Pages

இஸ்லாமிய வரலாற்று பார்வை ! (HISTORY OF ISLAM)

                  

நபீ ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள்


நபி ஆதம் அலைஹிஸ்ஸலாம் அவர்கள் இறைவனால் படைக்கப்பட்ட ஆதி மனிதர், முதல் நபி, மானிடவர்க்கத்தின் மூலப்பிதா என சிறப்பு பெயர்களால் அழைக்கப்படுகிறார்கள்.
எல்லாம் வல்ல அல்லாஹ் ஆதம் (அலை) அவர்களை களிமண்ணிலிருந்து படைத்தான். அவனின் பிரதிநிதியாக பூலோகத்திற்கு அனுப்பியும் வைத்தான். இறைவன் தனது திருமறையில் முதல் மனித படைப்பினமான ஆதம்( அலை) அவர்களை படைத்தது பற்றி தெளிவாக கூறுகிறான்.

ஓசை தரக்கூடிய கருப்பான களி மண்ணால் மனிதனை நிச்சயமாக நாமே படைத்தோம். (திருக்குர்ஆன் 15:26)

(அதற்கு) முன்னர் ஜின்னை (ஜின்களின் மூல பிதாவை) கடிய சூடுள்ள நெருப்பிலிருந்து நாம் படைத்தோம். (திருக்குர்ஆன் 15:28) 

முதல் மனித படைப்பைப் பற்றி ஹதீஸ்கள் பின்வருமாறு குறிப்பிடுகின்றன. 

மலக்குகள் நூர் எனும் ஒளியால் படைக்கப்பட்டார்கள். ஜின்கள் நெருப்பின் ஜுவாலையால் படைக்கப்பட்டார்கள். ஆதம்( அலை)உங்களுக்கு விளக்கமளிக்கப்பட்டுள்ள பொருளால் (மண்ணால்) படைக்கப்பட்டார்கள். (நூல்: முஸ்லிம் - அறிவிப்பாளர்: ஆயிஷா றழியல்லாஹு அன்ஹா) 

அல்லாஹ் ஆதமை பூமி முழுவதும் திரட்டப்பட்ட மண்ணின் ஒரு கை அளவிலிருந்து படைத்தான். எனவே ஆதமின் மக்கள் பூமியின் நிறம் மற்றும் தன்மைக்கு ஏற்றவாறு அமைகின்றனர். அவர்களில் சிலர் வெள்ளையாகவும், சிலர் சிவப்பாகவும், சிலர் கறுப்பாகவும், சிலர் இரண்டும் கலந்துமுள்ளனர். அவர்களில் சிலர் கெட்ட குணமுடையோராகவும், சிலர் மென்மையான குணமுடையோராகவும், சிலர் கடின சித்தமுடையோராகவும், சிலர் நடுநிலையிலும் உள்ளனர். (நூல்: அஹ்மத் - அறிவிப்பாளர்: ஆபூமூஸா றழியல்லாஹு அன்ஹு) 

மனித குலத்தின் முதல்வராக நபீ ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் தஆலா படைக்க நாடிய போது பூமியின் பல பாகங்களிலுமிருந்து 10 நாட்கள் மண் சேகரிக்கப்பட்டது. 20 நாட்கள் மண் குழைக்கப்பட்டது. பின்னர் 40 நாற்பது நாட்கள் அல்லாஹ் தஆலா நபீ ஆதம் (அலை) அவர்களை அழகிய உருவமாக அமைத்தான். பின்னர் 20 நாட்கள் மண்ணின் இயல்பிலிருந்து மனித உடலின் இயல்பாக மாறும் வரை அந்த உருவத்தை விட்டு வைத்தான். மொத்தம் 3 மாதங்கள் ( ரஜப், ஷஃபான், றமழான்) கழிந்தன. 

பின்னர் அல்லாஹ் தஆலா உயிரை (றூஹ்) அவர்களுக்கு கொடுத்தான். மலக்குகள் அனைவரையும் அவர்களுக்கு சுஜூத் செய்ய வைத்தான். பின்னர் அவர்களை சுவர்க்கத்து ஸூன்துஸ் எனும் விரிப்பு விரிக்கப்பட்ட சிவந்த மாணிக்கங்களால் உருவான 700 தூண்கள் கொண்டமைந்த மேடையில் வைத்து மலக்குகள் எல்லா வானங்களிலும் வலம் வந்து சுவர்க்கத்தில் நுழைவித்தனர். அவர்களுக்கு சுவர்க்கத்து பட்டாடைகளும், மரகதத்தினால் உருவான கிரீடமும் அணிவிக்கப்பட்டது. அந்தக் கிரீடம் ஒளிவீசிக் கொண்டிருந்தது. இவற்றுக்கு எல்லாம் மகுடமாக பெருமானார் (ஸல்) அவர்களின் ஒளி ஆதம் (அலை) அவர்களின் நெற்றியில் ஒளிர்ந்தது. 

நபீ ஆதம் (அலை) அவர்கள் ஒருநாள் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவர்களின் இடது பக்க விலா எழும்பை எடுத்து அதிலிருந்து ஹவ்வா (அலை) அவர்களை அல்லாஹ் தஆலா படைத்தான். இதனால்தான் ஒவ்வொரு மனிதனுக்கும் வலப்பக்க விலா எழும்புகள் 18 ஆகவும் இடப்பக்க விலா எழும்புகள் 17 ஆகவும் காணப்படுகிறது. . இதையே திருக்குர்ஆன் தெளிவாக எடுத்துரைக்கிறது. 

மனிதர்களே! உங்கள் இறைவனுக்கு பயந்துக் கொள்ளுங்கள், அவன் உங்கள் யாவரையும் ஒரே ஆத்மாவிலிருந்து படைத்தான், அவரிலிருந்தே அவர் மனைவியையும் படைத்தான்: பின்னர் இவ்விருவரிலிருந்து, அநேக ஆண்களையும், பெண்களையும் (வெளிப்படுத்தி உலகில்) பரவச் செய்தான். ஆகவே, அல்லாஹ்வுக்கே பயந்துக் கொள்ளுங்கள். அவனைக்கொண்டே நீங்கள் ஒருவருக்கொருவர் (தமக்குரிய உரிமைகளைக்) கேட்டுக் கொள்கிறீர்கள். மேலும் (உங்கள்) இரத்தக் கலப்புடைய உறவினர்களையும் (ஆதரியுங்கள்) - நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கண்காணிப்பவனாகவே இருக்கின்றான். (திருக்குர்ஆன் 4:1) 

ஆதம் (அலை) அவர்கள் கண்விழித்து பார்த்த போது தங்களின் தலைப்பக்கமாக ஹவ்வா (அலை) நிற்கின்றார்கள். யார் நீங்கள் ? என்று கேட்டார்கள் ஆதம் (அலை) அவர்கள். நான் உமது மனைவி ஆயினும் எனக்கு நீங்கள் மஹர் தரவேண்டும் என்று சொன்னார்கள் ஹவ்வா (அலை) அவர்கள். இறைவா நான் என்ன மஹர் கொடுக்க வேண்டும் என்று இறைவனிடம் கேட்டார்கள் ஆதம் (அலை) அவர்கள். அதற்கு இறைவன் உமது பிள்ளை நபீ முஹம்மத் (ஸல்) அவர்கள் மீது 20 முறை ஸலவாத் சொல்லுங்கள். அதுதான் மஹர் என்று அல்லாஹ் தஆலா சொன்னான். இது வௌ்ளிக்கிழமை சூரியன் மத்தியில் இருந்து சாய்ந்தபின் நடை பெற்றது. இதனால்தான் வௌ்ளிக்கிழமை நிகாஹ் செய்வது சுன்னத்தாக்கப்பட்டது. 

ஹவ்வா (அலை) அவர்கள் உலகத்து மாதர்களில் மிக அழகானவர்களாக இருந்தார்கள். அவர்களுக்கு சுவர்க்கத்து ஆடைகள் அணிவிக்கப்பட்டு சுவனத்து மாதர்கள்-ஹூர்களும் சுவனத்து வாலிபர்களும் ஆதம்(அலை) , ஹவ்வா(அலை) தம்பதியினரை பின் தொடர விண்ணகம் முழுவதும் மலக்குகளுடன் அவர்கள் வலம்வந்தார்கள். பின்னர் 1000 ஆண்டுகள் சுவனத்து பூஞ்சோலையில் வாழ்ந்தார்கள். பின்னர் அவ்விருவரையும் அல்லாஹ் தஆலா பூமிக்கு அனுப்பிவைத்தான். இதையே திருக்குர்ஆன் பின்வருமாறு எடுத்துரைக்கிறது. 

(அதற்கு) இறைவன், "இதிலிருந்து நீங்கள் இறங்குங்கள் - உங்களில் ஒருவர் மற்றவருக்குப் பகைவராயிருப்பீர்கள். உங்களுக்கு பூமியில் தங்குமிடம் இருக்கிறது அதில் ஒரு (குறிப்பிட்ட) காலம் வரை நீங்கள் சுகம் அனுபவித்தலும் உண்டு" (திருக்குர்ஆன் 7:24) 

"அங்கேயே நீங்கள் வாழ்ந்திருப்பீர்கள் அங்கேயே நீங்கள் மரணமடைவீர்கள் (இறுதியாக) நீங்கள் அங்கிருந்தே எழுப்பப்படுவீர்கள்". (திருக்குர்ஆன் 7:25) 

நபீ ஆதம் (அலை) அவர்கள் இலங்கையில் நூத் அல்லது றாஹூன் என்று அக்காலத்திலும் தற்காலத்தில் பாவா ஆதம் மலை எனவும் அழைக்கப்படும் மலையில் இறங்கினார்கள். இந்த மலையின் சூழலில் 100 நீர் ஊற்றுக்கள் உள்ளன. மாணிக்கங்களும் மரகதங்களும் வாசனைத் திரவியங்களும் அழகிய மரங்களும் பூக்களும் அதனை சூழ அமைந்துள்ளன. வௌ்ளம் ஏற்படும் காலங்களில் மலையில் மறைந்துள்ள மாணிக்கங்கள் நீரில் அரிக்கப்பட்டு நீரோடைகளை வந்தடைகின்றன. அதை மனிதர்கள் எடுத்துக் கொள்வார்கள். இந்த மலையின் உச்சியில் நபீ ஆதம் (அலை) அவர்களின் கால் அடிச்சுவடு காணப்படுகிறது. 

ஹவ்வா (அலை) அவர்கள் சவூதி அரேபியாவின் ஜித்தாவில் இறங்கினார்கள். பின்னர் 300 அல்லது 500 ஆண்டுகளின் பின்னர் அறபாத்திடலிலே நபீ ஆதம் (அலை) அவர்களும் ஹவ்வா (அலை) அவர்களும் சந்தித்தார்கள். 

ஆதம் (அலை) அவர்கள் 1000 ஆண்டுகள் வாழ்ந்தார்கள். அல்லாஹ் தஆலா அவர்களுக்கு 10 ஸூஹூபுகளை அருளி முதலாவது றஸூலாகவும் அவர்களை தேர்ந்தெடுத்தான். அவர்களும் மனைவியும் சேர்ந்து 40 அல்லது 70 ஹஜ்ஜூகள் செய்தார்கள். அவர்களின் ஷரீஅத்தில் கூட செத்த பிராணி , பன்றியின் மாமிசம் இரத்தம் என்பன ஹறாமாக்கப்பட்டிருந்தது. 

நபீ ஆதம் (அலை) அவர்களுக்கு மரணம் நெருங்கிய போது மலக்குகள் வந்து சூழ்ந்து நின்றனர். அவர்கள் மரணித்ததும் மலக்குகளே அவர்களை குளிப்பாட்டி, கபனிட்டு தொழுவித்து இலங்கையில் றாஹூன் மலையில் அடக்கம் செய்தனர். இதிலிருந்து ஒரு வருடத்தின் பின்னர் ஹவ்வா (அலை) அவர்கள் மரணித்தார்கள். அவர்கள் ஜித்தாவில் அடக்கம் செய்யப்பட்டார்கள். இவ்விருவரும் வௌ்ளிக்கிழமை மரணித்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது. 


                       இறவாத மனிதர் ஹிழ்ரு (அலை)


உலகத்திற்கு அனுப்பப்பட்ட நபிமார்களில் ஹிழ்ரு(அலை) மட்டும் இன்னும் உயிரோடு வாழ்ந்து வருகிறார்கள். கடற்கரையோரத்தில் சுற்றித்திரிகிறார்கள்; கடல் பிரயாணம் செய்பவர்கள் அவரிடம் பாது காப்புத் தேடி அழைப்பு விடுத்தால் உடனே வந்து காப்பாற்றுவார்க ஆண்டு தோறும் ஹஜ் செய்ய வருகிறார்கள்ளூ ஹஜ்ஜாஜிகளுடன் முஸாபஹா செய்கிறார்கள்; எல்லா நபிமார்களையும் சந்தித்திருக்கிறார்கள்; பெரியார்கள் நாதாக்கள், ஷைகு மார்கள் கூட அவரை சந்தித்து ஸலாம் கூறியுள்ளார்கள்..
“ஐனுல் ஹயாத்” என்றொரு நீரூற்று உண்டு. அதில் சிறிதளவேனும் பருகியவர் என்றென்றும் உயிர்வாழ்வார் மரணிக்கமாட்டடார். அதை ஹிழ்ரு(அலை) பருகியுள்ளார்கள். அதனால் ‘சாகாவரம்’ பெற்றுள்ளார்கள்… இவ்வாறு ஹிழ்ரு (அலை) பற்றி கதை சொல்லப்பட்டு வருவதை பார்க்கிறோம்.
வானொலி முஸ்லிம் நிகழ்ச்சியில் இப்படியான ஒரு கதை மிகவும் அழகாக சோடித்து அற்புதமாக பேசப்பட்டது. தரீக்காகாரர்களும் பேசிவருகிறார்கள்.
எனவே ஹிழ்ரு (அலை) இன்னும் உயிருடன் இருக்கிறார்களா? உலகம் அழியும் வரை உயிர் வாழ்வதற்கு எவரையேனும் அல்லாஹ் விட்டு வைத்திருக்கிறானா? அல்லாஹ்வுடைய தூதர் இது பற்றி ஏதும் கூறியுள்ளார்களா? என்பதை கவனிப்போம்.
ஆதம் (அலை) படைக்கப்பட்ட போது அவர்களுக்கு சுஜுது செய்ய மலக்குகளுக்கும் இப்லீஸ் (ஷைத்தானு)க்கும் அல்லாஹ் கட்டளையிட்ட போது இப்லீஸ் மட்டும் மறுப்புத் தெரிவித்தான். அதனால் அவன் சுவர்க்கத்திலிருந்து பூமிக்கு அனுப்பப்பட்டான் என்ற வரலாறை அல்குர்ஆன் கூறுகிறது.
அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகிய ஷைத்தான் பூமிக்கு வரும் முன் அல்லாஹ்விடம் கேட்ட வரம் பற்றி கூறும்போது இறந்தோரை எழுப்பும் நாள் வரையில் நீ எனக்கு அவகாசம் அளிப்பாயாக என்று இப்லீஸ் கேட்டான். நிச்சயமாக நீ (அவ்வாறே) அவகாசம் அளிக்கப்பட்டவனாக இருக்கிறாய் என்று அல்லாஹ் கூறினான். (7:13-15)
மனிதர்களை வழிகெடுப்பதற்கு சாகாவரம் பெற்ற ஒருவனாக ஷைத்தான்இருக்கிறான் என்று குர்ஆன் மிகத் தெளிவாக கூறுகிறது. இறைவனுக்குச் சவாலாக ஷைத்தான் களம் இறங்கியிருப்பதனால் ஆதம் நபி முதல் கியாமத் நாள் வரும் வரை மனிதர்கள் வழிதவறாமல் எச்சரிக்கையாக நடககவேண்டும் என்பதற்காக நபிமார்கள் மூலம் அல்லாஹ் அறிவுரைகளை அனுப்பி வைத்தான்.
மக்களை நல்வழிப்படுத்த வந்த எல்லா நபிமார்களும் முஹம்மது நபியுடைய வருகைக்கு முன் மரணித்துவிட்டார்கள். அதில் ஈஸா (அலை) அவர்கள் மட்டும் உயிரோடு இருக்கிறார்கள். கியாமத் நாளின் அடையாளமாக அவர்கள் இறக்கப்படுவார்கள் என்று குர்ஆன்மற்றும் நபிமொழி கூறுகிறது.
“முஹம்மது (நபி) ஒரு இறைத் தூதரேயன்றி வேறில்லை. அவருக்கு முன் (வந்த) தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியே திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செயய்வே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான். (3:144)
உஹத் யுத்தத்தின் போது முஹம்மது நபி வஃபாத்தாகி விட்டார்கள் என்ற வதந்தி பரவியபோது ஸஹாபாக்களுடைய மனோ நிலை வேறுவிதமாக இருந்தது. அப்போது தான் இவ்வசனம் அருளப்பட்டது. அது போல் முஹம்மது நபி (ஸல்) மரணிக்கவே மாட்டார் என உமர் (ரழி) அவர்கள் நபியவர் களின் வபாத்தின்போது கூறியபோது அபூபக்கர் (ரழி) இந்த வசனத்தை ஓதிக் காட்டி முஹம்மது நபியும் மரணிக்கக் கூடிய வரே என்பதை எடுத்துக் காட்டினார்கள்.
எனவே ஹிழ்ரு (அலை) நபியாகவோ அல்லது சாலிஹான மனிதராகவோ இருந்தாலும் அவரும் மரணித்து விட்டார் என்றே குர்ஆன் கூறும் சான்று இதோ.
(நபியே!) உமக்கு முன் (வாழ்ந்த) எந்த மனிதருக்கும் நாம் நித்திய வாழ்வை ஏற்படுத்தியதில்லை (21:34)
ஹிழ்ரு (அலை) இதில் விதிவிலக்கல்ல என்பதற்கு மற்றொரு சான்று இது.
“நான் உங்களுக்கு வேதத்தையும் ஞானத்தையும் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் ஒரு தூதர் உங்களிடம் வந்தால் அவர்மீது நம்பிக்கை கொண்டு அவருக்கு உதவ வேண்டும் என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து இதனை நீங்கள் உறுதிப்படுத்துகிறீர்களா? என்னுடைய இந்த உடன்படிக்கைக்கு கட்டுப்படுகின்றீர்களா? என்று நபிமார்களிடம் அல்லாஹ் கேட்டான். “நாங்கள் உறுதிப்படுத்துகின்றோம் என்று நபிமார்கள் கூறினார்கள். (3:81)
ஒரு நபி பிரசாரப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது இன்னுமொரு நபி அனுப்பப்பட்டால் அந்த நபி மற்ற நபிக்கு பக்கபலமாக நின்று உதவ வேண்டும் என்ற உறுதிமொழியில் நபிமார்கள் அனுப்பப்பட்டிருக்கிறார்கள்.
முஹம்மது நபி (ஸல்) அவர்கள் இஸ்லாமிய பிரசாரப் பணியை செய்து பல இன்னல்களுக்கும் துன்பங்களுக்கும் ஆளாகி பல யுத்தங்களை சந்தித்து போராடியபோது ஹிழ்ரு (அலை) உயிருடன் இருந்தால் ஏன் முன்வந்து உதவவில்லை? நபியவர்களுக்கு பக்கபலமாக நின்று ஏன் துணை புரியவில்லை? அவர்கள் என்றென்றும் உயிரோடு இருப்பவர் என்றால் அல்லாஹ்விடம் செய்த உறுதி மொழியை ஏன் நிறைவேற்றவில்லை? அல்லாஹ்வுடைய கட்டளைக்கு மாற்றமாக ஹிழ்ரு (அலை) ஓடி ஒழிந்திருப் பார்கள் என நம்பலாமா? குற்றம் சாட்டலாமா? நிச்சயமாக முடியாது, கூடாது. அவர்கள் உயிரோடு இல்லை. அதனால்தான் முஹம்மது நபியவர்களை சந்திக்கவில்லை. உதவி செய்ய வரவில்லை என்பதே உண்மையாகும்.
சமகாலத்தில் இரு நபிமார்கள் மூன்று நபிமார்கள் பணிபுரிந்துள்ளார்கள். வாழ்ந்துள்ளார்கள் என்று குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்.
ஹிழ்ரு (அலை) கல்வி அறிவு கொடுக்கப்பட்ட ஒரு அடியார். அவரிடம் மூஸா (அலை) பல விடயங்களை அறிந்து கொண்டார் என்று அல்லாஹ் (18:60-82) கூறுகிறான். ஹிழ்ரு (அலை) முஹம்மது நபியின் காலத்தில் வாழ்நதிருந்தால் அதனை அல்லாஹ் குர்ஆனில் குறிப்பிட்டு இருப்பான். அல்லது நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டிருப்பார்கள். ஹிழ்ரு (அலை) நபியவர்களின் காலத்திலும் உயிரோடு இருக்கவில்லை என்பதற்கு இதுவும் ஒரு சான்றாகும்.
“அல்லாஹ்வின் மீது ஆணையாக மூஸா (அலை) உயிருடன் இருந்தால் என்னைப் பின்பற்றுவதை தவிர அவருக்கு வேறு வழியில்லை என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் (ரழி), நூல்: அஹ்மத்)
மேலே கூறப்பட்ட 3:81 வசனத்திற்கு விளக்கமாக இந்த நபிமொழி காணப்படுகிறது. மூஸா நபி உயிருடன் இருந்தால் அவரும் முஹம்மது நபியை ஈமான் கொண்டு முஹம்மது நபியுடைய ஷரீஅத்தை பின்பற்றி துணை நிற்கவேண்டும். ஆனால் மூஸா நபி அன்று உயிருடன் இருக்கவில்லை. ஹிழ்ரு (அலை) உயிரோடு இருந்தால் அவர் கண்டிப்பாக முன் வந்து ஈமான் கொண்டு இந்த ஷரீஅத்திற்கு துணை நின்றிருக்க வேண்டும். அவர்களும் உயிருடன் இருக்கவில்லை என்பதற்கு இதுவும் மிகச் சிறந்த சான்றாகும்.
ஒரு நாள் இஷாத் தொழுகைக்குப் பின் ஸஹாபாக்களை நோக்கி இன்று உயிருடன் உள்ள எவரும் இந்த பூமியில் நூறு ஆண்டுகளுக்குப் பின் உயிருடன் இருக்க மாட்டார்கள் என நபி (ஸல்) கூறினார்கள். (அறிவிப்பவர்: ஜாபிர் இப்னு அப்துல்லாஹ், நூல்: புகாரி, முஸ்லிம்)
நபியவர்களின் காலத்தில் ஹிழ்ரு (அலை) உயிருடன் இருந்ததாக வைத்துக் கொண்டாலும் நூறு ஆண்டுகளுக்குப் பின் அவரும் மரணித்தாக வேண்டும். நித்திய உயிர் பெறமுடியாது. எனவே அவர் அன்றும் உயிரோடு இல்லை. இன்றும் உயிரோடு இல்லை இனியும் உயிரோடு இருக்க முடியாது என்பதற்கு மற்றொரு சான்று இது.
எனவே ஹிழ்ரு (அலை) அவர்கள் சாகாவரம் பெற்றவர் என்றும் உயிர் வாழும் மனிதர் என்று கூறுவது வெறும் கற்பனையும் கட்டுக் கதைகளுமே தவிர வேறில்லை.
ஹிழ்ரு (அலை) நித்திய உயிர் பெற்றவர் என்று கதையளப்பவர்கள் தாங்கள் சொல்லும் கதை பொய்யானது என்பதற்கு “வருடம் தோறும் இல்யாஸ் (ரஹ்) அவர்களை சந்தித்து ஹிழ்ரு (அலை) ஸலாம் சொல்கிறார்” என்று கூறும் செய்தியே போதிய சான்றாகும். ஹிழ்ரு (அலை)யை நித்திய ஜீவனாக முயன்று கடைசியில் இல்யாஸ் (அலை) அவர்களையும் நித்திய ஜீவனாக ஆக்கி விட்டார்கள்? பொய்கள் எப்போதும் நிலைத்திருப்பதில்லை என்பதற்கு அவர்களுடைய அற்புத புராண கதைகளே சான்றாகி விட்டது.
ஷைத்தானுக்குக் கொடுக்கப்பட்ட இந்த சாகாவரம் யாருக்கும் எந்த நபிக்கும் கொடுக்கப்படவில்லை. என்பதை மக்கள் புரிந்து கொள்ள வேண்டும்.

                      ஸிப்துர் றசூல்’ இமாம் ஹூசைன் (றழி)



முஹர்ரம் மாதம் நினைவு கூறப்படவேண்டிய ‘ஸிப்துர் றசூல்’ இமாம் ஹூசைன் (றழி) அவர்கள்
.
நபி (ஸல்) அவர்களின் பேரர்களில் ஒருவரும் இஸ்லாத்தின் 
நான்காவது கலீபா அலி இப்னு அபித்தாலிப் கர்றமல்லாஹூ வஜ்ஹஹூ அன்னை பாத்திமா றழி அவர்களின் அன்புப் புதல்வரும், இமாம் ஹஸன் (றழி) அவர்களின் அருமைச் சகோதரருமாகிய இமாம் ஹூசைன் இப்னு அலி இப்னு அபீத்தாலிப் (றழி) அவர்கள் புனித முஹர்ரம் மாதத்தில் நினைவு கூறப்படவேண்டியவர்களில் அதிவிசேடமானவர்கள். 
இவர்கள் ஹிஜ்ரி நாலாம் ஆண்டு ஷஃபான் மாதம் பிறை ஐந்தில் மதீனா முனவ்வராவில் பிறந்தார்கள் 

இவர்கள் பிறந்தபோது நபி (ஸல்) அவர்கள் தங்களின் அருள் நிறைந்த உமிழ்நீரை ஹூசைன் றழி அவர்களின் வாயில் வைத்து சுவைக்கச் செய்தார்கள் அவர்களின் காதில் பாங்கு சொன்னார்கள் அவர்களின் வாயில் உமிழ்ந்தார்கள் அவர்களுக்காக துஆப்பிராத்தனை செய்தார்கள் அவர்கள் பிறந்து ஏழாவது நாளில் அவர்களுக்கு ஹூசைன் – சின்ன அழகர் என்று பெயரிட்டார்கள். 

அதே நாளில் அவர்களுக்காக ஒர் ஆட்டையருத்து அகீகஹ் கொடுத்தார்கள். தங்களின் அன்புப் புதல்வி பாத்திமாவையழைத்து ஹுசைனுடைய தலை முடியைச் சிரைத்து அதை நிறுத்து அதன் நிறைக்கேற்ப வெள்ளியை ‘ஸதகஹ்’ வாக கொடுங்க்ள என்று கூறினார்கள். 

ஹூசைன் றழி அவர்கள் மீது நபி (ஸல்) அவர்கள் அதிக அன்பும், இரக்கமும் கொண்டவர்களாக இருந்தார்கள் அதேபோன்று அவர்களின் சகோதரர் ஹசன் (றழி) அவர்கள் மீதும் அதிக அன்பு, இரக்கம் கொண்டவர்களாக இருந்தார்கள் இவ்விருவரைப்பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்ப்பங்களில் புகழ்ந்து கூறியுள்ளார்கள். 

ஒரு முறை இவ்விருவரைப்பற்றியும் நபி (ஸல்) அவர்கள் புகழ்ந்து கூறுகையில் ‘அல் ஹஸனு வல் ஹுசைனு செய்யிதா ஷபாபி அஹ்லில் ஜன்னஹ்’ ஹசனும் ஹுசைனும் சுவர்கத்திலுள்ள வாலிபர்களின் தலைவர்கள் என்று கூறினார்கள். 

இன்னுமொரு சந்தர்ப்பத்தில் நபி (ஸல்) அவர்களிடம் உங்களுடைய குடும்பத்தினரில் உங்களுக்கு மிக விருப்பமானவர்கள் யார்? என்று கேட்கப்பட்டது அதற்கு அவர்கள் ஹசனும், ஹூசைனும் என்று கூறினார்கள். (ஆதாரம்-திர்மிதி) 

இவ்வாறு இவ்விரு சகோதரர்கள் பற்றியும் நபி (ஸல்) அவர்கள் பல சந்தர்பங்களில் புகழ்ந்து கூறியுள்ளார்கள் 

ஆயினும் இவ்விருவரில் இமாம் ஹுசைன் (றழி) அவர்கள் முஹர்ரம் மாதத்தில் நினைவு கூறப்படுவது விசேட அம்சமாகும். இம்மாதத்தில் உலகெங்கிலும் உள்ள சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் வாழும் மக்கள் அவர்கள் மீது விழா எடுப்பார்கள். அவர்கள் பேரில் மௌலித் ஓதுவார்கள், அவர்கள் பேரில் அன்னதானம் வழங்குவார்கள் அவர்களைக் கொண்டு தங்களின் தேவைகள் நிறைவேற இறைவனிடம் வஸீலஹ் தேடுவார்கள். 

இவ்வாறு இவர்கள் முஹர்ரம் மாதத்தில் நிறைவு கூறப்படுவதற்கு காரணம், இம்மாதம் 10ம் நாள் அன்றுதான் ஹுசைன் (றழி) அவர்கள் எதிரிகளால் கொலைசெய்யப்பட்டு ஷஹிதானார்கள். எனவேதான் இந்த நாளை மக்கள் நினைவு கூறுகின்றார்கள். 

இமாம் ஹுசைன் (றழி) அவர்கள் அபூ அப்தில்லாஹ் என்ற புனைப் பெயர் கொண்டு அழைக்கப்படார்கள் அதேபோல் அர்ரஸீது – நேர்வழி பெற்றவர். அத்தையிப் –மணம் நிறைந்தவர் அஸ்ஸகிய்யு- தூய்மையானவர் அல்வபிய்யு-நிறைவேற்றி வைக்கக்கூடியவர் அஸ்ஸெய்யித்- தலைவர், அல்முபாறக்- அருள்செய்யப்பட்டவர், அஸ்ஸிப்து-பேரர் போன்ற இன்னும் பல பட்டப் பெயர்கள் கொண்டும் அழைக்கப்பட்டார்கள். இவற்றில் “அஸ்ஸகிய்யு” என்ற பட்டப்பெயர் மிகவும் பிரசித்திபெற்றதாகும். 

இமாம்- ஹுஸைன் (றழி) அவர்கள் தனது சகோதரர் ஹஸனைப் போன்று அழகானவர்களாகவும். பெரியாரை மதிக்கக் கூடியவர்களாகவும், மார்க்கப்பற்று நிறைந்தவர்களாகவும் காணப்பட்டார்கள். 

வஹ்ததுல் வுஜூது உள்ளமை ஒன்ற என்ற கலிமாவின் தத்துவத்தை மக்கள் மத்தியில் பரப்புவதில் மிகவும் தீவிரமாக செயற்பட்டார்கள். நபி (ஸல்) அவர்களின் வபாத்தின் பின் ஸஹாபாக்களில் பெரும்பான்மையினர் உலகில் பல நாடுகளுக்கும் சென்று இஸ்லாத்தின் தத்துவத்தைப் பரப்புவதில் ஈடுபட்டனர் – இமாம் ஹூசைன் (றழி) அவர்கள் மக்கஹ்வில் தங்கி இறைஞானத்தைப் பரப்புவதில் ஈடுபட்டார்கள். 

இந்நிலையில் இராக் நாட்டின் கூபா நகரில் மார்க்கப் பணியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த முஆவியா (றழி) அவர்கள் மரணமானார்கள் இதனால் கூபா நகர மக்கள் தங்களுக்கு ஒரு மார்க்க வழிகாட்டி வேண்டுமென்று கருதி, அங்குள்ள ஒர் இடத்தல் ஒன்று சேர்ந்தார்கள் தங்களுக்கிடையில் அலோசனை நடத்தினார்கள் இறுதியில் மக்கா நகரில் வாழ்ந்துகொண்டிருந்த நபி பேரர் ஹுசைன் (றழி) அவர்களுக்கு ஒர் கடிதம் எழுதி அவர்களை கூபா நகருக்கு வரவழைப்பதாக முடிவு செய்தார்கள். 

கூபா நகரமக்கள் ஒன்று சேர்ந்து இமாம் ஹுசைன் (றழி) அவர்களுக்கு கடிதம் எழுதினார்கள் அதில் “அல்லாஹுடைய துதரின் பேரரே! கூபா நகர மக்கள் உங்கள் வரவை எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் அல்லாஹூத்தஆலா உங்களைக் கொண்டு எங்கள் அனைவரையும் சத்தியத்தின் மீது ஒன்று சேர்ப்பானாக. உங்களைக் கொண்டு இஸ்லாத்தை பலப்படுத்துவனாக! எனவே நீங்கள் விரைந்து வாருங்கள்” என்று குறிப்பிட்டார்கள். 

கூபா நகர மக்களிடமிருந்து கடிதத்தை பெற்றுக் கொண்ட இமாம் ஹுசைன் றழி அவர்கள் அதற்கு பதில் எழுதினார்கள் அதில் அவர்கள் “உங்கள் கடிதம் எனக்கு கிடைத்தது உங்கள் நோக்கத்தைப் புரிந்து கொண்டேன் இப்பொழுதுள்ள சூழலில் என்னால் அங்கு வர முடியாது எனவே எனக்கு பதிலாக எனது நம்பிக்கைக்குரியவரும் எனது சாச்சாவின் மகனுமாகிய முஸ்லீம் இப்னு அக்கீலை உங்கள் மத்தியில் அனுப்பிவைக்கிறேன்”. அவரைக் கொண்டு நீங்கள் நேர்வழி பெற்றுக் கொள்ளுங்கள் என்று குறிப்பிட்டார்கள். 

எனவே இமாம் ஹுசைன் றழி அவர்கள் முஸ்லீம் இப்னு அக்கீல் றழி அவர்களை கூபா நகருக்கு அனுப்பி வைத்தார்கள். 

முஸ்லீம் இப்னு அக்கீல் றழி அவர்கள் இறாக் நாட்டின் கூபஹ் நகருக்கு அனுப்பி வைத்தார்கள். முஸ்லீம் இப்னு இறாக் நாட்டின் கூபஹ் தேசத்திற்கு சென்று அங்குள்ள மக்களுக்கு பைஅத் வழங்கினார்கள் அந்த மக்கள் இமாம் 
ஹூசைன் றழி அவர்களை முன்னிலைப்படுத்தி முஸ்லிம் இப்னு அக்கீல் றழி அவர்களிடம் பைஅத் பெற்றுக் கொண்டார்கள். 

முஸ்லிம் இப்னு அக்கீல் றழி அவர்களை கூபா நகருக்கு அனுப்பி வைத்த இமாம் ஹுசைன் றழி அவர்கள் மக்கா நகரில் சிறிது காலம் தங்கினார்கள். பின்னர் கூபா நகருக்குச் சென்று தனது சாச்சாவின் மகன் முஸ்லீம் இப்னு அக்கீல் றழி அவர்களுடன் இணைந்து கொள்ள முடிவு செய்தார்கள். 

எனவே மக்காவிலிருந்து ஹிஜரி 60 ஆம் ஆண்டு துல் ஹஜ் மாதம் பிறை 08ல் செவ்வாய்கிழமை அன்று கூபா நகரை நோக்கி புறப்பட்டார்கள் அவர்களுடன் அவர்களின் குடும்பத்தினர் முரீதீன்கள் அடிமைகள் உட்பட மொத்தம் 82 பேர் சென்றதாக அவர்களின் வரலாற்றில் கூறப்படுகின்றது. 

மக்காவிலிருந்து புறப்பட்ட இமாம் ஹுசைன் றழி அவர்களும் அவர்களின் முஹிப்பீன்களும் “தஃலியிய்யாஹ்” என்ற இடத்தை அடைந்தபோது அங்கு சற்று ஓய்வெடுத்தார்கள் அங்கே தனது சாச்சாவின் மகன் முஸ்லிம் இப்னு அகீல் (றழி) அவர்கள் கூபா நகரில் எதிரிகளால் கொலை செய்யப்பட்டு விட்டார்கள் என்ற துயர் மிக்க செய்தி இமாம் ஹுசைன் றழி அவர்களுக்கு எட்டியது மிகவும் கவலையடைந்தார்கள். 

இந்தச் செய்தியை கேள்வியுற்ற அவர்களின் முஹிப்பீன்களில் சிலர் கூபா நகருக்கு செல்லவேண்டாம் என்று இமாம் ஹுசைன் (றழி) அவர்களை தடுத்தார்க்ள ஆனால் அதை அவர்கள் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. கூபா நகரை நோக்கி தனது பிரயாணத்தை தொடர்ந்தார்கள் வழியில் பல கஷ்டங்களை அனுபவித்தார்கள். 

இறுதியில் ஈராக் நாட்டின் கர்பலா என்ற இடத்தை வந்தடைந்தார்கள் இவர்களின் வருகையை அறிந்த எதிரிகள் அவர்களை கொலை செய்ய திட்டமிட்டார்கள் இறுதியில் ஹிஜ்ரி 61 ஆண்டு முஹர்ரம் மாதம் 10ம் நாள் வெள்ளிக்கிழமை இமாம் ஹூசைன் றழி அவர்கள் இராக் நாட்டின் கர்பலா என்ற இடத்தில் எதிரிகளால் கொலை செய்யப்பட்டார்கள். இவர்களை சினான் இப்னு அனஸ் என்பவன் கொலை செய்ததாக இவர்களின் வரலாற்றில் கூறப்படுகின்றது. 

இவர்களை எதிரிகள் கடுமையாக தாக்கினார்கள் இவர்கள் கொலை செய்யப்பட்டபோது இவர்களின் புனித உடலில் 33 இடங்களில் ஈட்டியினால் எய்யப்பட்ட காயங்களும் 33 இடங்களில் வாலினால் வெட்டப்பட்ட காயங்களும் காணப்பட்டதாக வரலாற்றாசிரியர்கள் கூறுகின்றார்கள். 

இமாம் ஹுசைன் றழி அவர்கள் கொலை செய்யப்பட்டபோது அவர்களின் உடல் வேறாகவும் தலை வேறாகவும் ஆக்கப்பட்டது இவர்களின் புனித உடல் இராக் நாட்டின் கர்பலா என்ற இடத்தில் நல்லடக்கம் செய்யப்பட்டது. இவர்களின் உடல் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற புனித றவ்ழாஹ் ஷரீபாவை உலகெங்கும் வாழும் சுன்னத் வல் ஜமாஅத் மக்கள் தினமும் ஸியாரத் செய்து வருவது குறிப்பிடத்தக்கது. 

இவர்களின் தலையை வேறாக்கிய எதிரிகள் அதைக்கொண்டு உலகெங்கும் சுற்றினர். இவர்களின் அருள் நிறைந்த தலை எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடுண்டு. 

இவர்களின் தலை பலஸ்தீன் நாட்டின் அஸ்கலான் என்ற இடத்துக்கு கொண்டுவரப்பட்டபோது அவ்விடத்தை ஆட்சி செய்துகொண்டிருந்த அரசன் அங்கேயே ஹுசைன் றழி அவர்களின் தலையை நல்லடக்கம் செய்ததாக இமாம்களில் சிலர் கூறுகின்றார்கள். 

இப்னு பகர், அல் அல்லாமா, ஹமதானி போன்ற இன்னும் சில இமாம்கள் அவர்களின் அருள் நிறைந்த தலை அவர்களின் தாய் அன்னை பாத்திமா (றழி) சகோதரர் ஹசன் (றழி) அவர்கள் நல்லடக்கம் செய்யப்பட்டிருக்கின்ற ஜன்னத்துல் பகீஇல் நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறுகின்றார்கள். 

இமாம் அப்துல் வஹாப் அஷ் ஷஹரானி அவர்கள் தங்களின் தபகாத்துல் அவ்லியா என்ற அறபு நூலில் ஹுசைன் றழி அவர்கள் பற்றி கூறும்போது அவர்களின் புனித தலை கிழக்கு தேசத்திலுள்ள ஒர் ஊரில் நல்லடக்கம் செய்யப்பட்டதாக கூறுகின்றார்கள். 

இவ்வாறு இமாம் ஹுசைன் றழி அவர்களின் தலை எங்கு நல்லடக்கம் செய்யப்பட்டது என்பதில் இமாம்களுக்கிடையில் கருத்து வேறுபாடு உண்டு. 

இவ்வாறு இஸ்லாத்தின் பாதையிலே கொலை செய்யப்பட்ட இமாம் ஹுசைன் றழி அவர்கள் புனித முஹர்ரம் மாதத்தில் நினைவு கூறப்படவேண்டியது விசேட அம்சமாகும். 

புனித முஹர்ரம் மாதத்தில் அவர்கள் கொலை செய்யப்பட்ட காரணத்தினால்தான் சுன்னத் வல் ஜமாஅத் அடிப்படையில் வாழும் அவர்களை நினைவு கூறுகிறார்கள் அவர்கள் பேரில் மௌலித் ஒதுகின்றார்கள், அவர்கள் பேரில் அன்னதானம் வழங்குகின்றார்கள். இமாம் ஹுசைன் (றழி) அவர்களே முன்வைத்து செய்யப்படுகின்ற ஒவ்வொறு காரியமும் சிறப்பாக முடியும் அவர்களை ஒவ்வொறுவரும் நேசிக்கவேண்டும் காரணம் அவர்கள் நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். 

இமாம் ஹுசைன் (றழி) அவர்களை ஒவ்வோரு முஃமினும் நேசிக்கவேண்டும் நேசம் நிச்சயம் பிரயோசனம் அளிக்கும். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள் 
“ஹூசைன் என்னில் நின்றும் உள்ளவர் நான் ஹுசைனில் நின்றும் உள்ளவர்,இறைவா! ஹூசைனை நேசிக்கக் கூடியவர்களை நீ நேசிப்பாயாக. ஹூஸைன் பேரர்களில் நின்றும் ஒரு பேரர்”. (ஆதாரம்-துர்முதீ) 

பறா இப்னு ஆஸிப் றழி அவர்கள் கூறுகின்றார்கள் – நபி (ஸல்) அவர்கள் தங்களின் தோளில் ஹுஸைன் (றழி) அவர்களை சுமந்தவன்னம் வருவதைக் கண்டேன் அப்பொழுது அவர்கள் “இறைவா! நான் ஹுசைனை நேசிக்கின்றேன் நீயும் அவரை நேசிப்பாயாக!” என்று கூறினார்கள். 

மேற்கூறப்பட்ட ஹதீஸ்களில் இருந்து ஹுஸைன் (றழி) அவர்கள் மீது முஹப்பத் நேசம் வைப்பதன் அவசியம் தெளிவாகின்றது. 


No comments:

Post a Comment