பிக்ஹ் சட்டங்கள் தேவையா?
மௌலவி அல்ஹாஜ் எச். கமாலுத்தீன் (பாஸில் பாகவி) முன்னால் முதல்வர் அல்பாகியாதுஸ் ஸாலிஹாத் அரபிக் கல்லூரி (வேலூர்,இந்தியா).
இஸ்லாமியச் சட்டங்களுள் எவையெவை என்னென்ன தரம் உடையவை என்பதைப் பகுத்து, தெளிவான வகையில் அவற்றை இஸ்லாமிய உலகுக்கு வழங்கியவர்கள் ஃபிக்ஹுக்கலையில் தேர்ந்த இமாம்களாவர்.
ஃபிக்ஹுக் கலைச் சட்டங்களை தொகுத்ததன் மூலம் இஸ்லாமியக் கடமைகளைச் சிரமமின்றி யாவரும் புரிந்து நிறைவேற்ற அம்மகான்கள் வழிகோலினார்கள் இறையச்சத்தோடும் இணையற்ற அறிவாற்றல் திறனோடும் அவர்கள் செய்த அரும் பணிக்கு இஸ்லாமிய உலகு என்றும் கடப்பாடுடையதாகும். இன்று சிலர் புறப்பட்டு தாங்கள் கூறுவதே சரியானது என்றும் இமாம்களெல்லாம் வழிகேடர்கள் என்றும் கூறத் துணிந்திருப்பது அவர்களின் அறியாமையையும் அவர்கள் குழப்பத்தையே குறியாகக் கொண்டவர்கள் என்பதையும் துல்லியமாக அடையாளம் காட்டுகின்றது.
“யாருக்காவது அல்லாஹ் சிறப்பினை நல்க நாடினால் அவருக்கு மார்க்கத்தில் விளக்கத்தைக் கொடுக்கின்றான்!“ என நபிகள் நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறினார்கள். எனவே மார்க்கத்தின் நுட்பமான விளக்கம் என்பது எல்லோருக்கும் கிடைக்கக் கூடியது அல்ல.
எவருக்கும் சிறப்பையும், மேன்மையையும் கொடுக்க அல்லாஹ் நாடுகின்றானோ அவர்களுக்கு மட்டுமே அத்தகைய விளக்கம் கிடைக்கிறது. என்று இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது. இந்த ஹதீஸில் உள்ள “யுஃபக்கிஹ்ஹு“ என்னும் வினைச்சொல்லில் உள்ள ஃபிக்ஹு (மார்க்கத்தின் விளக்கம்) என்ற சொல்லை இஸ்லாமிய நடைமுறைச் சட்டங்களுக்கு பெயராகச் சூட்டப்பட்டுள்ளது. ஃபிக்ஹிற்கு அடிப்படையானவை நான்கு ஆகும்.
1. குர்ஆன் 2. ஹதீஸ் 3. இஜ்மாஃ 4. கியாஸ்
நாம் நாடும் கருத்துக்கு முதன் முதலாக குர்ஆனில் விடையுள்ளதா? எனப் பார்க்கவேண்டும். அதிலிருந்து நம்மால் தெளிவுபெற இயலாவிட்டால் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லமவர்களின் சொல், செயல்களில் அல்லது பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் காலத்தில் ஸஹாபாக்கள் செய்ய, அதனை பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் மறுத்துக் கூறாத விடயங்களில் அதற்கு விடைகாண வேண்டும்.
ஏனெனில் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் சொல், செயல், அங்கீகாரம் ஆகிய அனைத்தும் குர்ஆனுக்கு விளக்கமாகவே அமைந்திருந்தன. விளக்கம் கூறும் போதனையாளராகவே அவர்களை அல்லாஹ் அனுப்பினான். நபிமார்கள் அனைவரும் மக்களுக்கு நேர்வழி காட்ட அனுப்பப்பட்டவர்களே அதுபோல் நமது நபி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களும் மக்களைத் திருத்துவதற்காக அனுப்பப்பட்டவர்களே!
அவர்களின் ஒவ்வொரு சொல்லும், ஒவ்வொரு செயலுமே நமக்கு ஷரீஅத்து (மார்க்கம்) அல்லாஹ் கூறுகின்றான்.
நமது “தூதர் (கட்டளையாக) எதை உங்களுக்கு கொடுத்தாரோ அதைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள். எதை விட்டு உங்களைத் தடுத்தாரோ (அதைவிட்டு) விலகிக் கொள்ளுங்கள்“.
அல்குர்ஆன் - 59 : 7
மனிதனுக்குத் தேவையான அனைத்து விளக்கங்களையும் குர்ஆனில் கூறிவிட முடியாது. அடிப்படையான முக்கியமான பொதுவான சட்டங்களை அதில் அல்லாஹ் கூறியிருக்கின்றான். அதற்கு மேல் தேவைப்படும் விளக்கங்களுக்கு நாயகம் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களைப் பொறுப்பாக ஆக்கினான். அதனையே மேற்கூறும் வசனம் குறிப்பிடுகிறது.
ஃபிக்ஹுக்கு மூன்றாவது அடிப்படையாகத் திகழ்வது இஜ்மாஃ ஆகும். நபித் தோழர்களோ, அவர்களின் அடுத்த காலத்தவர்களான தாபியீன்களோ, எக்கருத்தின் மீது ஒன்று பட்டிருந்தார்களோ அக்கருத்திற்கு இஜ்மாஃ என்று கூறப்படுகிறது.
ஃபிக்ஹின் நான்காவது அடிப்படை கியாஸ் ஆகும். குர்ஆன், ஹதீஸ், இஜ்மாஃவில் வந்துள்ள சட்டங்களுக்கு காரணம் கண்டு பிடித்து அக்காரணம் வேறு செயல்களிலும் பெற்றுக் கொள்ளப்பட்டால் அச்செயல்களுக்கும் அதே சட்டத்தைக் கொடுப்பதற்கு கியாஸ் என்று சொல்லப்படுகிறது. அதாவது ஒன்றுக்குரிய சட்டத்தை அதைப் போன்றதின் மீதும் ஏற்றிக் கூறுவதாகும். இவ்வாறு விளக்குவது மனித இயல்பில் உள்ளதாகும்.
ஒரு சாரார் நாம் எந்தச் சட்டத்தைச் கூறினாலும் அது குர்ஆனில் வந்துள்ளதா? ஹதீஸில் வந்துள்ளதா?என்று கேள்வி எழுப்புகின்றனர். இது சரியல்ல, ஏனென்றால் குர்ஆன், ஹதீஸில் சில சட்டங்கள் தெளிவாக இருக்கின்றன.
சில உட்பொருளாக மறைந்திருக்கின்றன. மறைந்துள்ள உட்கருத்தை ஆராய்ந்து எடுப்பது என்பது எல்லோராலும் முடியக் கூடிய காரியம் அல்ல. அதற்கென தனித்திறமை தேவை. அரபி மொழியிலும்,அதன் இலக்கண இலக்கியங்களிலும் தனித்திறமை பெற்றிருக்க வேண்டும்.
குர்ஆன், ஹதீஸ்களில் வெளிப்படையான கருத்துக்களை முழுமையாகத் தெரிந்து இருக்க வேண்டும். சரியானவை எனச் சொல்லப்பட்ட ஆறு ஹதீஸுக் கிரந்தங்களை மட்டும் பார்த்தால் போதாது.
ஏனென்றால் இவற்றைத் தொகுத்து எழுதியவர்களே இவை பல இலட்சம் ஹதீஸுகளிலிருந்து தேர்ந்தெடுத்து எழுதப்பட்டவை என்று கூறியுள்ளார்கள். அத்துடன் ஹதீஸ்களின் தரத்தையும் அறிந்திருக்க வேண்டும்.
இவ்வாறிருந்தால்தான் இதன் உட்புறத்தில் மறைந்துள்ள கருத்தை தெளிவுபடுத்தும்போது இக்கருத்து குர்ஆன், ஹதீஸிலிருந்து தெளிவாக விளக்கிய கருத்துக்கு முரண்பாடின்றி இருக்கிறதா? என்பதைத் தெரிந்துகொள்ள முடியும். அதாவது ஃபகீஹ், முஜ்தஹீது என்ற ஆய்வாளர்கள் மார்க்கக் கல்வியின் கடலாக இருக்க வேண்டும். அப்பொழுதுதான், தான் விளக்கிய கருத்தை இறை வசனங்களுக்கும், நபி மொழிகளுக்கும் முரணில்லாமல் கூறமுடியும்.
இமாம்களின் நிலை
சிலர் இமாம்களின் கருத்தை நாம் ஏன் ஏற்றுக்கொள்ள வேண்டும்? எனக் கேட்கிறார்கள். அதற்குக் காரணம், இமாம்களின் தரத்தையும், அவர்களின் சரித்திரத்தையும் உணராததாகும். இவ்வாறு கேட்பவர்கள்,அரபியே படிக்காமல், யாரேனும் எழுதிய சில புத்தகங்களை படித்தவர்களாவர்.
அல்லது ஹதீஸ் கிதாபுகளில் சில பகுதிகளுக்கு வெறும் மொழிபெயர்ப்பையும், குர்ஆனின் சில பாகங்களுக்கு மொழி பெயர்ப்பையும் படித்தவர்கள். இவர்களால் இமாம்களின் விளக்கவுரைகளைப் பார்க்கும் பொழுதுதான் இமாம்களின் தனித்திறமையை அறியமுடிகிறது.
எடுத்துக் காட்டாக இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களைப் பார்ப்போம். அவர்கள் ஹிஜ்ரி 80இல் பிறந்தார்கள். அது றஸுல் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களுக்கு மிக நெருங்கிய காலம் ஸஹாபாக்களிடம் பயின்ற தாபியீன்களிடம் அன்னார் ஹதீஸ்களைப் பயின்றார்கள்.
பல ஊருக்கும் சென்று ஹதீஸ்களைப் படித்தார்கள். அவர்கள் வாழ்ந்த கூஃபா அன்று ஹதீஸ் கல்வியின் மத்திய பீடமாகத் திகழ்ந்தது. இமாம் இப்னு ஜௌஸி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் தமது தல்கீஹ் என்னும் நூலில் அவ்வூர் எட்டு கலிபாக்களின் தலைநகரமாக விளங்கியது. 120 ஸஹாபாக்கள் வரை அங்கே தங்கியிருந்தார்கள் என்று பெயருடன் குறிப்பு எழுதிவைத்து இருக்கிறார்.
அரசர்கள் இருக்குமிடங்களில் அறிஞர்கள் அதிகமாயிருப்பது வழக்கம். இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு ஹதீஸ் போதித்த ஆசிரியர்களில் முக்கியமானவர் இமாம் ஷாபீஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களாவர்.
அவர்கள் 500 ஸஹாபாக்களை சந்தித்திருப்பதாக தத்கிரத்துல் ஹுஃப்ஃபாள் என்ற கிரந்தத்தில் எழுதப்பட்டுள்ளது. இவர்களைப் போன்ற பல்வேறு ஹதீஸ்களை ஆய்வாளர்களிடம் இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஹதீஸ்களைப் பயின்றார்கள். அன்னார் இமாம் ஹம்மாது ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் போன்ற பலரிடம் ஃபிக்ஹைப் பயின்றார்கள்.
பின்னர் அன்னார் தம்முடைய கூரிய அறிவுத்திறமையால் பிக்ஹுக்கு வளர்ச்சியை உண்டாக்கினார்கள். இமாம் ஷாபீயி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பிக்ஹு விடயத்தில் மற்ற அனைவரும் இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் குழந்தைகளே, எனக் கூறியுள்ளது இங்கே நினைவில் கொள்ள வேண்டிய ஒன்றாகும். இத்தகையோரின் ஆய்வைத்தான் ஏற்றுக் கொள்ள வேண்டுமா?என்று இன்றைக்குக் கேள்வி எழுப்புகின்றார்கள். இது கேள்வி எழுப்புவோரின் அறிவுக்குறைவையே காட்டுகின்றது.
இமாம் அபூயூஸுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் மாணவராவார். வேறுபல ஆசிரியர்களிடமும் அவர் படித்துள்ளார். இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் பிக்ஹுச் சட்டத்தை புத்தக வடிவில் முதலில் அமைத்தவர் இவரே!
இவரும் பிக்ஹில் முஜ்தஹித் ஆய்வாளர் தாம், அதேபோன்று இமாம் முஹம்மது ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் பிக்ஹில் முஜ்தஹிதுதான். இவர்கள் எழுதிய ஆறு கிதாபுகளின் மூலமாகவே இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆய்வால் எடுக்கப்பட்ட சட்டங்கள் நமக்குக் கிடைக்கின்றன.
அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடம் பயின்ற இவர் இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களிடமும் பயின்றார். அவ்வாறிருந்தும் இவர் இமாம் மாலிக் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுடைய பிக்ஹுச் சட்டத்தை எழுதிவைக்காமல் இமாம் அபூ ஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சட்டத்தை மட்டுமே எழுதி வைத்துள்ளார். இமாம் அபூயூஸுப் ரஹ்மத்துல்லாஹி அலைஹி, இமாம் முஹம்மது ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஆகிய இருவரும் தாங்களும் முஜ்தஹிதுகளாக இருந்த தோடு இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் சட்டத்தை எழுதி வைத்துள்ளார். தங்களுடைய மற்ற ஆசிரியர்களை விட இமாம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களை இவர்கள் உயர்வாக மதித்துள்ளார்கள் என்பதையே இது காட்டுகின்றது.
இப்பொழுது பிரபலமாக இருக்கும் நான்கு மத்ஹபுகளின் இமாம்கள் அறிவுத்திறமையிலும்,அல்லாஹ்வுக்கு பயந்து நடப்பதிலும் மக்களால் ஒப்புக் கொள்ளப்பட்டவர்கள். அதனால்தான் அவர்களின் பிக்ஹுச் சட்டங்கள் மக்களால் ஏற்றுக் கொள்ளப்பட்டு நடைமுறையில் இருந்துவருகின்றன. இது அல்லாஹ் செய்த பேருபகாரமாகும்.
கியாஸ் உடைய ஆதாரங்கள்
இமாம்கள் கியாஸ்செய்து குர்ஆன், ஹதீஸுகளின் கருத்துக்களை மாற்றி விட்டதாக சிலர் சொல்லித் திரிகின்றார்கள். இது தவறு! குர்ஆன், ஹதீஸில் மறைந்துள்ள உட்பொருளை வெளிப்படுத்தியுள்ளனர். நாம் ஆராயும்போது குர்ஆன், ஹதீஸிலிருந்து இதற்கு ஆதாரம் கிடைக்கிறது.
“விசுவாசிகளே தருமம் செய்யக் கருதினால் நீங்கள் சம்பாதித்தவைகளிலிருந்தும், நாம் உங்களுக்கு பூமியிலிருந்து வெளிப்படுத்திய(தானியம், கனிவர்க்கம் முதலிய)வைகளிலிருந்தும் நல்லவைகளையே (தானமாக) செலவு செய்யுங்கள்.
அவைகளில் கெட்டவைகளைச் செலவு செய்ய விரும்பாதீர்கள். ஏனென்றால் கெட்டுப்போன பொருட்களை உங்களுக்கு ஒருவர் கொடுத்தால் அவைகளை நீங்கள் வெறுப்புடன் கண்மூடியவர்களாகவே அன்றி எடுக்கமாட்டீர்கள்“.
அல்குர்ஆன் - 2 : 267
என அல்லாஹ் கூறியுள்ளான். இவ்வசனத்தில் கெட்டுப்போனதை நீங்கள் வாங்க விரும்பாததைப் போன்று அதைக் கொடுக்கவும் விரும்பாதீர்கள் எனக் கூறியுள்ளான். இவ்வாறு ஒப்பிட்டுக் கூறுவதற்குத்தான் கியாஸ் என்று சொல்லப்படுகிறது.
“தாதுஸ்ஸலாஸில்“ என்ற இடத்தில் நடந்த போருக்காக சில ஸஹாபாக்களை ரஸுலுல்லாஹ் அவர்கள் அனுப்பி வைத்தார்கள். அது கடினமான குளிர்காலம். அந்த இரவில் அம்ருப்னுல் ஆஸ் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுக்கு குளிப்பு கடமையாகிவிட்டது. குளிர் கடினமாக இருந்ததால் அவர் தயம்மும் செய்து விட்டு தன் சகாக்களுக்கு சுபுஹுத் தொழுகையை தொழவைத்தார்.
பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களிடம் இந்த விவரத்தை ஸஹாபாக்கள் கூறினார்கள். பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் அம்ரிடம் அசுத்தமான நிலையில் தொழவைத்தீரா? என வினவினார்கள். அதற்கவர் உங்களுடைய ஆத்மாக்களைக் கொன்று விடாதீர்கள். நிச்சயமாக அல்லாஹ் உங்கள் மீது கிருபையுள்ளோனாக இருக்கின்றான்.
அல்குர்ஆன் - 4 : 29
என்ற வசனத்தை நினைத்துப் பார்தேன் தய்மமும் செய்து தொழவைத்தேன் என்று கூறியவுடன் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் சிரித்து விட்டு எதுவும் கூறாமல் இருந்து விட்டார்கள்.
நூல் : அபூதாவூத், தாரகுத்னி
ஒருவர் கடுங்குளிர் நேரத்தில் தண்ணீரில் குளித்து ஆபத்து ஏற்பட்டால் அது தன்னைக் கொலை செய்வதற்கு ஒப்பாகும் என்று விளங்கிய அம்ரு ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் குளிப்பைவிட்டு விட்டார்கள். அதைப் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் ஏற்றுக் கொண்டார்கள். இதுவும் கியாஸ்தான்.
காரணத்தை கொண்டு சட்டம் அமைப்பது
முன் விவரிக்கப்பட்ட விஷயங்களில் ஒப்பிடுவதற்கான காரணம் வெளிப்படையாகத் தெரிகின்றது. சில சட்டங்களுக்குக் காரணம் வெளிப்படையாகத் தெரியாது. ஆய்வு செய்து காரணத்தைக் கண்டு பிடித்து இந்தக் காரணம் எங்கெங்கு பெற்றுக் கொள்ளப்படுகின்றதோ அங்கெல்லாம் அந்தச் சட்டமும் இருக்குமென்று தீர்ப்பு செய்வதும் இமாம்களின் பணியாக இருந்தது. இந்த முறையும் பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் காலத்தில் இருந்தே நடைமுறையிலுள்ளதுதான்.
யுத்தகாலத்தில் சிறப்புமிக்க இந்நான்கு மாதங்கள் முடிந்த பின் இணை வைப்போரை கண்ட இடத்தில் வெட்டுங்கள் அல்குர்ஆன் - 09 :05 என்று அல்லாஹ் கூறியுள்ளான். ஒரு சமயம் யுத்தகளத்தில் ஒரு பெண் வெட்டுப்பட்டுக் கிடந்ததை நபி அவர்கள் கண்டபோது பெண்களையும் சிறுவர்களையும்வெட்டாதீர்கள் என்று கூறினார்கள்.
நூல் : புகாரி
நம்மை யார் வெட்டுகின்றார்களோ நோவினை தருகின்றார்களோ அவர்களைத்தான் வெட்ட வேண்டும். சிறுவர்களும் பெண்களும் அத்தகையோர் அல்லர் என பெருமானார் ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் விளக்கம் தந்தார்கள்.
அதாவது காரணத்தை விளக்கினார்கள். முன்தஹல் அக்பர் என்ற இபுனுத்தைமியாவின் ஹதீஸ் கிதாபுக்கு விளக்கம் எழுதிய ஷவ்கானியவர்கள் வணக்கத்திலேயே ஈடுபட்டிருக்கும் துறவிகளையும் வெட்ட வேண்டாம் என்ற ஹதீஸை எடுத்துக் கூறி இந்த ஹதீஸ் ஊர்ஜிதமாவதில் பிரச்சினை இருக்கிறது.
என்றாலும் பெண்கள் விடயத்தில் பெருமானார் அவர்கள் சொன்ன ஹதீஸில் விளக்கப்பட்டுள்ள காரணம் இந்த ஹதீஸையும் உறுதிப்படுத்துகின்றது. ஏனெனில் இத்தகையோரால் இடரில்லை. எனவே இக்காரணத்தை வைத்து நொண்டி, முடம், குருடர்களையும் வெட்டக்கூடாது என்று விளக்கலாம்.
நூல் : நைலுல் அவ்தார்
எதற்கெடுத்தாலும் ஹதீஸ் இருக்கிறதா என்று கூறுபவர்கள் இமாம் ஷவ்கானி, இப்னுத் தைமிய்யா போன்றவர்களின் ஆய்வுக்கு மதிப்பளிப்பவர்களான அவர்களே காரணத்தை வைத்து சட்டத்தை நிர்ணயிக்கலாம் என்று கூறுகின்றார்கள். இல்லாவிட்டால் ஹதீஸில் குருடர், முடவர் ஆகியோர் பற்றி வெளிப்படையாக சட்டம் கிடையாது எனவே இவ்வாறு ஒப்பிட்டு விளக்கிய விளக்கம் ஹதீஸிற்கு முரணானது.
மலம் கழித்த பின் சிறுகற்களால் துப்பரவு செய்வதற்கு ஹதீஸில் அனுமதி உள்ளது. குபா என்ற அப்பகுதியில் தூய்மையை விரும்புகின்ற ஆண்கள் உள்ளனர். அல்லாஹ் அப்பரிசுத்தவான்களை நேசிக்கிறான்.
அல்குர்ஆன் - 9 : 108
என்ற திருவசனத்தில் கற்களால் துப்பரவு செய்த பின் தண்ணீரால் சுத்தம் செய்வோரை அல்லாஹ் புகழ்ந்து கூறியுள்ளான்.
ஹளரத் அலி ரழியல்லாஹு அன்ஹு அவர்கள் பிற்காலத்தில் மக்களை நோக்கி நீங்கள் தண்ணீரில்தான் சுத்தம் செய்ய வேண்டும். ஏனென்றால் பெருமானார்ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் காலத்தவர்கள் புழுக்கை போன்று மலம் கழித்தனர். நீங்கள் அவ்வாறல்ல என்று கூறி காரணம் மாறும்போது சட்டமும் மாறும் என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.
நூல்: கன்ஸுல் உம்மால்
ஸஹீஹுல் புகாரி ஷரீப் ஒரு கண்ணோட்டம்
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இருபது நூற்கள் வரை எழுதியுள்ளார்கள். இவற்றுள் ஸஹீஹுல் புகாரி ஷரீப்மூலமே அவர்களுக்கு மங்காப் புகழ் கிடைத்தது. ஸஹிஹீல் புகாரி ஷரிபுக்கு இமாமவர்கள் இட்ட பெயர் “அல் ஜாமிஉல் முஸ்னதுஸ் ஸஹீஹுல் முக்தார் மி்ன் உமூரி ரஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் வஸுனனிஹி வஅய்யாமிஹி“ ஆகும்.
ஒரு ஹதீஸ் கிதாபிற்கு “ஜாமிஉ“ என்று பெயர் வைப்பதாயின் பின்வரும் எட்டுத் தலைப்புக்குள் ஹதீதுகள் இடம்பெற வேண்டும். அவையாவன.
1. ஈமான் 2. அஹ்காம் (சட்டங்கள்) 3. ஸியர் யுத்தம் 4. தப்ஸீர் 5. ஆதாப் 6. மனாகிப் 7. பிதன், குளப்பம்8. அஷ்றாத் ஸஆத் - இறுதி நாளின் அடையாளங்கள்.
புகாரி ஷரீபுக்கு அல்லாஹுத்தஆலா கொடுத்துள்ள கண்ணியத்தைப் போன்று வேறு எந்த ஒரு இஸ்லாமிய நூலுக்கும் இதுவரை அல்லாஹ் வழங்கவில்லை. இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஏனைய நூற்களுக்கும் இந்தளவு கண்ணியம் கிடைக்கவில்லை.
புகாரி ஷரீப் எழுதியதன் நோக்கம்
தாபியீன்களின் இறுதிக் காலத்தில் ஹதீ்ஸ் தொகுப்பு நூற்கள் முறையாக கோர்வை செய்யப்படுவதற்கான முயற்சிகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளன. தபஉத் தாபியீன்களின் காலத்தில் இந்த முயற்சியில் மேலும் ஒரு முன்னேற்றம் காணப்பட்டது.
இமாமுல் அஃழம் அபூஹனீபா ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் முஸ்னத், இமாம் மாலிகியின்”முஅத்தா“ இமாம் ஸுப்யானுத் தௌரி ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் ஜாமிஃ, முஸன்னப் இப்னு அபீஷைபா, முஸன்னப் அப்துர்ரஸ்ஸாக், இமாம் அப்துல்லாஹ் இப்னு முபாறக் அவர்களின் ஹதீஸ் தொகுப்பு, இமாம் வகீஇன் ஹதீஸ் தொகுப்பு. இமாம் ஷாபிஈ ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் ஹதீஸ் தொகுப்பு முஸ்னத், இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல் உள்ளிட்ட அநேக ஹதீஸ் தொகுப்புக்கள் இக்காலத்தில் உருவாகின.
இக்காலத்தில் பெருந்தொகையாக ஹதீஸ் தொகுப்பு நூற்கள் வெளிவந்திருந்தாலும், எந்த ஒரு ஹதீஸ் நூலும் முற்றிலும் ஸஹீஹான ஹதீஸ் தொகுப்பு நூல் என்று கூறுவதற்குத் துணியவில்லை. ஹதீ்ஸ் தொகுப்பாளர்கள் பல்வேறு வகையான ஹதீஸ்களையும் தங்களின் தொகுப்பில் சேர்த்திருந்தனர்.
ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும் கொண்ட ஒரு ஹதீஸ் தொகுப்பு நூலின் அவசியத் தேவை இக்காலத்தில் பலராலும் உணரப்பட்டது. இருப்பினும் இத்தொகுப்பின் அவசியத்தைப் பற்றிய ஒரு சிந்தனை இமாம் புஹாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் ஆசிரியரான இஹ்ஸாக் இப்னு றாஹவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு ஏற்பட்டது.
ஒரு தினம் தங்களது மாணவர்களை நோக்கி உங்களால் முடியுமானால் ஸஹீஹான ஹதீஸ்களை மட்டும் கொண்ட ஒரு சிறு தொகுப்பு நூலை கோர்வை செய்யுங்கள் என்று வேண்டினார்கள்.இச்சந்தர்ப்பத்தில் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களும் இச்சபையிலிருந்தார்கள்.இமாமவர்களின் வேண்டுதல்தான் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் இப்படியான ஒரு நூலை எழுதத் துணிந்தார்கள்.
இதற்கப்பால், இது தொடர்பான ஒரு கனவை இமாமவர்கள் கண்டார்கள். அதனை இமாமவர்களே இப்படிக் குறிப்பிடு கின்றார்கள்.
கனவில் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களைக் கண்டேன். நான் நாயகத் திருமேனி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் முன் நிற்கின்றேன். எனது கையில் ஒரு விசிறி இருந்தது. அதனால் “றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் மேனியில் கொசுக்கள் அணுகாமல் விரட்டிக் கொண்டிருந்தேன்“.
இக்கனவின் விளக்கத்தை கனவிற்குப் பலன் கூறுபவரிடம் கூறி விளக்கம் கேட்டேன்.
றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களின் திருமேனியில் “பொய்“ அணுகாமல் நீங்கள் தடுக்கின்றவர்களாக உள்ளீர்கள் என்று விளக்கம் பகர்ந்தார்கள். இந்த கனவுதான் இந்த ஜாமிஉல் சஹி புகாரி உருவாவதற்கு பிரதானமான காரணமாகியது.
தொகுப்பின் குறிக்கோள்
ஸஹீஹான ஹதீதின் தொகுப்பாக அமைத்தல். அதில் அகீதா தொடர்பான அமல்களை முடிந்தவரை ஸஹீஹான ஹதீஸ் ஆதாரத்துடன் நிறுவுதல். எதிர் அகீதா கொண்டுள்ள மறுப்பாளர்களுக்கு மறுப்புக் கூறலுமாகும்.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கு ஆறு இலட்சம் ஹதீதுகள் பாடமாகியிருந்தன.அவற்றிலிருந்து மிகச் சிறந்த, மிக உன்னதமான, மிகச் ஸஹீஹான ஹதீஸ்களைத் தேர்ந்தெடுத்தே இம்மகத்தான நூலை கோர்வை செய்தார்கள். இத்தேர்வில் தங்களது முழு அறிவையும் மிக நுட்பமாக பயன்படுத்தி ஆழ்ந்த ஆராய்வுக்குப் பின்பும் ஹதீஸ்களை எழுதுவதற்கு அவர்களின் மனம் இடம் தரவில்லை. இறுதியாக அல்லாஹ்விடம் இஸ்திகாரா செய்த பின்புதான் தாளில் எழுத ஆரம்பித்தார்கள்.
பொதுவாக எழுத்தாளர்கள் எழுதுவதற்கு தனிமையையே விருப்புவார்கள். ஆனால் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மக்கள் நிரம்பி வழியும் மஸ்ஜிதுல் ஹறாமையும், மஸ்ஜிதுன் நபவியையுமே தேர்ந்தெடுத்தார்கள். ஒரு விடுத்தம் எழுதிய பின் அவர்கள் திருப்தியடையாவிட்டால்,மூன்று முறை திருப்பித் திருப்பி எழுதுவார்கள். எழுதும் ஒவ்வொரு ஹதீதும் தனக்குத் தெரிந்தவைகளில் மிக உயர்வானதும், மிகச் சரியானதையுமே எழுதுவார்கள். இதனை இமாமவர்களே இப்படிக் கூறுகின்றார்கள்.
எனக்கு ஆறு இலட்சம் ஹதீதுகள் நினைவில் உள்ளன. இந்த பெருந்தொகை ஹதீதுகளிலிருந்து பொறுக்கி எடுத்து இந்த நூலை கோர்வை செய்தேன். இதற்காக பதினாறு ஆண்டுகளைச் செலவு செய்தேன். இந்த நூலை எனக்கும் அல்லாஹ்வுக்குமிடையில் ஆதாரமாக நான் ஆக்கிக் கொண்டேன்.இத்தொகுப்பில் ஸஹீஹான ஹதீஸ்களை மட்டுமே நுழைத்துள்ளேன். இத்தொகுப்பு பெரிதாகி விடக் கூடாதென்பதற்காக நான் தவிர்த்த ஸஹீஹான ஹதீதுகள் இதை விட அதிகமாகும்.
சஹி புகாரி ஷரீபை எழுதிய இடத்தையும், முறையையும் பற்றி இமாமவர்கள் கூறும் போது,
மக்கத்துல் முகர்ரமாவில் மஸ்ஜிதுல் ஹறாமில் இருந்துகொண்டே இந்த நூலை எழுத ஆரம்பித்தேன்.ஹதீதை எழுதுமுன் குளித்து இரண்டு றகாஅத் தொழுது அல்லாஹ்விடம் இஸ்திகாறாச் செய்த பின்பே எழுத ஆரம்பித்தேன். எப்பொழுதாவது ஒரு ஹதீஸ் ஸஹீஹாக இருப்பதில் சிறு ஐயம் துளிர்த்தாலும்,அதனை தவிர்த்து விடுவேன்.
இமாம் புஹாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் மக்காவில் பதினாறு ஆண்டுகள் தங்கியிருக்கவில்லை என்பது வெளிப்படையானது. இத்தொகுப்பை அவர்கள் பல்வேறு நாடுகளுக்கு சுற்றுப் பயணம் செய்யும்போதெல்லாம் இதற்கான முயற்சிகளை செய்துள்ளார்கள். இதன் காலம் பதினாறு ஆண்டுகளாகும்.
அல்லாமா ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஸஹீஹுல் புகாரி ஷரீபை மஸ்ஜிதுல் ஹறாமில் வைத்தே துவக்கம் செய்தார்கள். பின் அவர்கள் சென்ற இடங்களிலெல்லாம் எழுதிக் கொண்டிருந்தார்கள்.
புகாரி ஷரீபின் தலைப்புக்களை மஸ்ஜிதுன் நபவியில் மிம்பருக்கும், ரௌழாவுக்குமிடைப்பட்ட சொர்க்கத்தி்ன் பூங்காவில் வைத்தே எழுதினார்கள். இங்கு வைத்து ஹதீ்ஸ்கள் ஒவ்வொன்றையும் எழுதும்போது றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்களிடம் இது தாங்கள் கூறியதுதான் என்று கேட்டதாகவும், அதற்கு ஆம் என்று றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லமவர்கள் கூறிய பின்பே எழுதியதாகவும், ஒரு குறிப்பிருக்கின்றது.
ஜாமிஉ ஸஹீஹுல் புகாரி ஷரீபை இமாமவர்கள் தொகுத்த பின் அதனை இமாம் அஹ்மத் இப்னு ஹன்பல், யஹ்யா இப்னு முயீன் அலி இப்னு மதீனி ரஹ்மத்துல்லாஹி அலைஹிம் ஆகியோரின் பரிசீலனைக்கு கொடுத்தார்கள். அவர்கள் அனைவரும் அதன் அழகை மெச்சினார்கள். இதன் பின்தான் இமாமவர்களுக்கு மனசாந்தி ஏற்பட்டது.
இமாம் முஹம்மத் இப்னு வர்ராக் றஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்,
இந்த நூலில் நீங்கள் எழுதியுள்ள ஸஹீஹான ஹதீஸ்கள் யாவும் தங்கள் நினைவில் உள்ளனவா? என்று இமாம் புகாரியிடம் கேட்டேன். ஜாமிஉல் ஸஹியில் குறிக்கப்பட்ட எந்த ஹதீதும் என் நினைவிலிருந்து மறையவிலலை. காரணம், தான் ஒவ்வொரு ஹதீதையும் மூன்று முறை எழுதினேன்.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல மவர்களின் அன்பைப் பெற்றது போன்றே, அவர்களின் ஜாமிஉ சஹீஹுல் புகாரி ஷரீபும் அன்னாரின் அன்பையும் பாராட்டையும் பெற்றுக் கொண்டுள்ளது.
ஹளரத் அபூஸைத் மறூஸி றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் கூறுகின்றார்கள்,
நான் ஒரு தினம் மக்காவில் தவாபு செய்யும் மதாபில் இரண்டு றுக்னுக்குமிடையில் சைனித்துக் கொண்டிருந்தேன். கனவில் காருண்யக் கடலான காத்தமுன் நபியைக் கண்டேன். அபூ ஸைதே! ஷாபியின் நூலை எதுவரை படித்துக் கொண்டிருப்பீர்கள்! எனது நூலைப் படிக்கக் கூடாதா? என்று என்னிடம் கேட்டார்கள்.
அல்லாஹ்வின் திருத்தூதரே! தாங்களின் நூல் எதுவாகும்? என்று கேட்டேன். முஹம்மது இப்னு இஸ்மாயீலின் ஜாமிஉ என்று விடை பகர்ந்தார்கள்.
ஆதாரம் : முகத்தமாபத்ஹுல்பாரி பக்கம் - 49
சஹீஹுல் புகாரி ஷரீபின் அடிப்படை நோக்கம் மர்பூஆன ஹதீதுகளை மட்டும் பதிவதாகும். இமாம் புகாரி றஹ்மத்துல்லாஹி அலைஹியின் நிபந்தனைக்குட்பட்டவைகளில் உயர் தரத்தையுடைய ஸஹீஹான ஹதீதுகளை மாத்திரம் பொறுக்கி புகாரி ஷரீபில் தொகுத்துள்ளார்கள். இருப்பினும், புகாரி ஷரீபின் அநேக இடங்களில் தலைப்புக்கள், துணை ஆதாரங்கள், ஸஹாபாக்களின் ஆதாரங்கள்,தாபியீன்களின் கூற்றுக்கள், இமாமவர்களின் தீர்ப்புக்கள், சட்டங்கள் உள்ளிட்டவைகளையும் குறிப்பிட்டுள்ளார்கள். இவையனைத்தும் மேலதிகமானவைகளாகும். புகாரி ஷரீபின் விதிக்கோ அதன் அடிப்படை நோக்கத்திற்குள்ளோ இவைகள் வர மாட்டாது.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் புகாரி ஷரீபில் ஹதீதுகளை மாத்திரம் தொகுப்பது அவர்கள் நோக்கமன்று. தலைப்புக்கு ஏற்ற ஆதாரங்களை கூறுவதுடன், அவ்வாதாரங்களிலிருந்து சட்டங்களை ஆய்வு செய்து கூறுவதும் அவர்களின் முக்கிய நோக்கமாகும். அதற்காக முதலில் தலைப்புக்குப் பொருத்தமான திருவசனங்களையும், இமாம்களின் கூற்றுக்களையும், தீர்ப்புக்களையும் கூறுவார்கள். இதன் பின்பு தனது முழுமையான ஸனதுடன் ஹதீதுகளை எழுதுவார்கள்.
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள், ஒரு தலைப்புக்குக் கீழ் அநேக ஹதீதுகளை குறிப்பார்கள். சில இடங்களில் ஒரு ஹதீதை மட்டும் குறிப்பார்கள். சில இடங்களில் தலைப்புக்குக் கீழ் எந்த ஒரு ஹதீதையும் குறிக்க மாட்டார்கள். சில இடங்களில் ஹதீதில் வரும் அதே வசனங்களைத் தலைப்பாக்குவார்கள். இதுவெல்லாம் அவர்களின் நிபந்தனைக்குட்பட்ட ஹதீதுகளின் கூடுதல் குறைவையே குறிக்கும். சில இடங்களில் ஒரு ஹதீதைப் பல்வேறு இடங்களில் பல்வேறு தலைப்புக்களில் குறிப்பார்கள். ஒரு ஹதீதில் பல்வேறு சட்டங்கள் எடுக்க முடியும் என்பதை குறிப்பதே இதன் நோக்கமாகும்.
நிபந்தனைகள்
புகாரி ஷரீபில் இடம்பெறும் ஹதீதுக்கு இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பின்வரும் நிபந்தனைகளை ஏற்படுத்திக் கொண்டார்கள். யாரிடமிருந்து ஹதீதைப் பெற்றார்களோ அவரிடமிருந்து,நபியவர்களிடமிருந்து ஹதீதைச் செவியேற்ற ஸஹாபி வரையிலான அறிவிப்பாளர்கள் அனைவரும் நம்பிக்கையானவர்களாகவும், ஒருவரை ஒருவர் நேரில் சந்தித்து ஹதீதுகளை நேரடியாக பெற்றவர்களாகவும் இருக்க வேண்டும் எனக் கருதினார்கள். நம்பிக்கை என்பது
1. முஸ்லிமாக இருத்தல் வேண்டும்.
2. நீதமான தலைவராக இருக்க வேண்டும்.
3. பதிவும், நினைவாற்றலும் பூரணமாக இருக்க வேண்டும்.
4. தனது சைகுடனான உறவு அதிகமாக இருக்க வேண்டும்.
5. அறிவிப்பாளர் அவரை விட நம்பிக்கை யானவருக்கு முரண்படாமலிருக்க வேண்டும்.
6. அறிவிப்பாளர் எவரிடத்திலும் மறைமுகமான எக்குறையும் காணப்படக்கூடாது.
7. அறிவிப்பாளர் தனது ஷெய்கி்டமிருந்து கேட்டேன் (சமிஃது) அல்லது எமக்கு அறிவித்தார் (ஹத்ததனா)என்ற வார்த்தை மூலம்தான் ஷெய்கிடம் செவியேற்றதை உறுதிப்படுத்தல் வேண்டும்.
8. ஷெய்கிடமிருந்து ஹதீதை செவியேற்றதை வெளிப்படுத்தக் கூடிய இன்னாரிடமிருந்து அல்லது இன்னார் கூறினார் என்ற வார்த்தைகளையும் இமாமவர்கள் ஏற்றுள்ளார்கள்.ஆயினும் இன்னார் என்பவர் முதல்லஸாக குளறுபடியானவராக இருக்கக் கூடாது.
அறிவிப்பாளர்களுக்கிடையிலான சந்திப்பு அவசியம் என்ற நிபந்தனையை முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஏற்றுக் கொள்ளவில்லை. சமகாலத்தில் இருந்தார்கள் என்பதை உறுதிப்படுத்தினால் போதும் என்பது இமாம் முஸ்லிம் ரஹ்மத்துல்லாஹி அலைஹியின் கருத்தாகும்.
ஸஹீஹுல் புகாரி ஷரீபில் “முஅல்லக்“ ஹதீதுகள் அதிகமாகக் காணப்படுகின்றன. அறிவிப்பாளர்கள் முழுமையாகவோ அதிகமாகவோ அல்லது பகுதியாகவோ கூறப்படாத ஹதீதுகளை “முஅல்லக்“எனப்படும். ஸஹீஹுல் புகாரி ஷரீபில் ஹதீது முஅல்லக் இடம்பெற்றதற்கு பின்வரும் காரணங்களை இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகின்றார்கள்.
1. ஸனதுடன் ஏற்கனவே கூறப்படாததாக இருக்கலாம்.
2. ஹதீதைப் பெற்றவர் சந்தேகத்திற்குரியவராக இருக்கலாம்
3. தனது ஷெய்கிடமிருந்து அவர் நிபந்தனைக்குரிய விதத்தில் நேர்முகமாகக் கேட்காததாக இருக்கலாம்.
4. ஷெய்குடன் உரையாடும்போது கேட்டவையாக இருக்கலாம்
இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அதிகமான ஹதீதுகளை ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் குறிப்பிட்டிருக்கின்றார்கள். சில ஹதீதுகள் பதினாறு இடங்களில் கூட வருகின்றன. இவ்வாறு பல இடங்களில் வரும் ஹதீதுகளை வார்த்தைகளின், வித்தியாசத்தால் வந்ததே தவிர கருத்தினடிப்படையில் அல்ல. இவற்றை இரு விதத்தில் நோக்கலாம்.
1. ஸனதில் மேலதிகம்
2. மதனில் - மேலதிகம்
ஒரு ஹதீது பல இடங்களில் கூறப்படுவதற்கு சில காரணங்கள் உள்ளன. ஒரு அறிவிப்பாளரின் ஒரு ஹதீதை ஒரு இடத்தில் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி ஸஹி புகாரி ஷரீபில் குறிப்பிடவேயில்லை.
1. ஒரு ஹதீது இரு ஸஹாபாக்கள், அல்லது இதை விடக் கூடுதலானோர் அறிவி்க்கும் பட்சம் பல முறை இடம்பெறும்.
2. இரு தாபிஈன்கள் அல்லது இதை விடக் கூடுதலான தாபிஈன்கள் அறிவிக்கும்போது மேலதிகமாகக் கூறப்படும்.
3. தபஉத் தாபிஈன்களில் இருவர் அல்லது அதை விடக் கூடுதலானோர் அறிவிக்கும்போது பல இடங்களில் வரும்.
4. இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஒரு ஹதீதை பல ஆசான்களிடமிருந்து கேட்டிருந்தால் அதைப் பல இடங்களில் கூறியுள்ளார்கள்.
5. இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் ஆசிரியர்களின் ஆசிரியர்கள் பலராக இருந்தால் அதனைப் பல இடங்களில் பதித்துள்ளார்கள்.
ஒரு ஹதீது பலர் வழிகளில் அறிவிக்கப்படும்போது ஹதீது தரம் வலுவாகின்றது. அறிவிப்பாளர் பட்டியல் ஒருவர் மூலம் வருமாயின் அதனை ஙரீப் என்று முஹத்திதீன்கள் குறிப்பிடுவர். அதனால் அறிவிப்பாளர்களின் பட்டியல் பலதாக இருந்தால் இக்குறையிலிருந்து ஹதீது விடுபட்டுவிடும். ஹதீதின் வார்த்தைகளில் மாற்றம் காணப்படுமாயின் மாற்றத்திற்கு தக்க விதத்தில் பல இடங்களில் குறிப்பார்கள்.இதனால் ஹதீதின் முழுமையான கருத்துக்களைப் பெற முடியும். அறிவிப்பாளர்களின் வார்த்தையில் வேறுபாடும் கருத்தில் ஒற்றுமையும் காணப்படும் ஹதீதுகளையும் பல இடங்களில் குறிப்பிட்டுள்ளார்கள்.சில நேரம் ஒரு ஹதீது மற்ற ஹதீதுக்கு விளக்கமாக தப்ஸீராக ஆகிவிடும்.
புகாரி ஷரீபில் ஒரு ஹதீது பல்வேறு இடங்களில் மாறுபட்ட வார்த்தைகளுடன் இடம்பெற்றிருப்பதைக் காணலாம். இவ்வாறு வருவதில் பின்வரும் பயன்களைப் பெற முடியும்.
1. மாறுபட்ட தலைப்புக்கள் மூலம் ஆதாரங்களைப் பெற முடியும்.
2. ஒரு அறிவிப்பாளர் சிலவேளை ஹதீதை சுருக்கமாகவும் மற்றவர் விபரமாகவும் கூறி இருக்கலாம்.இதனால் ஹதீதின் வார்த்தைகள் முழுமையாகக் கிடைக்கும் வாய்ப்பைப் பெறுகின்றது.
3. ஒரு அறிவிப்பாளர் கூறும் வார்த்தைக்கு மாறுபாடான வேறு வார்த்தைகளை மற்றுமொரு அறிவிப்பாளர் கூறி இருப்பார். இவ்விருவரின் வார்த்தைகளை கூர்ந்து ஆராய்வோருக்கு தெளிவான, அதேநேரம் நோக்கத்திற்கு ஏற்ற பொருள் விரியக் கூடும்.
4. ஒரு ஹதீஸ் மற்ற ஹதீதுக்கு விளக்கமாக ஆகும்.
5. ஒரு ஹதீதை ஒரு அறிவிப்பாளர் முர்ஸலாகவும், இன்னுமொரு அறிவிப்பாளர் முத்தஸிலாகவும் கூறி இருப்பார். இதன் மூலம் குறித்த ஹதீஸ் முர்ஸல் அல்ல முத்தஸில்தான் என்பது உறுதியாகிவிடும்.
6. ஓர் அறிவிப்பாளர் மௌகூபான அதாவது ஸஹாபிவரை மட்டும் அறிவிப்பாளர் தொடரைக் கூறியிருப்பார். மற்றுமொரு அறிவிப்பாளர் தொடரை றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்லம் அவர்கள்வரை மர்பூஆக கூறியிருப்பார். ஒரு ஹதீது பல இடங்களில் மாறிமாறி வருவதால் இதன் பயனை அடைய முடிகின்றது.
7. ஒரு அறிவிப்பாளர் ஒரு ஹதீதை இன்னாரைத் தொட்டு என்று முஅன்அன் ஆக அறிவித்திருப்பார்.மற்றவர் ஹத்ததனா, அக்பர்னா, ஸமிஃத்து என்று கூறியிருப்பார். ஆதலால் முஅன்ஆக அறிவித்தவரின் அறிவிப்பில் தத்லீஸ் இருப்பதற்கான ஆபத்தை மேற்கண்ட இதர அறிவிப்புக்கள் நீக்கிவிடுகின்றன.
ஒரு ஹதீஸ் பல இடங்களில் மடங்கி மடங்கி வருவதால் மேற்கண்ட பன்னிரெண்டு பயன்கள் இருப்பதை அவதானிக்கலாம். இவற்றுள் ஐந்து ஸனதுடனும், ஏழு மதனிலும் பெறப்படுகின்றன. ஹதீதுகளை வாசிப்பவர் ஆழ்ந்து ஆராய்ந்தால் இதைவிடவும் அநேக பயன்களைக் கண்டுகொள்ள முடியும். புகாரி ஷரீபில் உள்ள ஹதீதுகளின் எண்ணிக்கையில் இமாம்கள் மத்தியில் ஒத்த கருத்துக் காணப்படவில்லை.ஹாபிழ் இப்னு ஸலாஹ் அவர்களின் கணிப்பின்படி மொத்தம் 7275 ஹதீதுகள் உள்ளன. மீண்டும் மீண்டும் வருபவைகளை நீக்கினால் 4000 ஹதீதுகள் உள்ளன.
அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களின் கணிப்பின்படி மொத்தம்7397 ஹதீதுகளாகும். இதில் முஅல்லகாத் 1321, முதாபிஅத் 344, மர்பூஆன ஹதீதுகள் 2633.
புகாரி ஷரீபில் வரும் ஹதீதுகளில் மிகவும் உயர்வானதற்கு துலாதிய்யத் என்று கூறப்படும்.இவ்வகையினது, ஹதீதுகளி்ல் இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்கும் றஸூலுல்லாஹி ஸல்லல்லாஹு அலைஹிவஸல்ல மவர்களுக்குமிடையில் மூன்று அறிவிப்பாளர்கள் மட்டுமே காணப்படுவர். இவ்வகையான ஹதீதுகளின் மொத்தம் 22 மட்டுமே! மீண்டும் மீண்டும் வருவதைத் தவிர்த்தால் 01 மட்டுமே!
புகாரி ஷரீப் ஓதி முடிக்கும்போது கேட்கப்படும் துஆ கபூலாகும். கஷ்டங்கள் அகலும். தேவைகள் நிறைவேறும். இதனை இமாம் கஸ்தலானி புகாரி ஷரீபிற்கு அன்னார் எழுதிய விரிவுரையின் முன்னுரையிலும், இமாம் அப்துல் ஹக் முஹத்திதுத் திஹ்லவி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அஷிஃஅத்துல் லம்ஆத்திலும், இமாம் முல்லா அலிகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹி மிர்காதிலும் குறிப்பிட்டுள்ளனர். மழை இல்லாது பஞ்சம் நிலவும் காலத்தில் புகாரி ஷரீப் ஓதப்படுமாயின் பஞ்சம் அகலும் என்று ஹாபிழ் இப்னு கதீர் குறிப்பிடுகின்றார். இமாம் புகாரி அவர்கள் துஆ அங்கீகரிக்கப்படும் நபரைச் சேர்ந்தவராக இருந்தார். புகாரி ஷரீப் ஓதுவோரின் தேவைகள் நிறைவேற வேண்டும் என ஏலவே துஆச் செய்துள்ளார்கள்.
புகாரி ஷரீபுக்கு கணக்கற்ற விரிவுரைகள் எழுதப்பட்டுள்ளன. கஷ்புல் ழுனூன் என்ற நூலில் ஐம்பது விரிவுரைகளின் நாமங்கள் பொறிக்கப்பட்டுள்ளன. அறபி அல்லாமல் உருது, பாரசீகம் போன்ற மொழிகளிலும் புகழ்பூத்த விரிவுரைகள் காணப்படுகின்றன. ஷெய்குல் ஹதீஸ் அல்லாமா ஷரீபுல் ஹக் அம்றுத் அவர்களின் கணிப்பின்படி உருது பாரசீகத்தில் மட்டும் 100க்கும் அதிகமான விரிவுரைகள் காணப்படுகின்றன.
அறபு மொழியில் பத்ஹுல் பாரி, உம்தத்துல் காரி, இர்ஷாத்துஸ்ஸாரி ஆகிய மூன்று விரிவுரைகள் மிகப் பிரபல்யமானவைகளாகும். இவற்றின் சிறப்பம்சங்களை சுருக்கமாக தருகின்றேன்.
01. பத்ஹுல் பாரி
இதன் ஆசிரியர் ஹாபிழ் அல்லாமா ஷிஹாபுத்தீன் அபுல் பழ்லு அஹ்மத் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி (வபாத் ஹிஜ்ரி 852) அவர்களாகும். இவர் கெய்ரோவில் ஹிஜ்ரி 773ஷஃபானில் பிறந்தார்கள். ஹிஜ்ரி 852 துல்ஹஜ் மாதத்தில் வபாத்தானார்கள். மாபெரும் முஹத்திஸ் இமாம் தைலமி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்களுக்குப் பக்கத்தி்ல் நல்லடக்கம் செய்யப் பட்டார்கள்.
ஹாபிழ் இமாம் இப்னு ஹஜர் அஸ்கலானி ரஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் பலரிடம் கல்வி கற்றுள்ளார்கள். ஆயினும் ஹாபிழ் ஸைனுதீன் இறாக்கி, ஹாபிழ் ஸிறாஜுத்தீன் புல்கீனி ரஹிமஹுமுல்லா ஆகிய இருவரிடமும் விஷேடமாகக் கற்றார்கள். இமாமவர்கள் பல்துறை சார்ந்த250இற்கு மேற்பட்ட நூற்களை எழுதியுள்ளார்கள்.
இமாமவர்கள் இருபது ஆண்டுகள் கெய்ரோவில் காழிகுழாத் நீதியரசர் பதவி வகித்துள்ளார்கள். புகாரி ஷரீபுக்கான மேற்படி நூலை ஹிஜ்ரி 817 இல் ஆரம்பித்து 842இல் நிறைவு செய்தார்கள். இந்நூல் மொத்தமாக 17 பாகங்களாக கொண்டிருந்தது. தற்போது குறைந்த எண்ணிக்கையில் சுருக்கப்பட்டுள்ளது.
இமாமவர்களின் இந்நூல் அறிவிப்பாளர் பற்றிய ஆய்வாளர்களுக்கு அரிய பொக்கிஷமாகும். புகாரி ஷரீபுக்கு சிறந்த விளக்கத்தினை இமாமவர்கள் கொடுத்திருப்பதாக அறிஞர்கள் திருப்தி வெளியிட்டுள்ளார்கள். கடினமான சொற்களுக்கு இலகுவான விளக்கம், முரண்பாடாகத் தோன்றும் ஹதீதுகளுக்கு பொருத்தம் காணும் விளக்கம், பாடங்களின் தலைப்பிற்கு நுட்பமான விளக்கம்,இமாம் புகாரியின் அறிவிப்பாளர்களின் குறை நிறை விளக்கம், இமாம் புகாரி அவர்களுக்கு எதிராக முன்வைக்கப்பட்ட தவறான குற்றச்சாட்டுகளுக்கு மறுப்பு, ஹதீதுக்கும் பாடத் தலைப்புக்குமிடையில் கருத்துப் பொருத்தம் காணல், சட்ட ஆய்வுகள், சுருக்கமாக வந்துள்ள ஹதீதுகளை இதர அறிவிப்புக்கள் மூலம் நிறைவாக்கல், தெளிவில்லாத அறிவிப்பாளர்களின் பெயர்களைத் தெளிவுபடுத்தல், வார்த்தைகளி்ன் சிக்கலை நீக்கல், அறிவிப்பாளர்கள் பற்றிய திறனாய்வுடன் கூறும் பாங்கு இந்நூலில் சிறப்பாகக் கையாளப்பட்டுள்ளது.
02. உம்தத்துல் காரி
இந்நூலின் ஆசிரியர் அல்லாமா பத்றுத்தீன் அபூ முஹம்மத் மஹ்மூத் இப்னு மூஸா ஐனி ஆகும். இவரின் தந்தை காழி ஷிஹாபுத்தீன் அஹ்மத் இப்னு காழி ஷறபுத்தீன் மூஸாபின் அஹ்மத் ஆவார். இவர் ஹலபை பிறப்பிடமாகக் கொண்டவராகும். ஹலபைத் துறந்து ஐன்நாப் என்ற இடத்தை வாழுமிடமாக்கிக் கொண்டனர். இது ஹலபிலிருந்து 3 மன்ஸில் தூரமாகும். இங்கு வந்தபின் அவ்வூர் காழிப் பதவி இவர் மீது சுமத்தப்பட்டது.
இங்குதான் அல்லாமா ஐனி அவர்கள் ஹிஜ்ரி 762 ரமழான் 17இல் பிறந்தார்கள். இந்த ஊரைத் தொடர்பாக்கி இவர்களை ஐனி என்று அழைக்கலாயினர். இவர்களும் ஹாபிழ் ஸைனுத்தீன் இறாக்கி, ஹாபிழ் ஸிறாஜுத்தீன் புல்கீனி ஆகியோரின் மாணவராவார்.
புகழ் பூத்த அறிஞர்கள் பலரிடம் கல்வி கற்ற இவர்கள் வாழ்நாள் பூராகவும் கெய்ரோவிலேயே காலம் கழித்தார்கள். ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்களின் சமகாலத்தவரான இவர்கள், அன்னார் வபாத்தாகி மூன்று ஆண்டுகள் கழித்து ஹிஜ்ரி 855 துல்ஹஜ் பிறை 4இல் வபாத்தானார்கள்.
ஹாபிழ் அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்களும், அல்லாமா ஐனி அவர்களும் இரண்டு மூன்று ஆண்டுகள் கால வித்தியாசத்தில் புகாரி ஷரீபுக்கு விளக்கம் எழுத ஆரம்பித்தனர். அல்லாமா ஐனி அவர்கள் ஹிஜ்ரி 821இல் தனது விரிவுரையை எழுத துவக்கி 26 ஆண்டுகளுக்குப் பி்ன் நிறைவு செய்தார்கள்.
அல்லாமா இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் வாரத்தில் ஒரு நாள் அதாவது சனிக்கிழமை தனது அனைத்து மாணவர்களையும் அழைத்து வாரம் பூராகவும் தான் எழுதி வைத்த விளக்கத்தை புர்ஹான் இப்னு அஹ்ழர் என்பவரிடம் கொடுத்து மாணவர்களிடம் வாசிக்கும்படி கூறுவார்கள். அனைவரும் செவிமடுத்துக் கேட்டபின் விவாதிப்பர். விவாதித்தபி்ன் யாவரும் பிரதிகள் எடுத்துக் கொள்வர். இதனால் இமாமவர்களின் நூல் முழுமைபெற்று வெளிவர முன்பே மக்களின் புழக்கத்திற்கு வந்து விட்டது.
அல்லாமா ஐனி அவர்கள் புர்ஹான் பின் அஹ்ழர் என்பவரிடம் அப்பிரதிகளை இரவலாகப் பெற்று பார்வையிட்டதன் பின் தனது நூலில் அதன் கருத்துக்களையும் சேர்த்திருப்பதுடன் தான் உடன்படாத இடங்களில் மறுப்பையும் நியாய உரையையும் தீட்டியுள்ளார்கள். ஐனியில், பத்ஹுல் பாரியில் வரும் அதே சொற்கள் அடங்கிய வசனங்கள் பரவலாக இடம்பெற்றிருப்பதினால் ஐனி பத்ஹுல் பாரியின் கொப்பி என்று சிலர் குறை கூறுவதுண்டு. ஆனால்,
உண்மையில் இமாம் ஐனி அவர்கள் பத்ஹுல் பாரியில் உடன்பாடான கருத்துக்களை வரைந்திருப்பதுடன் உடன்படாதவைகளில் மறுப்பையும் எழுதியுள்ளார்கள். சில இடங்களில் இமாம் இப்னு ஹஜர் அவர்களின் கருத்துக்களை விமர்சித்தும் எழுதியுள்ளார்கள்.
முதலில் பாடத்தை தெளிவுபடுத்துவார்கள். முன்பாடத்தின் தொடர்பை விளக்குவார்கள். பின் பாடத்தின்தலைப்பி்ன் நோக்கத்தை விளக்குவார்கள். பாடம் தொடர்பாக ஏதும் திருமறை வசனங்கள் அல்லது ஹதீதின்பகுதிகளை விளக்குவார்கள். ஹதீதின் மதன் (மூல வாக்கியப்) பகுதிகளை ஸனதுடன் விளக்குவார்கள். தொடர்ந்து அறிவிப்பாளர்கள் பற்றிய முக்கிய குறிப்புக்களை விளக்கமாகக் கூறுவார்கள்.றாவிகளின்பரம்பரை பற்றி தெளிவின்மை காணப்பட்டால் அதை தெளிவுபடுத்துவார்கள். பின்,
அறிவிப்பாளர் பட்டியலின் உள்ளே ஏதும் நுட்பங்கள், விஷேடங்கள் காணப்பட்டால் அது பற்றி விளக்குவார்கள். மேலும் குறித்த ஹதீஸ் புகாரி ஷரீபில் எங்கு எத்தனை இடங்களில் வந்துள்ளது என்ற விபரத்தைத் தருவார்கள். அத்துடன் குறித்த ஹதீஸ் ஸிஹாஹுஸ்ஸித்தாவில் எங்கு எந்த எந்த இடத்தில் இடம் பெற்றுள்ளது என்ற முழு விபரத்தையும் கூறுவார்கள்.
வார்த்தைகளிலுள்ள சிக்கலை அவிழ்ப்பார்கள். முக்கிய இடங்களில் இலக்கண விளக்கம் கூறுவார்கள்.தொடர்ந்து அணி இலக்கிய பஸாஹத், பலாஹத் விளக்கம் பகர்வார்கள். இதன் பின்பு ஹதீதின் முழு விளக்கத்தையும் பூரணமாகக் கூறுவார்கள். தான் சரிகாணும் கருத்தை சுருக்கி யுக்தி ஆதாரங்களால் நிறுவுவார்கள். பின் ஹதீதிலிருந்து பெறப்படும் சட்டங்களைப் பட்டியலிடுவார்கள்.
மேற்கண்ட இரு விரிவுரைகளும் மக்கள் மத்தியில் அதிக வரவேற்பை பெற்றுள்ளன. அவற்றில் காணப்படும் விளக்கங்கள் புகாரி ஷரீபை பூரணமாக விளக்குவதற்கு சிறந்த ஆதாரங்கள் என்று அறிஞர்கள் இரண்டாம் கருத்தில்லாமல் கூறியுள்ளனர்.
நீ்ண்ட காலமாக புகாரி ஷரீபுக்கு விளக்கம் எழுதப்படாத குறையை இவ்விருவரும் நிறைவேற்றியுள்ளதாக அல்லாமா இப்னு கல்தூன் கூறியிருப்பது நோக்கத்தக்கதாகும்.
இர்ஸாதுஸ்ஸாரி (கஸ்தலானி)
அல்லாமா ஷிஹாபுத்தீன் அஹ்மத் இப்னு முஹம்மது கதீப் கஸ்தலானி மிஸ்ரி அவர்கள் இதன் ஆசிரியராவார். ஹதீதின் பொருளைக் கூறும் சுருக்கமான விரிவுரை நூலாகும். சிக்கலான வார்த்தைகள் வருமிடமெங்கும் தெளிவு கொடுக்கப்பட்டிருப்பது இதன் சிறப்பம்சமாகும். இதன் உள்ளடக்கம் அதிகமாக பத்ஹுல் பாரி, உம்தத்துல் காரி ஆகிய இரு நூற்களிலிருந்தும் எடுக்கப்பட்டுள்ளன.
மத்ரஸாவி்ல் கற்கும் மாணவர்களுக்கும் ஆசிரியர்களுக்கும் இந்நூல் மிக்க பயன் தருபவையாகும்.மத்ரஸாக்களில் அதிகம் வாசிக்கப்படும் இந்நூல் படிப்பதற்கும் விளங்குவதற்கும் மிக இலகுவாக அமைந்துள்ளது. கெய்ரோவில் வாழ்ந்த ஹாபிழ் ஜலாலுத்தீன் ஸுயூத்தி றஹ்மத்துல்லாஹி அலைஹியின் சமகாலத்தவரான இவர்கள் ஹிஜ்ரி 923இல் வபாத்தானார்கள். வெள்ளிக் கிழமை ஜும்ஆவுக்குப் பின் ஜாமிஉல் அஸ்கரில் ஜனாஸா தொழுகை நடந்த பின் அல்லாமா ஐனி அவர்களி்ன் மத்ரஸாவில் நல்லடக்கம் செய்யப்பட்டார்கள்.
ஸஹீஹ் முஸ்லிம் ஒரு பார்வை
சஹிஹான ஆறு கிரந்தங்களுள் இரண்டாவது இடத்திலிருப்பது சஹி முஸ்லிம் என்ற கிரந்தமாகும். இமாம் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆழ்ந்த முயற்சிக்குப் பின் இத்தொகுப்பை செய்து முடித்தார்கள். நூலின் தொகுப்பு, ஒழுங்கின் அழகு என்ற அடிப்படையில் நோக்கி்னால் சஹி முஸ்லிம் கிரந்தம் சஹீஹுல் புகாரியைவிட உயர்ந்து காணப்படுகின்றது. ஆரம்ப காலம்தொட்டு இது நாள்வரை இந்நூல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதே இந்நூலின் சிறப்புக்குரிய அங்கீகாரமாகும்.
சஹிஹான ஆறு கிரந்தங்களுள் இரண்டாவது இடத்திலிருப்பது சஹி முஸ்லிம் என்ற கிரந்தமாகும். இமாம் முஸ்லிம் இப்னு ஹஜ்ஜாஜ் றஹ்மத்துல்லாஹி அலைஹி அவர்கள் ஆழ்ந்த முயற்சிக்குப் பின் இத்தொகுப்பை செய்து முடித்தார்கள். நூலின் தொகுப்பு, ஒழுங்கின் அழகு என்ற அடிப்படையில் நோக்கி்னால் சஹி முஸ்லிம் கிரந்தம் சஹீஹுல் புகாரியைவிட உயர்ந்து காணப்படுகின்றது. ஆரம்ப காலம்தொட்டு இது நாள்வரை இந்நூல் மக்கள் மத்தியில் பெரும் வரவேற்பைப் பெற்றிருப்பதே இந்நூலின் சிறப்புக்குரிய அங்கீகாரமாகும்.
ஹதீதுத் துறையில் ஆழ்ந்த புலமைபெற்ற பலர் சஹி முஸ்லிம் தொகுப்பை வெகுவாகப் பாராட்டியுள்ளார்கள். புகாரி ஷரீபைவிட இதற்கு முக்கியத்துவம் கொடுத்துமிருக்கின்றார்கள். இமாம் அபூஅலி ஹாகிம் நைஸாபூரி, ஹாபிழ் இமாம் அப்துர் ரஹ்மான் நஸாஈ அவர்கள் புகாரி ஷரீபை விட சஹி முஸ்லிம் உயர்ந்தது என்று கூறுகின்றார்கள்.
இமாம் தாரகுத்னியின் சமகாலத்தவரான இமாம் முஸ்லிம் பின் காஸிம் குர்துபி ரஹ்மத்துல்லாஹி அலைஹி கூறுகையில், இமாம் முஸ்லிமின் சஹி முஸ்லிமை ஒத்த ஒரு தொகுப்பை எவராலும் ஆக்க முடியாது என்கின்றார்கள்.
சஹி முஸ்லிம் தொகுப்பை கோர்வை செய்வதற்கான காரணத்தை இமாமவர்கள் பின்வருமாறு கூறுகின்றார்கள்.
மீண்டும், மீண்டும் மடங்கிவரும் ஹதீதுகள் இல்லாத சஹீஹான ஹதீதுகளின் தொகுப்பு ஒன்றைக் கோர்வை செய்யுமாறு தனது மாணவர்களில் சிலர் எம்மிடம் வேண்டினர். அவர்கள் வேண்டுதலை நான் ஏற்று மூன்று இலட்சம் ஹதீதுகளில் இருந்து பொறுக்கி எடுத்து எனது சஹீஹில் பதிவு செய்தேன்.
ஹதீதுகளை அறிவிப்புச் செய்தவர்களிடம் நேரில் கேட்ட ஹதீதுகளைத்தான் சஹீ முஸ்லிமில் இடம்பெறச் செய்தார்கள். ஆழ்ந்த ஆய்வுடன் செய்த தொகுப்பை மேலும் உறுதி செய்துகொள்வதற்காக அக்காலத்தில் அறிவிப்பாளர்களின் குறை நிறைகளை நன்கு அறிந்தவரான ஹாபிழ் “அபூ ஸுர்ஆ“ ரழியல்லாஹு அன்ஹுவின் பார்வைக்குட்படுத்தினார்கள்.
இமாமவர்கள் குறைகண்ட அறிவிப்புக்களை அப்புறப்படுத்தினார்கள், இந்த கடின முயற்சி பதினைந்து வருட காலம்வரை நீடித்தது. 15 வருடத்தின் கடின முயற்சியின்பின் மலர்ந்ததுதான் சஹீ முஸ்லிமாகும்.
ஹாஜி கலீபா உள்ளிட்ட வரலாற்று ஆசிரியர்களில் சிலர் சஹீ முஸ்லிம் தொகுப்பிற்கு அல்ஜாமிஉஸ் ஸஹீஹ் என்று நாமம் சூட்டியதை ஆட்சேபிக்கி்ன்றனர். முஸ்லிம் தொகுப்பில் தப்ஸீர் பகுதி சொற்பமான ஹதீதுகளைக் கொண்டிருப்பதே ஆட்சேபனைக்கான காரணமாகும்.
ஜாமிஉ என்று கூறப்படுவதற்கு தப்ஸீர் பகுதியும் நிறைவாய் இருக்க வேண்டும். ஆயினும், இமாம் ஸுப்யானுத் தௌரி, இமாம் ஸுப்யான் இப்னு உயைய்னா ரழியல்லாஹு அன்ஹுமா ஆகிய இருவரின் தொகுப்புக்களிலும் தப்ஸீர் பகுதியில் சொற்பளவு ஹதீதுகளே இடம்பெற்றுள்ளபோதும் அத்தொகுப்புக்களுக்கு ஜாமிஉஸ் சஹீஹ் என்றே பெயர் சூட்டப்பட்டுள்ளது. அதனால், சஹீ முஸ்லிமுக்கு அல்ஜாமிஉஸ் சஹீஹ் என்பதில் எதுவித குற்றமும் கிடையாது.
தப்ஸீர் பகுதியில் இடம்பெறக் கூடிய அதிகமான ஹதீதுகள் சஹீ முஸ்லிமின் ஆரம்பத்தில் இடம் பெற்றுள்ளன. தப்ஸீர் பகுதியில் ஹதீதுகள் குறைவாக இடம்பெற்றிருப்பதற்கு இதுவே பிரதான காரணமாகும். முடிந்தளவு முன் கூறிய ஹதீதுகளை மீண்டும் கொண்டு வருவதில்லை என்ற இமாம் முஸ்லிமின் நிபந்தனையே இதற்குக் காரணமாகும்.
இமாம் முஸ்லிம் தனது தொகுப்பை ஒழுங்குபடுத்துவதில் அதி உச்ச பேணுதலைக் கடைப்பிடித்துள்ளார்கள். இமாம் இப்னு ஷிஹாபுத்தின் ஸுஹ்ரி, இமாம் மாலிக், இமாம் புகாரி ரஹ்மத்துல்லாஹி அலைஹிம் போன்றோர், ஹத்ததனா, அக்பர்னா, என்ற சொற்களுக்கிடையில் பெரியவேறுபாட்டைக் காண்பதில்லை. ஆனால், இப்னு ஜுறைஜ், இமாம் அவ்ஸாஈ, இமாம் ஷாபிஈ, இமாம் அஹ்மது இப்னு ஹன்பல், யஹ்யா இப்னு யஹ்யா, அப்துல்லாஹ் இப்னு முபாறக், உள்ளிட்ட முஹத்திதுகள் இச்சொற்களுக்கிடையில் வேற்றுமை காணுகின்றனர்.
ஆசிரியர் ஹதீதை வாசிக்க, மாணவர் செவியேற்றால் ஹத்ததனா என்றும், மாணவர் ஹதீதை வாசிக்க ஆசிரியர் செவியேற்றால் அக்பர்னா என்றும் கூறுவர். அதிகமான முஹத்திதுகள் அக்பர்னா, ஹத்ததனா என்ற சொற்களுக்கு மத்தியில் வேறுபாடு காண்பதில்லை. இதனால், பேணுதலின் அடிப்படையில் இமாம் முஸ்லிம் இச்சொற்களை வேறுபடுத்தியே கூறியுள்ளார்கள்.
அறிவிப்பாளர்களி்ன் பெயர்களைப் பதிவதிலும் இமாம் முஸ்லிம் அவர்கள் அதிக பேணுதலை வெளிப்படுத்தியுள்ளார்கள். அறிவிப்பாளர்களின் மூலப் பிரதிகளில் வமிசம் குறிப்பிடாமலும் பெயர் மட்டும் குறிப்பிடப்பட்டிருந்தால் யார் அவர் என்று குழப்பம் வர வாய்ப்புண்டு. அதனை நீக்கும் வகையில் பெயரைக் குறிப்பிடுவார்கள். உதாரணமாக,
ஆசிரியர் சுலைமான் என்பவர் யஹ்யா என்பவர் மூலம் எமக்கு அறிவித்தார் என்று கூறியதில் சுலைமான் என்பவரும், யஹ்யா என்பவரும் யார்? என்று புரிவதில் குழப்பம் உண்டு. இதனைத் தவிர்க்கும் வகையில் சுலைமான் அதாவது பிலாலி்ன் மகன், யஹ்யா அதாவது அவர் சஙீதீன் மகன் என்று குறிப்பிடுவார்கள். இதனால், அறிவிப்பாளர் பட்டியலை வாசிப்போர் குழப்பம் அடைய வாய்ப்பில்லாமல் போய்விடுகின்றது.
இதுபோன்று அறிவிப்பாளரின் பண்புகள், புனைப் பெயர்கள், பட்டப் பெயர், வமிசம் உள்ளிட்டவைகளில் குழப்பம் ஏற்படாதிருக்கவும் அதனையும் தேவைக்கேற்ற வகையில் விளக்கி கூறுவார்கள். ஏதாவது ஒரு அறிவிப்பாளர் பட்டியலில் மறைமுகமான சிறு குறை இருப்பினும் அதனையும் வெளிப்படுத்துவார்கள்.
அறிவிப்பாளர் பட்டியல் நபியவர்கள்வரை சேர்ந்திருந்தால் அதனையும் அல்லது நேராக ஒரு தாபியீ அறிவித்தால் அதனையும் விளக்குவார்கள். அத்துடன் மதனில் கூடுதல் குறைவு காணப்படின் அதனையும் குறிப்பிடுவார்கள்.
ஹதீதின் வார்த்தைகளில் ஏதும் முரண்பாடுகள் காணப்படின், அப்படியான அனைத்து ஹதீதுகளையும் குறிப்பிடுவார்கள். இவையனைத்தும் சஹீ முஸ்லிமின் சிறப்பம்சங்களாகும். சஹீ முஸ்லிமின் இத்தனிச் சிறப்புக்கள் சஹீஹுல் புகாரியில் காணப்படவில்லை.
ஒரு ஹதீஸ் பல அறிவிப்பாளர் பட்டியலுடன் வருமாயின் அவை அனைத்தையும் ஒரே பார்வையில் ஒரே இடத்தில் குறிப்பிடுவார்கள். பாடத்திற்கேற்றவாறு பல்வேறு இடங்களில் பிரித்து எழுத மாட்டார்கள். ஹதீதின் கருத்தையோ, சுருக்கியோ கூற மாட்டார்கள். ஹதீதுகளுடன் ஸஹாபாக்கள், தாபியீன்களின் கூற்றுக்களை கலக்க மாட்டார்கள்.
இமாம் முஸ்லிம் தனது ஜாமிஉ சஹீஹில் இடம்பெறும் ஹதீதுகளுக்கான அறிவிப்பாளர்கள் பின்வரும் தகைமையைப் பெற்றிருக்க வேண்டும் என்று நிபந்தனை விதித்துள்ளார்கள்.
1. அறிவிப்பாளர் - முஸ்லிமாக இருக்க வேண்டும்
2. உறுதிமிக்க நம்பிக்கையாளராக இருக்க வேண்டும்.
3. அறிவிப்பாளர் விடுபடாமல் நபியவர்கள் வரை சேர்ந்திருக்க வேண்டும்.
4. குறைகள் இருக்கக் கூடாது.
இமாம் முஸ்லிம் அவர்களிடத்தில் அறிவிப்பாளரின் உறுதித் தன்மை என்பது முதற்படித் தரத்தில் அல்லது இரண்டாவது படித்தரத்தில் இருக்க வேண்டும். முதற் படித் தரம் என்பது, ஹதீதின் பதிவும்,நம்பிக்கையின் உறுதித் தன்மையும், பூரணமாக இருக்க வேண்டும். அத்துடன் ஷெய்குடன் அதிக உறவும் இருக்க வேண்டும்.
பதிவு பூரணமாகவும் ஷெய்கின் உறவு குறைவாகவுமிருப்பின் அவர் இரண்டாம் நிலையில் இருப்பார். பதிவில் குறைபாடும், ஷெய்கின் உறவு அதிகமிருப்பின் அவர் மூன்றாம் நிலையிலிருப்பார்.
Very well
ReplyDeleteமுன்னாள் முதல்வர் கமாலுதீன் என்று போட வேண்டும். முன்னால் என்று போடக்கூடாது
ReplyDelete