கள் விதைத்த விதை இன்றும் விஷ விருட்சமாக வளர்ந்து நின்று இந்திய ஒருமைப்பாட்டிற்கு அச்சுறுத்தலாக விளங்குகிறது.
*************
‘பாண்டிய மன்னன் சமண விரோதியாகி, பாண்டிய நாட்டிலுள்ள சமணர்களை வெட்டி வீழ்த்தி, அவர்கள் சொத்து, சுதந்திரம், கோயில், குளம், மடம் முதலியவைகளைக் கைப்பற்றும்படி தன் சைன்யங்களை ஏவியதோடு, தன் முன்னிலையிலேயே அநேக ஆயிரக்கணக்கான சமண முனிவர்களை வலியப் பிடித்து கழுமரத்திலேற்றி பதைக்கப் பதைக்கக் கொன்றான்.’-அ.பொன்னம்பலம், அப்பரும் சம்பந்தரும், சென்னை, 1983, Page 28
திப்புசுல்தான் பற்றிய ஆதாரமற்ற ஒரு குற்றச்சாட்டை தனது கட்டுரையில் குறிப்பிட்ட பாரதி, மேற்கண்ட கொடுங்கோலனாகிய பாண்டிய மன்னனைப் பற்றியும் தனது கட்டுரைகளில் பிரஸ்தாபித்திருந்தாரென்றால் அவர் பொதுவாகவே அனைத்து மன்னர்கள் மேலும் ஆத்திரம் கொண்டவர் என்றும் அவரது எழுத்தில் நேர்மையும் யதார்த்தமும் இருக்கிறது என ஒப்புக் கொள்வதில் யாருக்கும் ஆட்சேபணை இருக்கப் போவதில்லை.
***************
திப்பு சுல்தானுக்கு மிர்சதக் செய்த துரோகம் வரலாற்றில் குறிக்கப் பட்ட அளவிற்கு பூர்ணய்யாவின் துரோகம் குறிக்கப் படவில்லை. ஆனால் அவருக்கு இவர் சளைத்தவர் அல்ல. இவர்கள் இருவருமே ஆங்கிலேயருடன் இரகசியத் தொடர்பு வைத்திருந்து,
திப்புவின் மரணத்திற்கும் அவரது சாம்ராஜ்யம் வீழ்வதற்கு முக்கிய காரணமாக இருந்தார்கள். திப்பு இறந்தச் செய்தி கேட்ட தருணத்திலேயே, பிரிட்டிஷார் பூர்ணய்யாவை சரணடையச் சொன்னபோது ‘காசியிலிருந்து ராமேஸ்வரம் வரை எங்கள் இனத்தை பாதுகாத்து வரும் உங்களிடம் சரணடைய எனக்கென்ன தயக்கம்?‘ என்று ஜெனரல் ஹாரிஸிடம் சொல்லிச் சரணடைந்தவர் பூர்ணய்யா.
முதலில் ஹைதர் அலியிடமும் பின்னர் திப்பு சுல்தானிடமும் அவர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமாக இருந்து கணப் பொழுதில் தன் நிலையை மாற்றிக் கொண்டவரை துரோகி என்று சொல்லாமல் வேறு என்ன சொல்வது?
‘திப்புவுக்கு எதிரான முதல் மூன்று போர்களில் ஆங்கியேரின் துப்பாக்கி சாதிக்காததை நான்காவது போரில் அவர்களின் பொன்னும் பொருளும் சாதித்தது. திப்புவின் அமைச்சர்கள் அவருக்கு துரோகம் இழைத்தனர்.
சரணடைய மறுத்த திப்பு வீரத்துடன் போரிட்டு மடிந்தார்’ என்று History of the Freedom Movement in India, (revised edn., Delhi, 1965, I, pp.226-27) என்ற நூலில் நூலாசிரியர் தாராசந்த் எழுதுகிறார். ‘திப்பு சுல்தானுக்கு துரோகம் இழைத்த பூர்ணய்யா ஒரு இந்து என்பதற்காக தான் வெட்கப்படுவதாக’ காந்தி ஒரு கட்டுரையில் எழுதியதும் இங்கு குறிப்பிடத் தக்கது.
---------------------------------------
சீதையின் தலை மயிரை ஒரு கையில் பற்றித் தூக்கித் தன் தொடையில் உட்கார வைத்துப் புஷ்பக விமானத்தில் ஏறிப் போனார் இராவணன் என இராமாயணம் கதைக்கிறது.
வானூர்தியில் சீவகன் பயணம் செய்தான் என சிந்தாமணி கூறுகிறது. வேங்கை மரத்தின் அடியில் நின்று கொண்டிருந்த கண்ணகியை வானுலகத்தில் இருந்து வந்து இறங்கிய கோவலன் தன்னுடன் ஏற்றிக் கொண்டு வான்வழியே விண்ணுலகம் சென்றான் என்று சிலப்பதி காரம் சித்தரிக்கிறது. இவையெல்லாம் கதைகள், கற்பனைகள். அளப்புகள். நடப்புகள் அல்ல.
ஆனால் உலகின் முதல் ராக்கெட் (ஏவுகணை) இந்திய நாட்டின் தென் பகுதியில் இருந்துதான் ஏவப்பட்டது என்பதை வரலாறு பதிவு செய்து வைத்திருப்பது உண்மை. வெறும் புகழ்ச்சியல்ல. ஏவுகணையை ஏவியவர். திப்பு சுல்தான். மைசூர் புலி என வரலாறு போற்றும் அய்தர் அலியின் மகன்.
பொது ஆண்டு 1790+இல் பிரிட்டிஷ், பிரெஞ்ச் படைகளுக்கு எதிராக ஏவுகணைத் தாக்குதலைத் தொடுத்தவர் திப்பு.
914 மீட்டர் தூரத்திற்குச் சென்று இலக்கைத் தாக்கும் ஆற்றல் இந்த ஏவுகணைக்கு இருந்தது. இதற்குக் காரணம் இதன் கூடு (வெளிப்பகுதி) கனத்த இருப்புத் தகட்டினால் செய்யப்பட்டது. வெடி மருந்தின் சக்தியைத் தாங்கும் ஆற்றல் பெற்றிருந்தது.
அய்ரோப்பிய நாடுகளில் பயன்படுத்தப்பட்டவைபோல, மரக்கூடு அல்ல.
மராத்தா போர்களில் 18+ஆம் நூற்றாண்டில் கைப்பற்றப் பட்ட `ராக்கெட்’டின் உரு ஒன்று ஊல்விக் பகுதியில் ரோடுண்டாவிலுள்ள இராணுவ அருங்காட்சியகத்தில் வைக்கப்பட்டுள்ளது
இந்தியக் குடியரசுத் தலைவர் அப்துல்கலாம் அவர்கள் ஒரு அறிவியலாளர், பொறியாளர் என்பதை அறிவோம். அமெரிக்காவின் விண்வெளி ஆராய்ச்சி நிலையமான `நாசா’வுக்கு அவர் சென்றபோது ஏவுகணையை எரிய வைத்துக் கொண்டிருக்கும் இந்தியர்களின் படத்தைப் பார்த்தாராம்; அவர்கள் திப்புவின் சிப்பாய்கள் என்பதை எடுத்துச் சொன்னார்களாம்.
கருநாடகா மாநிலம் சிறீரங்கப் பட்டனத்தில் உள்ள அய்தர் அலி - + -திப்புசுல்தான் நினைவிடங்களில் உள்ள காட்சியகங்களில் அவற்றின் படத்தைக் காணலாம்.
விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்
விடுதலைப் போரின் விடிவெள்ளி திப்பு சுல்தான்"கிழக்கிந்தியக் கம்பெனியின் குலை நடுக்கம்" திப்புவின் மைசூர் அரசுக்கு அன்று லண்டன் பத்திரிகைகள் வைத்த பெயர் இது.
"இந்தியாவில் கும்பினியாட்சி நீடிக்க முடியுமா?" என்ற அச்சத்தை எதிரிகளின் மனதில் உருவாக்கியவர் திப்பு.
தென்னிந்தியாவில் தொடங்கிய முதல் விடுதலைப் போரின் நாயகர்களான கட்டபொம்மன், மருது சகோதரர்கள், கோபால் நாயக்கர், தீரன் சின்னமலை, கேரள வர்மா, தூந்தாஜி வாக் போன்ற எண்ணற்ற போராளிகளுக்கு அன்று மிகப்பெரும் உந்து சக்தியாகத் திகழ்ந்தவர் திப்பு.
1782 டிசம்பரில் ஹைதர் இறந்த பின் அரசுரிமையைப் பெறும்போது திப்புவின் வயது 32.
>மேற்குக் கடற்கரையிலிருந்து ஆங்கிலேயர்களைத் துடைத்தெறிந்து விட வேண்டும் என்ற வேகத்துடன் போரைத் தொடர்ந்தார் திப்பு. திப்புவின் அணியில் போரிட்டுக் கொண்டிருந்தன இந்தியாவில் இருந்த பிரெஞ்சுப் படைகள். ஆனால் அன்று புரட்சியெனும் எரிமலையின் வாயிலில் அமர்ந்திருந்த பிரெஞ்சு மன்னன் 16ம் லூயி, பிரிட்டனுடன் சமரசம் செய்து கொண்டதால் திப்புவும் போரை நிறுத்த வேண்டியதாயிற்று.
1784இல் முடிவடைந்த இந்தப் போரில் ஆங்கிலப் படையின் தளபதி உள்ளிட்ட 4000 சிப்பாய்கள் திப்புவிடம் போர்க் கைதிகளாகப் பிடிபட்டு, பின்னர் அவரால் விடுவிக்கப்பட்டனர்.
இந்த அவமானம் தான் கும்பினியுடைய குலைநடுக்கத்தின் தொடக்கம்.மூன்றாவது மைசூர்ப்போர் என்று அழைக்கப்படும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர் (1792) ஆங்கிலேயக் கைக்கூலியான திருவிதாங்கூர் மன்னனால் தூண்டிவிடப்பட்டது.
தனது நட்பு நாடான திருவிதாங்கூரை ஆதரிப்பது என்ற பெயரில் கவர்னர் ஜெனரல் கார்ன்வாலிஸ், திப்புவுக்கு எதிராகக் களமிறங்கினான். திருவிதாங்கூர், ஐதராபாத் நிஜாம், மைசூர் அரசின் முன்னாள் பாளையக்காரர்கள், ஆற்காட்டு நவாப், தொண்டைமான் ஆகிய அனைவரும் ஆங்கிலேயன் பின்னால் அணிதிரண்டனர்.
எனவே எதிரிகளைத் தன்னந்தனியாக எதிர்கொண்டார்திப்பு. மைசூருக்கு அருகிலிருக்கும் சீரங்கப்பட்டினம் கோட்டை 30 நாட்களுக்கும் மேலாக எதிரிகளின் முற்றுகைக்கு இலக்கான போதிலும் எதிரிகளால் கோட்டைக்குள் நுழைய முடியவில்லை.
"30 நாட்கள் முற்றுகையிட்டும் எங்களால் அந்தத் தீவையும் கோட்டையையும் தூரத்திலிருந்து தரிசிக்க மட்டுமே முடிந்தது" என்று பின்னர் குறிப்பிட்டான் ஆங்கிலேய அதிகாரி மன்றோ.
பல போர் முனைகளில் ஆங்கிலேயரை வெற்றி கொண்டன திப்புவின் படைகள். எனினும் போரின் இறுதிக்கட்டத்தில் மராத்தாக்களின் பெரும் படையும் ஆங்கிலேயருடன் சேர்ந்து கொள்ளவே, உடன்படிக்கை செய்து கொள்ளவேண்டிய கட்டாயம் திப்புவுக்கு ஏற்பட்டது.
மைசூர் அரசின் பாதி நிலப்பரப்பை எதிரிகள் பங்கு போட்டுக்கொண்டனர். இழப்பீட்டுத் தொகையாக 3.3 கோடி ரூபாயை ஒரு ஆண்டுக்குள் செலுத்த வேண்டுமென்றும், அதுவரை திப்புவின் இரு மகன்களை பணயக் கைதிகளாக ஒப்படைக்க வேண்டுமென்றும் நிபந்தனை விதித்தான் கார்ன்வாலிஸ்.
பணயத்தொகையை அடைத்து கும்பினிக் கொள்ளையர்களிடமிருந்து தன் மகன்களை மீட்டதுடன் ஆங்கிலேயருக்கு எதிரான அடுத்த போருக்கும் ஆயத்தம் செய்யத் தொடங்கினார் திப்பு.
1792 போரில் ஏற்பட்ட இழப்புகளைச் சரி செய்தது மட்டுமல்ல, முன்னிலும் வலிமையாகத் தனது பொருளாதாரத்தையும் இராணுவத்தையும் திப்பு கட்டியமைத்துவிட்டார்.
"ஆம். நான் அவனைக் கண்டு அஞ்சுகிறேன். அவன் நாமறிந்த மற்ற இந்திய மன்னர்களைப் போன்றவன் அல்ல. மற்ற மன்னர்கள் மத்தியில் இவன் ஏற்படுத்தும் முன்னுதாரணத்தைக் கண்டும் நான் அஞ்சுகிறேன். ஆனால் அவனைப் பின்பற்றும் தகுதியில்லாத கோழைகளாக மற்ற மன்னர்கள் இருப்பது நம் அதிருஷ்டம்" என்று 1798இல் கும்பினித் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் அன்றைய கவர்னர் ஜெனரல் மார்க்வெஸ் வெல்லெஸ்லி.
திப்புவைப் போரிட்டு வெல்ல முடியாது என்ற முடிவுக்கு வந்த வெள்ளையர்கள், 'பிளாசி'ப் போரில் பயன்படுத்திய லஞ்சம் எனும் ஆயுதத்தையும் ஐந்தாம் படையையும் ஆயத்தப்படுத்தத் தொடங்கினார்கள். அடுத்த ஓராண்டிற்குள் திப்புவின் முதன்மையான அமைச்சர்களும் அதிகாரிகளும் தளபதிகளும் விலைக்கு வாங்கப்பட்டார்கள்.
இதைக் குறிப்பிட்டு, "இப்போது நாம் 'தைரியமாக' திப்புவின் மீது படையெடுக்கலாம்" என்று 1799இல் கும்பினியின் தலைமைக்குக் கடிதம் எழுதுகிறான் வெல்லெஸ்லி.
இதுதான் திப்புவின் இறுதிப்போர். நாடு தழுவிய அளவில் ஒரு ஆங்கிலேய எதிர்ப்பு முன்னணியை உருவாக்க முயன்று தோற்று, பிரான்சிலிருந்து நெப்போலியனின் உதவியும் கிடைக்காத நிலையிலும், தன்னந்தனியாக ஆங்கிலேயரை எதிர்கொண்டார் திப்பு.
3வது போரின்போது ஆங்கிலேயனுக்குத் துணை நின்ற துரோகிகள் அனைவரும் இந்தப்போரிலும் திப்புவுக்கு எதிராக அணிவகுத்தனர். மராத்தியர்களோ, கண்டுகொள்ளாமல் ஒதுங்கிக் கொண்டனர்.
அனைத்துக்கும் மேலாக, திப்புவின் அமைச்சர்களான மீர் சதக்கும், பூர்ணய்யாவும் செய்த ஐந்தாம்படை வேலை காரணமாக சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகள் ஆங்கிலேயருக்குத் திறந்து விடப்பட்டன.
தன்னுடன் போரிட்டு மடிந்த 11,000 வீரர்களுடன் தானும் ஒரு வீரனாகப் போர்க்களத்தில் உயிர் துறந்தார் மாவீரன் திப்பு.
ஆங்கிலேயப் பேரரசின் காலனியாதிக்கத்துக்குத் தடையாகத் தென்னிந்தியாவிலிருந்து எழுந்து நின்ற அந்த மையம் வீழ்ந்தது.திப்புவைக் கண்டு ஆங்கிலேயர்கள் அஞ்சி நடுங்கியதற்குக் காரணம் அவருடைய இராணுவ வல்லமையோ, போர்த்திறனோ மட்டுமல்ல தன்னுடைய சாம்ராச்சியத்தைக் காப்பாற்றிக் கொள்ளவேண்டுமென்று மட்டும் சிந்திக்காமல்,
ஆங்கிலேயரை விரட்டவேண்டுமென்பதையே தன் வாழ்க்கை இலட்சியமாகக் கொண்டிருந்த ஒரு மன்னனை, கனவிலும் நனவிலும் அதே சிந்தனையாக வாழ்ந்த ஒரு மன்னனை அவர்கள் கண்டதில்லை.ஆம். திப்புவின் 18 ஆண்டுகால ஆட்சி அதற்குச் சான்று கூறுகிறது. ஆங்கிலேயர்க்கெதிரான நாடு தழுவிய, உலகு தழுவிய முன்னணி ஒன்றை அமைப்பதற்காக திப்பு மேற்கொண்ட முயற்சிகள் நம்மைப் பிரமிக்க வைக்கின்றன.
டில்லி பாதுஷா, நிஜாம், ஆற்காட்டு நவாப், மராத்தியர்கள் என எல்லோரிடமும் மன்றாடியிருக்கிறார் திப்பு.
துருக்கி, ஆப்கான், ஈரான் மன்னர்களுக்குத் தூது அனுப்பி வணிகரீதியாகவும், இராணுவ ரீதியாகவும் உலகளவிலான எதிர்ப்பு அணியை உருவாக்கவும் திப்பு முயன்றிருக்கிறார்.
"திப்புவின் கோரிக்கையை ஏற்று ஜமன் ஷா வட இந்தியாவின் மீது படையெடுத்தால் அந்தக் கணமே தென்னிந்தியா திப்புவின் கைக்குப் பறிபோய் விடும்" என்று 1798இல் பதறியிருக்கிறான் வெல்லெஸ்லி.
பிரான்சுடனான உறவில் ஒரு இளைய பங்காளியாக அவர் எப்போதும் நடந்து கொள்ளவில்லை. படையனுப்பக் கோரி பிரெஞ்சுக் குடியரசுக்கு அவர் எழுதிய கடிதத்தில், "அந்தப் படை தன் தலைமையில் தான் போரிட வேண்டுமென்றும், நேச நாடான தன்னைக் கலந்து கொள்ளாமல் இனி ஆங்கிலேயர்களுடன் பிரான்சு எந்த உடன்படிக்கைக்கும் செல்லக் கூடாது" என்றும் கூறுகிறார்.
இந்தக் கடிதத்தின் அடிப்படையில்தான், திப்புவின் இராணுவத்தில் சேருமாறு பிரெஞ்சு மக்களுக்கு அறைகூவல் விடுக்கிறார்கள் பிரெஞ்சுப் புரட்சியாளர்களான ஜாகோபின்கள்.
பிரெஞ்சுப் புரட்சிக்கு முன் லூயி மன்னனின் அரசுடன் உறவு வைத்திருந்த காலத்தில் கூட, பாண்டிச்சேரியிலிருந்து பிரெஞ்சு அரசால் விரட்டப்பட்ட ஜாகோபின்களுக்கு (மன்னராட்சியை எதிர்த்த பிரெஞ்சுப் புரட்சிக்காரர்கள்) மைசூரில் இடமளிக்க திப்பு தயங்கவில்லை.
புரட்சி வெற்றி பெற்ற பின் அதைக் கொண்டாடுமுகமாக முடியாட்சிச் சின்னங்களையெல்லாம் தீயிட்டு எரித்து மைசூரில் ஜாகோபின்கள் நடத்திய விழாவிலும் பங்கேற்று, "குடிமகன் திப்பு' என்று அவர்கள் அளித்த பட்டத்தையும் மகிழ்ச்சியுடன் ஏற்கிறார்.
சுதந்திரம், சமத்துவம், சகோதரத்துவம் என்ற சொற்கள் இந்த நாட்டில் திப்புவின் மண்ணில்தான் முதன் முதலாக ஒலித்தன.
பிரெஞ்சுப் பத்திரிக்கையொன்றில் ஆங்கிலேயக் காலனியாதிக்கத்துக்கு எதிராக அமெரிக்கர்கள் நடத்திய போருக்கு நிதியுதவி கேட்டு பெஞ்சமின் ஃபிராங்க்ளின் வெளியிட்டிருந்த கோரிக்கையைப் படித்துவிட்டு 'மைசூர் அரசின் சார்பாக' உடனே நிதியனுப்பிய திப்பு,
அமெரிக்காவிலும் இந்தியாவிலும் நடக்கும் காலனியாதிக்க எதிர்ப்புப் போர்களின் ஒற்றுமையைக் குறிப்பிட்டு "உலகின் கடைசி சர்வாதிகாரி இருக்கும் வரையில் நமது போராட்டம் தொடரட்டும்" என்று செய்தியும் அனுப்புகிறார்.
ஒரு மன்னன் இவ்வாறெல்லாம் நடந்து கொண்டிருக்க முடியுமா என்று வாசகர்கள் வியப்படையலாம்.
வரலாற்றின் போக்கை உணர்ந்து சமூக மாற்றத்துக்கான நடவடிக்கைகளில் முன்கை எடுத்த மன்னர்கள் உலக வரலாற்றில் மிகச் சிலரே.
அத்தகைய அறிவொளி பெற்ற மன்னர்களில் திப்பு ஒருவர்.
பரம்பரை அரச குடும்பம் எதையும் சாராத திப்புவின் சமூகப் பின்னணியும், "பென்சன் ராஜாக்கள்" என்று வெறுப்புடன் அவர் குறிப்பிட்ட ஆங்கிலேய அடிவருடி மன்னர்கள் மீது அவர் கொண்டிருந்த வெறுப்பும், பிரெஞ்சுப் புரட்சியின் இலக்கியங்களோடு அவர் கொண்டிருந்த பரிச்சயமும், அவருக்குள் அணையாமல் கனன்று கொண்டிருந்த காலனியாதிக்க எதிர்ப்புணர்வும், மாறிவரும் உலகைப் புரிந்து கொள்ளும் கண்ணோட்டத்தை அவருக்கு வழங்கியிருக்க வேண்டும்.
தனது அரசின் நிர்வாகம், வணிகம், விவசாயம், சமூகம், இராணுவம் போன்ற பல துறைகளில் அவர் அறிமுகப்படுத்த முனைந்த மாற்றங்களைப் பார்க்கும்போது, திப்பு என்ற ஆளுமையின் கம்பீரமும் செயல்துடிப்பும் நம்முன் ஓவியமாய் விரிகிறது.
காலனியாதிக்கத்தை எதிர்க்க வேண்டுமானால் ஒரு தொழில் முறையில் பயிற்றுவிக்கப்பட்ட, பெரிய, நவீன இராணுவத்தை உருவாக்கியாக வேண்டும் என்ற புறவயமான நிர்ப்பந்தம் திப்புவை நவீனமயமாக்கத்தை நோக்கி உந்தித் தள்ளுகிறது.
ஆனால் அரசுக்கான வருவாயை விவசாயம் தான் வழங்கியாக வேண்டுமென்ற சூழ்நிலையைப் புரிந்து கொண்டு விவசாயிகளின் வளர்ச்சி குறித்து அவர் பெரிதும் அக்கறை காட்டுகிறார்.
"எந்தச் சாதி மதத்தைச் சேர்ந்தவரானாலும் சரி, உழுபவர்களுக்குத் தான் நிலம் சொந்தமாக இருக்கவேண்டும்" என்று திப்பு பிரகடனம் செய்கிறார்.
இந்தப் பிரகடனத்தை நடைமுறையில் அமல் படுத்தியிருப்பதற்கான வாய்ப்பு மிகவும் குறைவே என்றாலும், ரயத்வாரி முறையை அமல்படுத்தியதுடன்,பார்ப்பனர்களின் நிலங்களுக்கு வழங்கப்பட்ட வரிவிலக்கையும் திப்பு ரத்து செய்திருக்கிறார்.
இராணுவம் மற்றும் துணை இராணுவப் படையினர் 3 லட்சம் பேருக்கு நிலம் வழங்கியிருக்கிறார்.
சென்னை மாகாணத்தைப் போல அல்லாமல் மைசூர் அரசில் தலித் சாதியினருக்குப் பல இடங்களில் நிலஉடைமை இருந்ததாக எட்கர் தர்ஸ்டன் என்ற ஆய்வாளர் கூறுகிறார்.
"ஏழைகளையும், விவசாயிகளையும் சொல்லாலோ செயலாலோ துன்புறுத்த மாட்டோம்" என்று வருவாய்த்துறை ஊழியர்கள் பதவி ஏற்கும் முன் உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டியிருந்தது.
அதிகாரிகள் தம் நிலங்களில் விவசாயிகளைக் கூலியின்றி வேலை பார்க்கச் சொல்வது முதல் தம் குதிரைகளுக்கு இலவசமாகப் புல் அறுத்துக் கொள்வது வரை அனைத்தும் சட்டப்படி தண்டனைக்கு உரிய குற்றங்களாக்கப்பட்டிருந்தன.
விவசாயிகளைக் கொடுமைப்படுத்திய அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்கப் பட்டதற்கான சான்றுகளும் இருப்பதாகக் கூறுகிறார்கள் ஆய்வாளர்கள்.
1792 போருக்குப்பின் திப்புவிடமிருந்து ஆங்கிலேயர்கள் கைப்பற்றிக் கொண்ட சேலம் மாவட்டம் வேலூர் தாலூக்காவிலிருந்து வரிக்கொடுமை தாளாமல் 4000 விவசாயிகள் திப்புவின் அரசுக்குக் குடி பெயர்ந்ததை 1796லேயே பதிவு செய்திருக்கிறான் ஆங்கிலேய அதிகாரி தாமஸ் மன்றோ.
1792 தோல்விக்குப் பிறகும் கூட ஆங்கிலேயரை தன் எல்லைக்குள் வணிகம் செய்ய திப்பு அனுமதிக்கவில்லை.
மாறாக, உள்நாட்டு வணிகர்களை ஊக்குவித்திருக்கிறார். பணப்பயிர் உற்பத்தி, பெங்களூர் லால்பாக் என்ற தாவரவியல் பூங்கா, பட்டுப் பூச்சி வளர்ப்பு என விவசாயத்தை பிற உற்பத்தித் துறைகளுடன் இணைப்பதிலும், பாசன வளத்தைப் பெருக்கி விவசாயத்தை விரிவுபடுத்துவதிலும் கவனம் செலுத்தி இருக்கிறார் திப்பு.
1911இல் ஆங்கிலேயப் பொறியாளர்கள் கிருஷ்ணராஜ சாகர் அணையைக் கட்டுவதற்கான பணிகளைத் துவக்கிய போது அதே இடத்தில் அணைக்கட்டு கட்டுவதற்கு 1798இல் திப்பு நாட்டியிருந்த அடிக்கல்லையும், இந்த அணைநீரைப் பயன்படுத்தி உருவாக்கப் படும் புதிய விளைநிலங்களுக்கு வரிவிலக்கு அளிப்பது குறித்த திப்புவின் ஆணையையும் கண்டனர்.
"அன்றைய மைசூர் அரசின் மொத்த மக்கட்தொகையில் 17.5% பேர் விவசாயம் சாராத பிற உற்பத்தித் துறைகளில் ஈடுபட்டிருந்தனர்; இரும்பு, தங்கம், நெசவு போன்ற தொழில்களின் அடிப்படையிலான நகரங்கள் உருவாகியிருந்தன உற்பத்தியின் அளவிலும் தரத்திலும் அவை ஐரோப்பியப் பொருட்களுக்கு நிகராக இருந்தன முதலாளித்துவத் தொழிலுற்பத்தியின் வாயிலில் இருந்தது திப்புவின் மைசூர்'' என்று ஆங்கிலேய அதிகாரிகளின் ஆவணங்களையே ஆதாரம் காட்டி எழுதுகிறார்வரலாற்றாய்வாளர் தோழர். சாகேத் ராமன்.
நகரங்களில் வளர்ந்திருந்த பட்டறைத் தொழில்கள் மற்றும் வணிகத்தின் காரணமாக சாதி அமைப்பு இளகத் தொடங்கியிருந்ததையும், நெசவு, சில்லறை வணிகம் முதலான தொழில்களில் தலித்துகள் ஈடுபட்டிருந்ததையும் தனது ஆய்வில் குறிப்பிடுகிறான் கும்பினி அதிகாரி புக்கானன்.
திப்புவிடம் இருந்த புதுமை நாட்டமும் கற்றுக் கொள்ளும் தாகமும் இந்த முன்னேற்றத்தில் பெரும்பங்காற்றியிருக்கின்றன.
பிரான்சுடனான அவரது உறவில் ஐரோப்பியத் தொழில் புரட்சியை அப்படியே இங்கு பெயர்த்துக் கொண்டு வந்து விடும் ஆர்வம் தெரிகிறது. 1787 இல், பல்துறை அறிவையும் வளர்த்துக் கொள்வதற்காக 70 பேரை பிரான்சுக்கு அனுப்பி வைக்கிறார்.
அது மட்டுமல்ல, தொழிற்புரட்சியின் உந்துவிசையான நீராவி எந்திரத்தை உடனே அனுப்பி வைக்குமாறு பிரெஞ்சுக் குடியரசிடம் கோருகிறார் திப்பு.இவையெதுவும் ஒரு புத்தார்வவாதியின் ஆர்வக் கோளாறுகள் அல்ல. காலனியாதிக்க எதிர்ப்புணர்வால் உந்தப்பட்டு தொழிலையும் வணிகத்தையும் வளர்க்க விரும்பிய திப்பு, 1793இல் கிழக்கிந்தியக் கம்பெனிக்குப் போட்டியாக அரசு வணிகக் கம்பெனியைத் துவக்குகிறார்.
இந்துஸ்தானம் முழுதும் 14 இடங்களில் வணிக மையங்கள், 20 வணிகக் கப்பல்கள், 20 போர்க்கப்பல்கள், கான்ஸ்டான்டி நோபிளில் மைசூர் அரசின் கப்பல் துறை.. என்று விரிந்து செல்கிறது திப்புவின் திட்டம்.
அன்று கிழக்கிந்தியக் கம்பெனியை விஞ்சுமளவு வணிகம் செய்து கொண்டிருந்த பனியா, மார்வா, பார்ஸி வணிகர்கள் கும்பினியின் போர்களுக்கு நிதியுதவி செய்து கொண்டிருக்க, வணிகத்தையே ஒரு அரசியல் நடவடிக்கையாக, மக்களையும் ஈடுபடுத்தும் காலனியாதிக்க எதிர்ப்புப் போராக மாற்ற விழைந்திருக்கிறார் திப்பு.
அரசு கஜானாவுக்கு நிதியைத் திரட்டுவதற்காக மதுவிற்பனையை அனுமதித்த தனது நிதி அமைச்சரைக் கண்டித்து, "மக்களின் ஆரோக்கியத்தையும் ஒழுக்கத்தையும் அவர்களது பொருளாதார நலனையும் காட்டிலும் நம் கஜானாவை நிரப்புவதுதான் முதன்மை யானதா?" என்று கேள்வி எழுப்புகிறார்.
கஞ்சா உற்பத்தியைத் தடை செய்கிறார். அவரது எதிரியான கும்பினியோ, கஞ்சா பயிரிடுமாறு வங்காள விவசாயிகளைத் துன்புறுத்தியது; கஞ்சா இறக்குமதியை எதிர்த்த சீனத்தின்மீது போர் தொடுத்தது; கஞ்சா விற்ற காசில் 'சூரியன் அஸ்தமிக்காத சாம்ராச்சியத்தை' உருவாக்கியது.அநாதைச் சிறுமிகளை கோயிலுக்கு தேவதாசியாக விற்பதையும், விபச்சாரத்தையும் தடை செய்தார் திப்பு.
அதே காலகட்டத்தில் பூரி ஜகந்நாதர் கோயிலின் தேரில் விழுந்து சாகும் பக்தர்களின் மடமையிலும், அவ்வூரின் விபச்சாரத்திலும் காசு பார்த்தார்கள் கும்பினிக்காரர்கள்.
<"எகிப்தியப் பிரமிடுகளும், சீனப் பெருஞ்சுவரும், கிரேக்க ரோமானியக் கட்டிடங்களும் அவற்றைக் கட்டுவதற்கு ஆணையிட்ட மன்னர்களின் புகழுக்குச் சான்று கூறவில்லை.
கொடுங்கோல் மன்னர்களின் ஜம்பத்துக்காக ரத்தம் சிந்தி உயிர்நீத்த லட்சோப லட்சம் மக்களின் துயரம்தான் அவை கூறும் செய்தி" என்று எழுதிய திப்பு தனது அரசில் அடிமை விற்பனையைத் தடை செய்தார்.
"எந்த அரசாங்க வேலையானாலும் கூலி கொடுக்காமல் வேலை வாங்கக் கூடாது" என்று தன் அதிகாரிகளுக்கு ஆணை பிறப்பித்தார்.
கும்பினிக்காரர்களோ திப்புவிடமிருந்து கைப்பற்றிய மலபார் பகுதியில் பின்னாளில் தம் எஸ்டேட்டு வேலைக்காக வாயில் துணி அடைத்துப் பிள்ளை பிடித்தனர்;
முதல் விடுதலைப் போரில் தென்னிந்தியா தோற்றபின் தென் ஆப்பிரிக்கா முதல் மலேயா வரை எல்லா நாடுகளுக்கும் கொத்தடிமைகளாக மக்களைக் கப்பலேற்றினர்.
திப்புவின் ஜனநாயகப் பண்பு அவருடைய நிர்வாக ஆணைகள் அனைத்திலும் வெளிப்படுகிறது.
"விவசாயிகள் மீது கசையடி போன்ற தண்டனைகளை நிறுத்திவிட்டு, 2 மல்பெரி மரங்களை நட்டு 4 அடி உயரம் வளர்க்க வேண்டும்" என்று தண்டனை முறையையே மாற்றுமாறு அதிகாரிகளுக்கு உத்தரவிடுகிறார்.தவறிழைக்கும் சிப்பாய்கள் மீதும் உடல் ரீதியான தண்டனைகள் திப்புவின் இராணுவத்தில் நிறுத்தப்பட்டிருக்கின்றன.
"தோற்கடிக்கப்பட்ட எதிரி நாட்டின் சொத்துக்களைச் சூறையாடுவதன் மூலம் சிலர் பணக்காரர்கள் ஆகலாம். ஆனால் தேசத்தை அது ஏழ்மையாக்கும்; மொத்த இராணுவத்தின் கவுரவத்தையும் குலைக்கும். போர்களை போர்க் களத்தோடு முடித்துக் கொள்ளுங்கள். அப்பாவி மக்கள் மீது போர் தொடுக்காதீர்கள். பெண்களைக் கவுரவமாக நடத்துங்கள். அவர்களது மத நம்பிக்கைக்கு மதிப்புக் கொடுங்கள். குழந்தைகளுக்கும் முதியோருக்கும் பாதுகாப்பு கொடுங்கள்" என்று தன் இராணுவத்துக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பிக்கிறார் திப்பு
ஆங்கிலேயக் காலனியாதிக்கவாதிகளிடமிருந்து ஒரு பேச்சுக்குக் கூட இத்தகைய நாகரிகமான சிந்தனை அன்று வெளிப்பட்டதில்லை.
"ஆங்கிலேயர் ஆட்சி இந்தியாவில் சந்திக்கும் முதன்மையான அபாயம் திப்பு தான்" என்று கும்பினி நிர்வாகத்துக்குப் புரியவைப்பதற்காக தாமஸ் மன்றோ லண்டனுக்கு எழுதிய நீண்ட கடிதத்தில் திப்புவின் அரசைப் பற்றிக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறான்:
"சிவில் நிர்வாகமாக இருக்கட்டும், இராணுவமாக இருக்கட்டும், உயர்குலத்தில் பிறந்தவர்கள் என்பதற்காக இங்கே சலுகை காட்டப்படுவதில்லை. எல்லா வர்க்கத்தினர் மீதும் பாரபட்சமின்றி நீதி நிலைநாட்டப்படுகிறது.. அநேகமாக எல்லா வேலைவாய்ப்புகளும் பொறுப்புகளும் மிகச் சாதாரண மனிதர்களுக்கு வழங்கப்படுவதால், இந்தியாவில் வேறு எங்கும் காணமுடியாத அளவு செயல்துடிப்பை இந்த அரசில் பார்க்க முடிகிறது."
1799இல் திப்பு வீழ்த்தப்பட்டபின் எழுதப்பட்ட கும்பினி அதிகாரிகளின் குறிப்புகள் கீழ்க்கண்டவாறு கூறுகின்றன:
"இறுதி நேரத்தில் நமது கையாட்களாக மாறிய இந்துக்கள் கூட திப்புவை கனிவான எசமானாகவே கருதுகிறார்கள். தற்போது நாம் ஆட்சிக்கு வந்துவிட்டதால் திப்புவைப் பற்றிப் புகார் கூறினால் நாம் மகிழ்ச்சி அடைவோம் என்பதற்காகக் கூட மக்கள் யாரும் புகார் கூறவில்லை. இவர்கள் நம் ஆட்சியை வேறு வழியின்றிச் சகித்துக் கொண்டிருக்கிறார்கள். ஒரு வாய்ப்பு கிடைத்தால் மீண்டும் பழைய எசமானைத்தான் ஆதரிப்பார்கள்." இவையனைத்தும் திப்புவைப் பற்றி எதிரிகள் வழங்கும் ஆதாரங்கள்.
மக்கள் மீது திப்பு பாராட்டிய நேசம், சம்பிரதாயமானதோ நோக்கமற்றதோ அல்ல. எதிரிகள் கண்டு அஞ்சுமளவுக்கு ஒரு பிரம்மாண்டமான இராணுவத்தைக் கட்டி அமைத்திருந்த போதிலும், தன்னுடைய நாடே ஒரு மனிதனாக எழுந்து நின்று ஆங்கிலேயரை எதிர்த்துப் போராட வேண்டும் என்று கனவு கண்டிருக்கிறார் திப்பு.
தன் அரண்மனையில் திப்பு பொறித்து வைத்துள்ள வாசகங்கள் இதற்குச் சாட்சி கூறுகின்றன."நம்முடைய குடிமக்களுடன் சச்சரவு செய்வதென்பது, நமக்கெதிராக நாமே போர் தொடுத்துக் கொள்வதற்குச் சமமானது. மக்கள்தான் நம் கவசம். நமக்கு அனைத்தையும் வழங்குபவர்கள் மக்கள்தான். நம்முடைய சாம்ராச்சியத்தின் வலிமையனைத்தையும், வெறுப்பனைத்தையும் சேமித்து வையுங்கள். அவை அனைத்தும் அந்நிய எதிரிகளின் மீது மட்டும் பாயட்டும்.
"வெறும் சொற்களல்ல. காலனியாதிக்கத்துக்கு எதிரான போராட்டத்தில் தன் மக்களைக் கவசமாக மட்டுமின்றி, வாளாகவும் பயன்படுத்தக் கனவு கண்டார் திப்பு.
"விவசாயிகள் அனைவருக்கும் துப்பாக்கி வழங்கப்பட வேண்டும். அன்றாடம் ஊருக்கு வெளியே துப்பாக்கி சுடும் பயிற்சி வழங்கப்பட வேண்டும்" என்று தன் வரி வசூல் அதிகாரிகளுக்கு எழுத்து பூர்வமாக ஆணை பிறப்பித்திருக்கிறார் திப்பு.
இந்த ஆணை செயல் வடிவம் பெற்றிருக்குமா என்ற கேள்வி இருக்கட்டும். தன் குடிமக்கள் மீது எத்தனை நம்பிக்கை வைத்திருந்தால் ஒரு மன்னனே அவர்களுக்கு ஆயுதம் வழங்குமாறு உத்தரவிட்டிருக்க முடியும்?
திப்புவின் நம்பிக்கை வீண் போகவில்லை. சீரங்கப்பட்டினத்தின் கோட்டைக் கதவுகளைத் திறந்துவிட்ட நிதி அமைச்சன் மீர் சதக்கின் தலையை அந்தப் போர்க்களத்திலேயே சீவி எறிந்தான் திப்புவின் ஒரு சிப்பாய். செய்தியறிந்த மக்களோ அங்கேயே அவன் உடலின் மீது காறி உமிழ்ந்தார்கள். புதைக்கப்பட்ட பிறகும் அவன் உடலைத் தோண்டியெடுத்து அதன் மீது ஒரு வார காலம் சேற்றையும் மலத்தையும் வீசினார்கள்.
'சதக்' என்ற பாரசீகச் சொல் துரோகத்தைக் குறிக்கும் சொல்லாக கன்னட மொழியில் ஏறியது.
காலனியாதிக்கத்துக்கு எதிராக ஒரு மக்கள் படையைக் கட்டக் கனவு கண்டார் திப்பு.
அவர் மறைவுக்குப்பின் ஒன்றரை லட்சம் பேரைத் திரட்டி, ஆங்கிலேயருக்கு எதிராகப் போர் நடத்தி, தன் மன்னனுக்கு அஞ்சலி செலுத்தினான் திப்புவின் குதிரைப் படைத் தளபதி தூந்தாஜி வாக்.
ஒருவேளை திப்பு பிழைத்திருந்தால்?
'உயிர் பிழைத்தல்' என்ற சொற்றொடரே திப்புவின் அகராதியில் இல்லை. 1792 போரில் வெள்ளையரிடம் தோற்றவுடன் "ஆங்கிலேயரை ஒழிக்கும் வரை இனி நான் பஞ்சணையில் படுக்கமாட்டேன்" என்று அரசவையிலேயே சூளுரைத்தார் திப்பு.
இதோ, குண்டுக் காயங்களுடன் கோட்டை வாயிலில் சரிந்து கிடக்கிறார் திப்பு.
"மன்னா, யாரேனும் ஒரு ஆங்கிலேய அதிகாரியை அழைக்கட்டுமா, சரணடைந்து விடலாம்" என்று பதறுகிறான் அவருடைய பணியாள். "முட்டாள்... வாயை மூடு" என்று உறுமுகிறார் திப்பு. ஆம்!
"ஆடுகளைப் போல 200 ஆண்டுகள் பிழைப்பதை விடப் புலியைப் போல 2 நாட்கள் வாழ்ந்து மடியலாம்" என்று பிரகடனம் செய்த அந்தப் புலி, போர்க் களத்திலேயே தன் கண்ணை மூடியது.
திப்பு போர்க்களத்திற்குச் சென்று விட்டார் என்பதை நம்ப மறுத்து அரண்மனையெங்கும் தேடிய ஆங்கிலேய இராணுவம், நள்ளிரவில் சிப்பாய்களின் பிணக்குவியலுக்குள்ளே திப்புவின் உடலைக் கண்டெடுக்கிறது.
அந்தக் காட்சியை அப்படியே பதிவு செய்திருக்கிறான் ஒரு ஆங்கிலேய அதிகாரி:
"நகரமே சூறையாடப்பட்டுத் தீக்கிரையாக்கப்பட்டுப் புகைந்து கொண்டிருக்கிறது. தமது வீடுகள் கொள்ளையடிக்கப்படுவதைப் பற்றிக் கவலைப்படாமல், திப்புவின் உடலை நெடுஞ்சாண் கிடையாக விழுந்து வணங்குகிறார்கள் மக்கள். அடக்க முடியாமல் நெஞ்சம் வெடிக்கக் கதறுகிறார்கள்.
""மானமிழந்தினி வாழ்வோமோ அல்லா எமக்குச் சாவு வராதா துயரும் இழிவும் கண்ணில் தெரியுதே அல்லா எமக்குச் சாவு வராதா"இரண்டு நூற்றாண்டுகளுக்கு முன் திப்புவின் உடலைத் தழுவிச் சென்ற அந்த ஓலம், இதோ நம் இதயத்தை அறுக்கிறது. திப்பு எனும் அந்தக் காப்பியத் துயரம் நம் கண்ணில் நனைகிறது.
-மருதையன் புதிய கலாச்சாரம் டிசம்பர் 2006
NANDRI TO :http://www.tamilcircle.net/Bamini/puthiyakalacharam/2006/nov_2006/03.html
NANDRI TO:http://www.satyamargam.com/index.php?option=com_content&task=view&id=726&Itemid=130
-----------------------------------------------------------
மாவீரன் திப்புவின் பன்முக ஆளுமை.
'எவன் போரிட அஞ்சுகிறானோ அவன் தன் படை வீரர்களை போரிடுக என்று சொல்லுவதற்கு யோக்கியமற்றவன்" என்று பேசியவர் திப்பு.
ஹைதர் அலிக்கும் பகீருன்னிசாவுக்கும் மகனாக திப்பு நவம்பர் 20, 1750ல் தேவனஹள்ளியில் பிறந்தார்.
தனது 17வது வயதிலேயே மைசூர் போரில் வெள்ளையரை எதிர் கொண்டார். ஹைதர் அலியின் கொள்ளு தாத்தா ஷேக் வாலி முகம்மது காலத்தில் தான் 17ம் நூற்றாண்டில் தில்லியில் இருந்து குல்பர்க்கா நோக்கி குடும்பம் நகர்ந்தது.
குடும்பம் அரண்மனை சுற்றிய வேலைகளில் படர்ந்தது. அமைச்சர்களாக குடும்பத்தினர் நுழைந்தனர். ஹைதர் முறையான கல்வி இல்லாதவர். ஆனால் திப்புவிற்கு கல்வி வாய்ப்பை மேம்படுத்தினார்.
ஹைதரின் தளபதி காசிகான் திப்புவிற்கு ராணுவப் பயிற்சி அளித்தார். தந்தையாரின் மரணத்திற்குப் பிறகு திப்பு பெத்தனூர் எனுமிடத்தில் 1783, மே 4ல் எளிய விழாவில் பதவியேற்றார். 400 மைல் நீளமும் 300மைல் அகலமும் கொண்ட ஆட்சிப் பரப்பு. தமிழ்நாட்டில் திண்டுக்கல் வரை வந்திருந்தார்.
போர் என்றால் போர்க்களத்துடன் மட்டுமே இருக்க வேண்டும். அப்பாவி மக்களைக் கொன்றொழிக்கக் கூடாது¢ எதிரியின் குடும்பத்தாரும், குழந்தைகளும் மரியாதையாக நடத்தப்பட வேண்டும் என்பது திப்புவின் கட்டளை.
மத சகிப்புத் தன்மை குரானின் அடிப்படை என்று பேசுவார். அனைவரும் ஓர் சமூகமாக மாற வேண்டும் என்பது அல்லாவின் விருப்பமெனில் அது நடைபெறும். அதற்குரிய நற்காரியங்களில் மனம் செலுத்து , செய் என்றவர் திப்பு.
மதவெறியன் திப்பு என்று தீட்டப்பட்ட சொற்சித்திரங்கள் ஆதார வலுவின்றி நொறுங்கி வீழ்கின்றன.
இந்துக்கள் தான் அவருடைய தலைமை அமைச்சரும், ராணுவத் தளபதியுமாக இருந்தனர். பல இந்துக் கோவில்களுக்கு ஆண்டு தோறும் திப்புவின் கருவூலத்தில் இருந்து கொடை முறையாகச் செல்லும். அவரைப் பற்றிய ஆங்கிலேயரின் வரலாற்றுக் குறிப்புகள் திரித்துக் கூறப்பட்டவை என வரலாற்றாய்வாளர் பி.என்.பாண்டே போன்றோர் நிறுவியுள்ளனர்.
திப்பு கூடுதல் மதப்பற்றாளராக இருந்தாலும் தந்தையின் அடியொற்றி மதசகிப்புத் தன்மையை பின்பற்றினார்.
சிருங்கேரி கோயிலின் தலைமைப் பீடத்திற்கு கன்னட மொழியில் அவர் எழுதிய 30 கடிதங்கள் மைசூர் தொல்லியல் துறையால் 1916ல் கண்டுபிடிக்கப்பட்டன.
பொதுவாக அரசர்களின் கடிதங்கள் தங்கள் பெயர் மேலே குவிக்கப்பட்ட வடிவத்தில் தான் அமைந்திருக்கும். ஆனால் இக்கடிதங்களில் 'சுவாமிஜி" என்று கடிதத் தலைப்பிலும் திப்புவின் பெயர் கடித இறுதியிலும் காணப்படுகிறது.
மூன்றாம் மைசூர் போர் காலத்தில் தேசுராம் பாவ் மரத்தா ராணுவம் சிருங்கேரியைக் கொள்ளையடித்தது. சாரதா தேவி சிலையை இடமாற்றியது.
இதை அறிந்ததும் திப்பு இருந்த இடத்திலேயே சாரதா தேவி சிலையை நிறுவிட பெத்தனூர் மாவட்ட அதிகாரிக்கு உத்தர விட்டார்.
தனது கடிதத்தில் 'சிரித்துக் கொண்டே தீயசெயல் செய்பவர்கள் பின்னொரு காலத்தில் அழுது கொண்டே அதற்காக வருத்தப்படுவார்கள்" என்ற வடமொழிக் கவிதையை சுட்டிக் காட்டி எழுதுகிறார்.
அக்கோவிலுக்கு இரண்டு பல்லக்குகள் திப்வுவால் பரிசளிக்கப்பட்டன. வழிபாட்டுத் தலங்களுக்கு திப்பு கொடுத்த மரியாதையை இக்கடிதங்கள் மூலம் நாம் உணர முடிகிறது.
நஞ்சன் கூடு லட்சுமி காந்த கோவிலுக்கும், மேல்கோட்டின் நாராயணசாமி கோவிலுக்கும் யானை, நகை உட்பட ஏராளமான பொருள்களை வழங்கியுள்ளார்.
கோவில் மணிஓசைக்கும் மசூதியின் தொழுகை அழைப்பிற்கும் சம மரியாதை தந்தார்.
மசூதி அருகே அமைந்திருந்த நரசிம்ம கோயில், கங்காதரேசுவரர் கோயில் இரண்டிலும் தினசரி வழிபாடு எவ்வித இடையூறுமின்றி திப்பு ஆட்சிக் காலத்தில் நடந்தது.
சில இந்துக் கோயில்களில் ஏற்பட்ட உள்சச்சரவுகளைக் கூட திப்பு தலையிட்டு தீர்த்து அமைதிப்படுத்தியதாக அறிய முடிகிறது.
அவரது அரசாங்க உயர் பதவிகளில் ஏராள இந்துக்கள் அமர்த்தப்பட்டிருந்தனர். நிதி மற்றும் வருவாய் - பூர்ணய்யா, காசாளர் - கிருஷ்ண ராவ், சட்டம்ஒழுங்கு - சம அய்யங்கார், வெளி நாட்டுத் தூதரக அலுவல் சீனுவச ராவ், அப்பாஜி ராவ் என்று பட்டியல் நீள்கிறது. சாதி மதத்திற்கு அப்பாற் பட்டு பொருத்தமானவரைத் தேர்வு செய்தல் என்ற அணுகுமுறையை அவர் கடைபிடித்தார்.
'இந்து முஸ்லிம் ஒற்றுமைக்கு திப்பு அடையாளமாகத் திகழ்கிறார். தனது சொந்த மக்களின் ஆதரவைப் பெறாத எவராலும் பலம் வாய்ந்த அய்ரோப்பிய சக்தியை எதிர்த்து தொடர்ந்து போர்களை நடத்தியிருக்க முடியாது.
திப்பு இராணுவத்தினர் மற்றும் மக்கள் மத்தியில் மிகுந்த செல்வாக்குடன் விளங்கினார். இஸ்லாமின் அற்புதமான சூபி இயக்கத்தின் ஆர்வலர். இந்துக்களை மதிக்கத் தெரிந்தவர். இந்து சோதிடர்களிடம் கலந்து பேசத் தயங்காதவர்" என்று தனது யங் இந்தியா பத்திரிகையில் ஜன 1930ல் பெருமிதம் பொங்க காந்தி எழுதுகிறார்.
பிரெஞ்சு நாட்டுடன் உறவை பலப்படுத்திக் கொண்டார். புரட்சிகரமான எண்ணத்திற்கு இடமளிக்கும் 'ஜாக்கோபின் கிளப்" என்பதை திப்பு தொடங்கினார். அதில் இருந்து 59 உறுப்பினர்களுள் அவரும் ஒருவர். சுதந்திர, சமத்துவ, சகோதரத்துவ எண்ணங்கள் அங்கே பரிமாறிக் கொள்ளப்பட்டன. பிரெஞ்சுக் குடியரசின் 5ம் ஆண்டு நினைவை ஒட்டி 1797ல் இக்கிளையை துவக்கினார்.
அம்மன்றத்தில் ஜனநாயகக் கோட்பாடுகள், அரசியலமைப்புச் சட்டம், சட்டமியற்றும் முறைமைகள் குறித்து விவாதிக்கப்பட்டன. சுதந்திரத்துக்கான விடுதலை மரக் கன்று ஒன்றையும் அவர் நட்டார்.
தன்னை மன்னன் திப்பு என்றழைப்பதை விட 'சிட்டிசன் திப்பு" என்று பெருமிதம் பொங்க அழைத்துக் கொண்டார்.
ஆங்கிலேயர் வரவு ஆபத்தின் அறிகுறி. ஆங்கிலேயரிடமிருந்து தங்களது அரசுகளைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும் என்பதை காலத்தே உணர்ந்தவர் திப்பு. அண்டை நாட்டு அரசுகளை ஆங்கிலேயே எதிர்ப்புக்காகத் திரட்டியவர்.
பிரெஞ்சு, துருக்கி, ஆப்கானிஸ்தான் போன்ற வெளிநாடுகளுடன் உறவுகளை பலப்படுத்திக் கொண்டவர். கான்ஸ்டான்டி நோபிள், பாரீஸில் தூதரகங்களை நிறுவியவர்.
மாவீரன் நெப்போலியனுடன் கடிதத் தொடர்பு கொண்டதாக அறிகிறோம். உலக நாடுகளில் மைசூரை அறியச் செய்தவர். 17 வயதிலேயே அன்றைய மதராஸில் ஆங்கிலேய கிழக்கிந்தியக் கம்பெனிகளைக் கலக்கியவர். மீர் காசிம் போன்றவர்களைத் தோற்கடித்த பக்சார் வீரன் என்று புகழ் பெற்ற மன்றோவை காஞ்சிபுரத்தில் ஓட ஓட விரட்டியவர் திப்பு.
பின்நாட்களில் நெப்போலியனை வென்ற ஆர்த்தர் வெல்லெஸ்லி கூட திப்புவின் முன் நிற்க முடியாமல் போனது வரலாறு.
மக்களின் சமூக மற்றும் பொருளாதார மேம்பாடு குறித்து திட்டமிட்டவர். நாணய அச்சடிப்பு, நாள்காட்டி அளவையியல், நிதி மற்றும் வங்கி வர்த்தகம், விவசாயம், தொழில், ஒழுக்க நெறிகள் என்ற பன்முக சிந்தனை செயல்பாடு கொண்டவர். அரசு எந்திர முறையில் மேற்கத்திய வடிவங்களை புகுத்திய முதல் ஆட்சியாளர் என மதிப்பிடப்படுகிறார்.
முதன் முதலாக வங்கி நிர்வாக முறையை வர்த்தகத்திற்கு பயன்படுத்தியவர் திப்பு. கூட்டுறவு வங்கி சிறு சேமிப்பு முறையை ஊக்குவித்தவர்.
தொழில் வர்த்தகம் ஆகியவற்றில் கட்டுப்பாடுகளைக் கொண்டு வந்தவர். பட்டு, சந்தனம், மிளகு, ஏலம், தேங்காய், தங்கம், யானை, தந்தம் ஆகிய அனைத்து வியாபாராங்களிலும் மைசூர் புகழ் பெற்று விளங்கியது. மேற்கு நாடுகளில் இதற்கானச் சந்தையை ஒழுங்கமைத்தவர் அவர்.
அந்நிய நாட்டினர் எவர் கையிலும் மேற்கூறிய வர்த்தகம் சிக்கிவிடக்கூடாது என்பதில் கவனம் செலுத்தினார்.
ஏற்றுமதி, இறக்குமதி அரசாங்கக் கட்டுப்பாட்டில் நடந்தது. ராணுவத் தளவாடங்களுக்கு மட்டுமல்லாமல் துணி, காகிதம், கண்ணாடி, சர்க்கரை போன்ற பலவற்றிற்குமான தொழிற்கூடங்களை அமைத்தார்.
கப்பல் கட்டுமான தொழிலை சிறப்பாக்கிட வேண்டும் என்ற கனவை வைத்திருந்தார். 100 கப்பல் கட்டுவதற்கான ஆணையை 1793ல் வெளியிட்டிருந்தார். சீரங்கப் பட்டினத்தில் இரும்பு எஃகு தொழிற்சாலையை நிறுவினார். தாரமண்டல் என அதற்குப் பெயரிட்டார்.
பெங்களுர், சித்ரதுர்கா, பெத்தனூர், சீரங்கப்பட்டினம் ஆகிய நான்கு இடங்களில் கிளைகளை நிறுவினார். பதூல் முஜாஹிதீன் எனும் இராணுவ பத்திரிகையில் ராக்கெட் குறித்து திப்பு எழுதியிருப்பதாக நாம் அறிகிறோம்.
'தாரமண்டல்" என்று பெயரிட்டு அப்பகுதியில் ராக்கெட் மற்றும் வெடிமருந்துகள் தயாரிக்கப்பட்டதாகவும் திப்புவின் வீழ்ச்சியின் போது 9000 எண்ணிக்கையில் ராக்கெட் இருந்ததாகவும் கூறப்படுகிறது. அப்துல் கலாம் 'இந்தியாவில் ராக்கெட் தொழில்நுட்பம்" குறித்து 1991ல் ஆற்றிய உரையில் திப்புவின் தொழில்நுட்பம் குறித்து வியந்து பேசினார்.
பல நாடுகளிலிருந்து விதை மற்றும் தாவர வகைகளைக் கொணரச் செய்தார். உழுபவர்க்கு தரிசு நிலங்களை தந்து விவசாயத்தை மேம்படுத்தினார். அதோடு அந்த நிலங்களை வாரிசுதாரருக்கு உரியதாக்கிடவும், யாரும் அவர்களிடமிருந்து அபகரிக்க முடியாதென்பதையும் சட்டமாக்கினார்.
ஜாகீர் வரியை நீக்கினார். விவசாயத்திற்குக் கடனுதவி கொண்டு வந்தார். கட்டாய உழைப்பைத் தடை செய்தார். அவசியமற்ற வழக்குகளில் கால விரயம் ஏற்பட்டு விடாமல் தடுத்திட கிராமத் தகராறு தீர்ப்பாயங்களை ஊக்குவித்தார். தண்டனை முறைகளைக் கூட மாற்றினார்.
அபராதம், கசையடி போன்றவற்றை மாற்றி மரங்களை நடவேண்டும், குறிப்பிட்ட தாவர வகைகளை நட்டு இவ்வளவு காலம் பராமரிக்க வேண்டும்¢ இந்த அளவுக்கு வளர்க்க வேண்டும் என்றெல்லாம் தண்டனை முறைகளை உருவாக்கினார்.
தனது மகன் ஃபதே ஹைதர் அனுமதியின்றி வேறொருவர் தோட்டத்தில் காய் பறித்ததற்கு தண்டனை வழங்கினார்.
கிருஷ்ணராஜ சாகர் அணைக்கட்டில் கீழ்க்கண்ட வார்த்தைகளை பொறிக்கச் செய்தார். 'அரசாங்கம் இந்த அணையைக் கட்டி வருகிறது. பயிர், காய்கறிகள், பழங்கள் ஆகியவற்றிற்கான பாசன வசதியை எவரும் பெறலாம்".
சீரங்கப்பட்டினத்தில் ஜாமி அல் உமர் என்ற பெயரில் பல்கலைக்கழகம் நிறுவ பெரு விருப்பம் கொண்டார். ஃபாஜி அக்பர் என்ற பெயரில் செய்தி பத்திரிகை தொடங்கினார்.
அதில் எழுதினார். பெர்ஷியன், அரபி, உருது போன்ற மொழிகளுடன் கன்னடமும் மராத்தியும் அறிந்திருந்தார். ஐரோப்பிய மொழிகளில் பிரெஞ்சு, ஆங்கிலம் கற்றறிந்தார். தனது ஆட்சிக் காலத்தில் 45 புத்தகங்களை வெளியிட வைத்தார்.
அவருடைய நூலகத்தில் ஒளரங்சீப்பின் கையெழுத்துப் பிரதியான குரான் இருந்தது. இரண்டாயிரத்திற்கு மேற்பட்ட புத்தகங்கள் இருந்தன. சூபி துறவிகளின் மாபெரும் ஆல்பம் ஒன்றை தொகுத்து வைத்திருந்தார்.
புகையிலைப் பழக்கத்திற்கு எதிர்ப்பு தெரிவித்தவர் திப்பு. திருமணக் கொண்டாட்டங்களில் ஆடம்பர செலவினங்களுக்கு கட்டுப்பாடு விதித்தார். ஆதரவற்ற பெண்களையோ, குழந்தைகளையோ விற்பதை தடைசெய்தார் என்ற செய்தி ஆறுதல் தரும் வேளையில் அப்படிப்பட்ட நடைமுறை வழக்கத்தில் இருந்தது அதிர்ச்சி அளிக்கிறது.
மதுவிலக்கை அமுல்படுத்தியவர் திப்பு. 'மது விலக்கை மதரீதியாகப் பார்க்க வேண்டியதில்லை. பொருளாதாரம் சார்ந்த ஒன்று. துவக்கத்தில் நமது கருவூலம் பாதிக்கப்படலாம். ஆனால் நமது மக்களின் நன்னெறி உயரும். . நன்னடத்தை மிகுந்த எதிர்கால இளைஞர்களை உருவாக்க வேண்டியது நமது பொறுப்பு. நமது கருவூலக் கவலையை விட நமது மக்களின் நன்னெறி மற்றும் ஆரோக்கியம் உயர்ந்ததல்லவா?" என்று மீர்சாதிக் என்பவருக்கு 1787ல் தந்த குறிப்பில் நாம் காண முடிகிறது.
மனித குலம் கண்ணீருடனும் செந்நீருடனும் எழுப்பக் கூடிய மாட மாளிகைகளும் பெரும் அணைக்கட்டுகளும் நமது சாதனைகளாக முடியாது, புகழையும் சேர்க்காது என்றார். 'நாம் வாழ்வதற்கும் சாவதற்கும் மாபெரும் நோக்கம் இருக்க வேண்டும்.
நமது தேசத்தின் ஆன்மா விவசாயத்தில் இருக்கிறது. நமது வளமான நிலத்தில் நாம் தரும் உழைப்பிற்கு பலன் உறுதி. பஞ்சமும் தேவையும் அறியாமையாலோ சோம்பேறித் தனத்தாலோ அல்லது லஞ்ச லாவண்யத்தாலோ வருகிறது" என்று 1788ல் சுற்றறிக்கை ஒன்றை தனது அதிகாரிகளுக்கு திப்பு அனுப்பினார்.
ஆங்கிலேயரிடம் இருந்து தனது அரசியல் விடுதலைக்காக, சுதந்திரத்தைக் காப்பதற்காக உறுதியாகப் போராடியவர். உயிர் நீத்தவர். நூறாண்டு குள்ளநரியாக வாழ்வதை விட ஒருநாள் சிங்கநிகர் வாழ்க்கை போதும் என்றார்.
உலகளாவிய திப்புவின் முயற்சிகளை முறியடிப்பதில் பிரிட்டன் முக்கிய பங்காற்றியது. ஆங்கிலேயர்கள் தனியாக திப்புவோடு போராடி வெல்ல முடியவில்லை. மராட்டிய மராத்தாக்களுடனும் அய்தராபாத் நிசாமுடனும் உடன்பாடு கொண்டனர்.
அவர்களின் உதவியுடன் மைசூர் சீரங்கப்பட்டினத்தில் திப்புவைத் தோற்கடித்தனர். 1792 மார்ச் 22ல் திப்பு ஆங்கிலேயருக்கு உடன்பட்டு கையெழுத்திட நேர்ந்தது. தனது ராஜ்யத்தில் பாதியை இழந்தார்.இருமகன்களை பிணை வைக்க நேர்ந்தது. கருணையில்லாமல் கார்ன் வாலீஸ் அவரது மகன்களை கல்கத்தாவிற்குக் கொண்டு சென்றார்.
திப்பு மைசூர் போர்கள் நான்கிலும் பங்கேற்றவர். கிழக்கிந்திய கம்பெனியின் தலைமையிடமிருந்த 'லீடன்ஹால் ஸ்டிரீட்" திப்பு குறித்த நடுக்கத்திலிருந்தது. முதல் இரண்டு போர்களிலும் ஆங்கிலேய ராணுவம் திப்பு மற்றும் இந்திய வீரர்களால் முறியடிக்கப்பட்டது. மைசூரில் போர் குதிரைகள் இறக்கை கட்டிப் பறந்தன போன்று போரிட்டதாக அலெக்சாந்தர் போப் என்பவர் பதிவு செய்கிறார்.
செப்.1780களில் 36 ஆங்கில ராணுவ அதிகாரிகள் கொல்லப்பட்டனர். 500க்கும் மேற்பட்ட அய்ரோப்பிய வீரர்கள் சிறை பிடிக்கப்பட்டனர். பிப்.1782ல் கர்னல் பிரைட்வொயிட் என்பவரை தஞ்சாவூருக்கு அருகில் திப்பு தோற்கடித்ததாக அறிகிறோம். 1400 சிப்பாய்களையும் 100 அய்ரோப்பியர்களையும் அவர்களது ஆயுதங்களுடன் கைப்பற்றியதாகத் தெரிகிறது.
ஆங்கிலேயரின் தொடர் வற்புறுத்தல்களுக்கு திப்பு உடன்பட மறுத்தார். நான்காவது மைசூர் போரில் மே 4, 1799ல் திப்பு வீர மரணம் எய்தினார். சாதாரண படை வீரனைப் போன்றே தனது தாய் நாட்டைக் காப்பதற்காக தெருவிறங்கிப் போராடினார்.
ஆங்கிலேய ராணுவத்தினன் ஒருவன் அவரது உடைவாளைப் பறிக்க முயன்ற போது திப்பு அவனை தன் வாளால் வீழ்த்தினார் என்று அறிகிறோம். புகழ் வாய்ந்த அவ்வாள் லண்டன் கொண்டு செல்லப்பட்டது. 1988ல் தான் இந்தியா அவ்வாளை மீண்டும் பெற்றது.
அவரது வாரிசுகள் திப்புவின் ஆட்சியை மீண்டும் கொணர்வோம் என்ற முழக்கத்தில் 1806 வேலூர் எழுச்சியில் முன் நின்றார்.
எளிய வாழ்க்கை முறையை விரும்பிய திப்பு பொதுவாக எல்லோருக்கும் கிடைக்கக்கூடிய உணவு வகைகளையே எடுத்துக் கொள்வார். கடிதங்களைத் தானே எழுதும் பழக்கம் உடையவர். மாபெரும் நாட்டுப்பற்றாளராக, குடிமக்களின் மேன்மை குறித்த சிந்தனையாளராக, படிப்பறிவு மிக்கவராக, போராடும் வீரனாக என்று பல்வேறு சிறப்புகளுடன் வாழ்ந்தவர் திப்பு. NANDRI TO : INTERNET.
------------------------------------------------------------------பராமரிப்பற்ற நிலையில் திப்புவின் பீரங்கி!
No comments:
Post a Comment